கோவையில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கோவையில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் கோவையில் பருவமழை தாமதமாகத் தொடங்கியது.

வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. நகர்ப்பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருந்தது. இந்த நிலையில் கோவையில் வருகிற 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:

கோவையில் இன்று முதல் வருகிற 24ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வருகிற 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மாவட்டத்தில் 15 கிலோ மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழையை பயன்படுத்தி சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட நாற்றங்கால் அமைக்கலாம். என்றார்.