அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் தனியார் தங்கும் விடுதிகள் அதிகமாக உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம், மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கலெக்டர் சமீரன் அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் விடுதிகளை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆய்வு நடத்த உத்தரவிட்டார் .

ஈச்சனாரி பகுதியிலுள்ள காமதேனு நகரில் ஏழு தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் தங்க வைக்கப்பட்டு இருப்பதும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சான்று இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

சான்றிதழ இல்லாதவர்களை தங்க வைத்தால் தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்படும் என்று மதுக்கரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி எச்சரித்தார்.

ஆய்வுப் பணியின் போது சீராபாளையம் தலைவர் கணேசன், கவுன்சிலர் ஆறுச்சாமி கூறுகையில்: அனைத்து தனியார் மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள் வேலைக்கு செல்வோர் தங்கும் விடுதிகள் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மீறப்படுகிறதா என்பது குறித்து தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விடுதியிலும் 20 முதல் 40 பேர் வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தவிர மற்றவர்களை விடுதியை காலி செய்யவும் விடுதி உரிமையாளருக்கு அறியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.