கொரோனா நோயாளிகளிடம் அதிகரிக்கும் கருவிழிப்படல அழற்சி –  அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

கருவிழிப்படல பாதிப்புள்ள நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 10-15 சிகிச்சைக்காக வருவதகவும், ஒரு மாதத்தில் ஏறக்குறைய 5 புதிய நோயாளிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கோவை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் கண் சிகிச்சை நிபுணர்களான டாக்டர். ஜி. ஆதித்யா மற்றும் டாக்டர். ஜெயஶ்ரீ அருணாபிரகாஷ் கூறினர்.

“கோவிட் – 19 தொற்றால் கண்களில் ஏற்படும் வெளிப்படுதல்கள்” என்ற தலைப்பு மீது மெய்நிகர் முறையில் ஊடகவியலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆதித்யா, 12 வயதிலிருந்து, 65 வயது வரை அனைத்து வயது பிரிவுகளிலும் கருவிழிப்படல அழற்சி நோயாளிகள் இருக்கின்றனர் என கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “கோவையில் கோவிட் – 19-ன் முதல் மற்றும் இரண்டாம் அலை ஆகிய இரு காலஅளவுகளின் போதும் கருவிழிப்படல அழற்சி நேர்வுகள் இருந்திருக்கின்றன. ஆனால், இரண்டாவது அலை காலத்தின்போது அதிக எண்ணிக்கையில் பாதிப்பு நேர்வுகளை பார்க்கிறோம் என்றார்.

டாக்டர். ஆதித்யா மேலும் பேசுகையில், “கருவிழிப்படல அழற்சியின் புதிய நேர்வுகளை கோவிட் – 19 தொற்றோடு நேரடியாகத் தொடர்புபடுத்த இயலுமா அல்லது அவைகள் வெறுமனே ஒரு சேர்க்கை மட்டுமா என்பதை தீர்மானிப்பதற்கு நீண்டகால அளவிற்கு மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வும், அதிக நோயாளிகளும் நமக்குத் தேவைப்படும்,” என்று குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனையின் கண்சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜெயஶ்ரீ அருணப்பிரகாஷ் பேசுகையில், தொற்று இருக்கும்போது அல்லது தொற்று பாதிப்பிற்குப் பிறகு கண் சார்ந்த பிரச்சனைகள் ஏதாவது வடிவத்தில் உருவாவதற்கான சாத்தியங்கள் கணிசமாக இருக்கின்றன.

கண்சிவத்தல், கண்வலி, வெளிச்சத்தைப் பார்க்க கூசுதல் மற்றும் கண் புண்கள் ஆகியவை ஏறக்குறைய 10% கோவிட் – 19 நோயாளிகளிடம் பொதுவான அம்சங்களாக இருக்கின்றன என்று கூறினார். ஆனால், கோவிட் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளில் சிலர், அவர்கள் மீண்ட காலத்திலிருந்து சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இத்தகைய கண் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தீவிரமான வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கான இடர்வாய்ப்பு, தீவிர தொற்றுகளிலிருந்து மீண்டிருக்கின்ற மற்றும் மருத்துவமனைகளில் நீண்டநாட்கள் தங்கியிருந்த நோயாளிகள் மத்தியில் குறிப்பாக அதிகமாக இருக்கிறது.

கண் அழற்சி, கருப்பு பூஞ்சை, கண்ணில் அக்கி அம்மை மற்றும் கருவிழிப்படல அழற்சி ஆகியவற்றிற்கும் கூடுதலாக கோவிட் – 19 தொற்றானது, பார்வை நரம்பை சேதப்படுத்துகின்ற வீக்கத்தை விளைவிக்கக்கூடும். கருப்பு பூஞ்சை என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற முக்கோர்மைகோசிஸ், மூக்கடைப்பையும், கருப்பான திரவ வெளியேற்றத்தையும், கண்களைச் சுற்றி வீக்கத்தையும், மோசமான நாற்றத்தையும், மங்கலான அல்லது இரட்டைப் பார்வை நிலையையும், பற்கள் மற்றும் மேல் அன்னத்தை சேதப்படுத்துவதையும் விளைவிக்கும்.

கோவிட் தொற்றிலிருந்து மீண்டதற்குப் பிறகு நோயாளிகள், அவர்களாகவே முன்வந்து கண் மருத்துவரை சந்தித்து, கண்களை முறைப்படி பரிசோதனை செய்துகொள்வது இன்றியமையாதது,” என்று டாக்டர் ஜெயஶ்ரீ கூறினார்.