இவர்கள் வழிகாட்டிகளா..?

பொதுவாகவே படித்தவர்கள் என்றால் சமூகத்தில் ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஒருவரின் அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக படிப்பு இன்னும் கருதப்படுகிறது. படித்துவிட்டு வேலைக்கு போகிறார்களா, அறிவுத்திறன் உள்ளதா என்பதைத் தாண்டி அவர்களின் படிப்பு கொண்டாடப்படுகிறது. அதற்குக்காரணம் அவர்கள் படித்துள்ள படிப்பு தொடர்பான அறிவு அல்ல. அவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர்கள் என்ற எண்ணம் வெகுகாலமாக சமூகத்தில் நிலவி வருகிறது.

அலெக்சாண்டரின் தந்தை மன்னன் பிலிப், தனது குரு அரிஸ்டாட்டிலிடம் தனது மகனைக் கூட்டிச்சென்று ஒப்படைத்ததும் அதற்காகத்தான். ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடித்தில் தனது குழந்தையை ஒரு நல்ல அறிவுள்ள மனிதனாக வளர வழிகாட்டும்படி சொன்னதும் அதற்குத்தான். இந்தியாவிலும் குருகுலம் என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் போதிப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் நடந்து வந்தது.

தாய், தந்தை கண்டிக்க முடியாத குழந்தைகளைக்கூட ஆசிரியர் கண்டிப்பார். ஏமாற்றினால் பிரம்பால்கூட அடிப்பார். அதற்குக்காரணம் அவரின் ஒழுக்கம், மரியாதை, மதிப்புதான் காரணம். ஆனால் சில ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்கள் அந்த மதிப்பையும், மரியாதையையும் குலைக்கும் வகையில் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவரான டாக்டர் மு.அனந்த கிருஷ்ணன், நாட்டின் உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலையைக் குறித்து வேதனையுடன், ‘இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதில் பல தவறுகள் நடக்கின்றன. துணைவேந்தர் பதவி தொடர்பாக விலை நிர்ணயிக்கப்பட்டு பணம் விளையாடுகிறது. பல நிலைகளிலும் உள்ளவர்களுக்கு இந்த முறைகேட்டில் பங்கு உண்டு. ஒரு பாலம் கட்டுவதில் தவறு ஏற்பட்டால் சில பேர் இறந்து போக வாய்ப்புண்டு. அதையே அனுமதிக்கக்கூடாத நிலையில், எதிர்கால சமுதாயத்தை உருவாக்கி வழிநடத்தி, பாதுகாக்கக்கூடிய உயர்கல்வியின் நிலை இவ்வளவு கேவலமாக இருப்பது வருத்தத்துக்கு உரியது’ என்று குறிப்பிட்டார்.

அது இன்று நம் கண் முன்னே நடந்திருக்கிறது; அல்லது வெளியே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பல பேராசிரியர்கள் பணம் கொடுத்து நியமனம் செய்யப்பட்டதாகவும் அவருக்கு இந்த திருட்டுத்தனத்தில் இன்னும் சில பேராசிரியர்களும் உடந்தை எனவும் செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பாக கோவை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும்கூட இவ்வாறான துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணைகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இவை எல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல. இன்னும் எத்தனையோ பேர்களின் இல்லத்தில் ஒரு போட்டோ உண்டு. ஒரு கருப்பு கவுனை மாட்டிக்கொண்டு, பட்டம் பெற்று நிற்கும் காட்சி. பலர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பார்கள். ஒரு வீட்டில் உள்ள குழந்தை படித்து பட்டம் வாங்கும்போது அந்த பட்டமளிப்பு விழாவுக்குச் சென்று பெற்றோர் ஆனந்தக்கண்ணீர் சிந்தும் காட்சியை இன்றும்கூட காண முடியும்.

இவ்வாறு மதிப்பும், மரியாதையும், ஒழுக்கமும் நிறைந்த ஒரு துறையில் நடக்கும் அவலங்கள் அதிர வைக்கின்றன. இதற்குக் காரணம் யார்? அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? கல்வித்துறையா? கல்வியாளர்களா? ஆசிரியப் பெருமக்களா? அல்லது கூட்டுச்சதியா? இவர்களை நம்பி நமது குழந்தைகளின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத¢தை எப்படி ஒப்படைப்பது? இதை யார் தட்டிக்கேட்பது? மற்ற பல வழக்குகளைப் போலவே இதுவும் நீர்த்துப் போய் விடுமா?

ஏற்கெனவே பல அற்புதமான துணைவேந்தர்கள் தங்கள் பதவிகளை அலங்கரித்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. அந்த பெருமையை இவ்வாறு கேவலப்படுத்திவிடக் கூடாது. இதை மற்ற துறைகளைப்போல எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு முடிவு காண வேண்டும். இல்லை என்றால், இதனால் ஏற்படும் தாக்கம் நமது மொத்த சமுதாயத்தையும் அழித்து விடும். இந்தியாவில் இன்னும் பல நல்ல பல்கலைக்கழகங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அவற்றைப்போல நமது பல்கலைக்கழகங்களும் மாற வேண்டும்.

‘‘படிப்பு வளருது, பாவம் தொலையுது’’ என்று மகாகவி பாரதி கூறுவார். காரணம், இந்த சமூகத்தின் கேடுகளைப் போக்க, அறியாமை இருளை விரட்ட கல்வியை விட, படிப்பை விட ஒரு பெரிய கருவி இல்லை. அதனால்தான் படித்தவருக்கு அவ்வளவு மரியாதையை சமுதாயம் தருகிறது. கற்பவை கற்றபின், அதற்குத் தக நிற்காத அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே பாரதி ஒரு வார்த்தை சொல்கிறார்.

படித்தவன் சூதும்,  பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான் என்பார் பாரதி.

இதை பதவிக்கு வரும் ஆட்சியாளர் தொடங்கி, எப்படியாவது முன்னேற வேண்டும் என்று லஞ்ச லாவண்யங்களுக்கு ஆட்படும் ஆசிரியர்கள் வரை திருந்த வேண்டும். இளைய சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய உயர்கல்வித்துறையில் இருப்பவர்களே இப்படி நடந்தால் வேறு யார் வழிகாட்ட முடியும்?

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால்? இப்படிப்பட்ட நிகழ்வுகள் கண்டனத்துக்கும் கடுமையான தண்டனைக்கும் உரியவை. இத்தகைய குற்றம் செய்பவர்களை வள்ளுவர் முட்டாள்களுக்கு எல்லாம் முட்டாள் என்று கூறுகிறார்.

ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்

ஆனால் இவர்கள் வெறும் பேதை, முட்டாள்கள் மட்டும் அல்ல; முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள். இவர்களிடம் விசாரணை செய்து உண்மையைக் கண்டறிந்து தகுந்த தண்டணையை வழங்குவதோடு இனி மேற்கொண்டு எவரும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடாவண்ணமும் சட்டமும் சமூகமும் தங்கள் கடமையை சரிவர செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட களைகளைக் களையும் வரை மாதா, பிதா மட்டும்தான் சமுதாயத்தில் தெய்வம்; குரு அல்ல.