‘மொழிமாற்று நாடகங்களால் தமிழ் நடிகர்கள் பாதிப்பு’

உலகம் ஒரு நாடக மேடை. அதில் ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள். அந்த நாடக மேடையில் பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், ஒரு சிலரே தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றனர். இதில் நிழல் நாடக மேடையான சினிமாவில், ஒரு நடிகனுக்குத் தேவையான விஷயம், மக்களை ஈர்க்கும் வகையில் நடிப்பது. ஒரு கதைக்கு நம்மால் எவ்வளவு உயிரோட்டம் கொடுக்க முடியும் என்று தன்னை எல்லா விதத்திலும் தயார்படுத்திக் கொண்டு நடிப்பவர்கள் ஒருசிலரே. அவர்களில், தொலைக்காட்சி, நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீ அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.

‘என்னைப் பற்றி சொல்வதற்கு முன்பு என் தாத்தாவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். எம்ஜிஆர் படங்களுக்கு என் தாத்தா தயாரிப்பாளராக இருந்தவர். அதனால் சினிமா எனக்கு அத்துப்படியாக இருக்கிறது. கடுமையான உழைப்பு ஒன்று மட்டுமே நம்மை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கினேன். நான் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே உதவி இயக்குநராகவும், இன்னும் பல வேலைகள் செய்தும் சினிமாத் துறை எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் தயார்படுத்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தலையணைப் பூக்கள்’, ‘தேவதையைக் கண்டேன்’ போன்ற நாடகத்தில் நடித்து வருகிறேன். ஒரு சில திரைப்படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு அமைந்து வருகிறது. அது விரைவில் என்னை நீங்கள் திரையில் பார்க்கும்பொழுது தெரியும். ‘ரங்கூன்’ படத்தில் என் கதாபாத்திரத்தைப் பார்த்து பலர் என்னை பாராட்டினர். தலையணை பூக்கள் நாடகத்தைப் பார்த்த பிறகு பல ரசிகர்கள் நான் பேசும் சென்னை பாஷைக்கு பாராட்டும் தெரிவிக்கும்பொழுது சந்தோஷமாக இருந்தது.

சென்னை பாஷை பேசி நடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்காக என்னை பலவாறு தயார்ப்படுத்தி கொண்டு நடித்தேன். ஒரு நடிகனுக்கு அடையாளம் என்பது அவசியம். அது உழைப்பால் மட்டுமே சாத்தியம். தமிழ் சினிமாவில் பிரச்னைகள் பல இருந்தாலும் , சின்னத்திரையை நாம் சிந்தித்து பார்ப்பது கிடையாது. மொழிமாற்றம் செய்யப்பட்ட நாடகங்கள் வரும்பொழுது, ரசிகர்கள் அதனை விரும்பிப் பார்க்கிறார்கள். இது வரவேற்கக்கூடிய ஒன்றுதான். அதே சமயத்தில், நம் தமிழ் நாடக நடிகர்களின் திறமை காணாமல் போகும் சூழல் இங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பது எனது கருத்து.

எனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும். நான் தொய்வாக இருக்கும்பொழுது அவரின் பாடல்களைக் கேட்டால் போதும், எனக்குள் ஒரு புது சக்தி பிறப்பதை அவ்வப்போது உணர்கிறேன். நடிகர் விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடிக்கும்பொழுது, அவர் எந்தவித பந்தா இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது. நான் மனதில் நினைப்பதை உடனே சொல்லி விடுவேன். அதனால்கூட பலருக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். என் மனைவி சமித்தா, பாண்டவர் பூமி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அவர்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. என் காதலை அவரிடம் பரிமாறினேன். பிறகு திருமணத்தில் இணைந்தோம். என் நடிப்பில் உள்ள நிறை குறைகளை சரி செய்யக்கூடிய ஒரே நபர் அவர் மட்டும்தான்.

எங்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறாள். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக நகர்கிறது. வரும் காலங்களில் என் நடிப்பைப் பாராட்டி, நான் அடுத்த கட்டத்துக்கு போக தமிழ் ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும்’.

— பாண்டியராஜ்