மக்களைத் தேடி மருத்துவ திட்டம் துவக்கம்

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (05.08.2021) துவக்கி வைத்தார்.

இதன் மூலமாக தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றுக்கு தினசரி மாத்திரை எடுத்துக்கொள்ளும் நோயளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 75 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகள் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெற்று வருகின்றனர் .

தற்போது, கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று மருந்துகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ள கூடிய வாய்ப்பும் உள்ளது.

இந்த திட்டத்தின்படி, மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு மாதாந்திர மருந்துகள் பெறுபவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படும்.
இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர்.

நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும், ஊரகப் பகுதியில் ஆனைமலை வட்டாரம், ஆழியாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் வாகனங்களை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இந்த வாகனங்களில் நோயாளிக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். அதனுடன் எந்தெந்த மருந்துகளை எந்த வேளையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிக்காட்டி அட்டையும் வைக்கப்பட்டிருக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்து மீண்டும் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .