2024 மக்களவைத் தேர்தல் மோடிக்கு மாற்று யார்?

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான, மாற்றான பிரதமர் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத் தொடங்கியுள்ளது.
தேசிய அளவில் தேர்தல் வியூகம் அமைப்பதில் பிரசாந்த் கிஷோர் பிரபலமாக இருந்து வருகிறார். 2012 ல் 4 வது முறையாக குஜராத் முதல்வராகவும், 2014 ல் பிரதமராகவும் மோடிக்கு வியூகம் வகுத்தது, 2017 ல் உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கும், 2019 ல் ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2020 ல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 2021 ல் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு வியூகம் அமைத்தார். இதில் உத்தரபிரதேசத்தில் மட்டுமே இவரது வியூகம் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை.

அரசியல் களத்தில் வெற்றிபெறும் கட்சிகளை குறிவைத்து வியூகம் வகுப்பதில் வல்லவர் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில், கடந்த ஜூன் 22 ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் தில்லி இல்லத்தில் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற பெயரில் தேசிய அளவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்தனர். இவர்களது நோக்கம் பாஜக அரசை பதவியிலிருந்து விலக்குவது. எனக் கூறப்படுகிறது.

தற்போது அவர் முன்னெடுத்துள்ள பணி பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரட்டும் முயற்சி என்பது தான். இதன் முதல் படியாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், போன்ற கட்சிகளிலிருந்து பிரமுகர்கள் வந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரமுகர்கள் யாரும் வரவில்லை.

கூட்டம் முடிந்த பிறகு இவர்கள் கூறியது காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்துவது கடினம் என்ற கருத்தை ஒப்புக்கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் முடிவை ஆய்வு செய்து பார்க்கும்போது பாஜக தனித்து 37% வாக்குகளும் கூட்டணியாக 45% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி தனித்து 19% வாக்குகளையும் கூட்டணியாக 25% வாக்குகளையும் பெற்றிருந்தது.

தெளிவாக 20 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு சிரோன்மணி அகாலிதளம் சிவசேனா போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன. அதேபோல பாஜக தனித்து 303 இடங்களையும் காங்கிரஸ் தனித்து 52 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடியாக சுமார் 178 தொகுதிகளில் போட்டி உள்ளது.
அதேபோன்று பிஹாரில் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி மிக முக்கியமாக உள்ளது. காரணம் அங்கு யாதவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்று திரண்டால் மட்டுமே பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு போட்டியை கொடுக்க முடியும். மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் ,காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மராத்தா, கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை முழுமையாக பெற்றால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலம் உட்பட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பழங்குடியினர், இஸ்லாமியர் வாக்குகளை மொத்தமாக பெற்றால் மட்டுமே பாஜகவுக்கு போட்டி கொடுக்க முடியும். இதுபோன்று ஒரு 142 தொகுதிகளில் காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. ஆக காங்கிரசுக்கும் மூன்றாவது அணி கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பாஜகவுக்கு போட்டியை கொடுக்க முடியும்.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 2019 மக்களவைத் தேர்தலில் மகாகட்பந்தன் என்னும் சமாஜ்வாதி பகுஜன் – சமாஜ் கூட்டணி பொருந்தாக் கூட்டணியாக மாறிவிட்டது. சமாஜ்வாதியின் யாதவர் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பரிமாற்றம் ஆனாலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு பரிமாற்றம் ஆகவில்லை. இதனால் சமாஜ்வாதி கட்சியின் பலத்தால் 10 தொகுதிகளை பகுஜன் சமாஜ் வென்றது, ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் பரிமாற்றமாகாமல் சமாஜ்வாதி கட்சி ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றது. குறிப்பாக அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கூட்டணி வாக்குகளையும் மீறி பிரதமர் மோடி தலைமைக்கு 50 சதவீத வாக்குகள் கிடைத்ததால் உத்தரபிரதேசத்தில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதை வைத்து பார்க்கும்போது உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வது கடினம். ஆனால் இதில் உள்ள இன்னொரு பிரச்சனை மூன்றாவது அணி கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவேண்டும், அல்லது ராகுல் காந்தி மூன்றாவது அணி கட்சிகளில் யாராவது ஒருவரை தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் 20% பலம் கொண்ட காங்கிரஸ் மேலும் பலவீனப்பட்டு சிறிய கட்சியாக மாறிவிடும். ஒரு வேளை காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி சுமார் 25 முதல் 30 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு கிடைக்கும். இக்கூட்டணிக்கு யாதவர்கள், இஸ்லாமியர்கள் முழுமையாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோல நடக்க தேர்தலுக்கு முன்பாகவே ராகுல் காந்தியை, அகிலேஷ் யாதவ் ஒத்துக்கொள்ள வேண்டும். கடந்தமுறை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தபோது அடுத்த நாளே அகிலேஷ் யாதவ் மறுத்தார். இந்த முறை ராகுல் காந்தியை, அகிலேஷ் யாதவ் முன்மொழிந்தால் அது எவ்வளவு தூரம் எடுபடும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தபிரதேச பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான எதிர்ப்பு பாஜக எதிர்ப்பாக மாறி, குர்மி இனத்தினர் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தால் அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். உ.பி.யில் பின்னடைவு ஏற்பட்டால் அது மக்களவைத் தேர்தல் வரை எதிரொலிக்கக்கூடும். ஒருவேளை உ.பி. தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பாஜக பெற்றால் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் சூழல் உருவாகும்.

தற்போதைய நிலைமைக்கு காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான் எனும் ஒரே அந்தஸ்து காங்கிரசுக்கு எஞ்சியுள்ளது. தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக கை காட்டினால் அதுவும் போய்விடும். மேலும் மூன்றாவது கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமையை கொண்டுவருவது கடினம். காரணம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போன்ற தலைவர்கள் காங்கிரஸ்,பாஜக ஆகியவற்றை சம எதிரியாகவே கருதுவதால் அவர்கள் காங்கிரசுடன் தேர்தலுக்கு முன்பு கைகோர்ப்பது சாத்தியம் குறைவு தான்.

ஆகையால் இவர்களை மோடிக்கு எதிராக அணிதிரட்டுவது கொஞ்சம் கடினம். அதேபோன்று பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் காங்கிரசுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பில்லை. கேரளாவில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படும் வாய்ப்பு இல்லை. மேலும் கேரளாவைத் தவிர்த்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்கினாலும் கூட பினராய் விஜயன், மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொள்ள மாட்டார். இவ்வாறாக எதிர்க் கட்சிகள் ஒற்றுமை இன்மையும் ஏழு நாட்களுக்கு ஏழு பிரதமர் என கேலி செய்யும் அளவிற்கு செயல் திட்டமும் இருப்பதால் மோடிக்கு போட்டியை கொடுப்பது கடினம்.

தற்போது கோவிட் இரண்டாவது அலையில் மோடியின் செல்வாக்கு சற்று சரிந்து இருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வாய்ப்பு குறைவாக உள்ளது. இதை செயல்படுத்தும் சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு, மகாராஷ்டிரா முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் எனும் ஆசையில் உள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் 2019 ம் ஆண்டு குழப்பங்கள் நடக்கும்போது சரத்பவார், மோடியை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பில் மோடி, சுப்ரியா சுலேவை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய நிலையில் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஒப்புக்கொண்டார் சரத்பவார்.

ஆனால் தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பாஜக ஆதரவளித்தால் சுப்ரியா சுலே எளிதாக முதல்வர் பதவியை கைப்பற்ற முடியும். காரணம் தேசியவாத காங்கிரசும் பாஜகவும் இணைந்தால் சட்டப்பேரவையில் 159 உறுப்பினர்கள் வந்துவிடுவார்கள். அதேபோன்று தேசியவாத காங்கிரசும் பாஜகவும் கூட்டணியாக 2024 தேர்தலை சந்தித்தால் அதற்கு எதிராக சிவசேனாவும் காங்கிரசும் கூட்டணி அமைக்க முடியாது. காரணம் சிவசேனாவுக்கும், காங்கிரசுக்கும் மையப்புள்ளியாக இருப்பது சரத்பவார் தான்.

இந்நிலையில், சிவசேனாவும், பாஜவுடன் கைகோர்க்க இருப்பதாக சில தகவல்கள் எழுந்துள்ளன. இதனால் பாஜகவுக்கு, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என இரு கட்சிகளுடன் கூட்டணி வாய்ப்பு உள்ளது. இதில் பாஜக, சிவசேனா இணைந்தால் 40 தொகுதிகளையும், பாஜக, தேசியவாத காங்கிரஸ் இணைந்தால் 48 தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் பேரவைத் தேர்தல் வர இருப்பதால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சரத் பவார் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலில் மீண்டும் உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொண்டால் அதுவே தேசியவாத காங்கிரஸின் பலத்தை குறைத்துவிடும். அதேபோல மூன்று கட்சிகளும் சேர்ந்த மக்களவைத் தேர்தலை சந்திப்பது கடினம்.
இதுபோன்ற பல விஷயங்களை மனதில் வைத்து தான் பேரம் பேசுகிறாரா சரத் பவார் என்னும் எண்ணமும் எழத் தொடங்கியுள்ளது. முடிவு எவ்வாறாக இருக்கப்போகிறது என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்.

யாருக்கு கூடுதல் வாய்ப்பு?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது,
பாஜகவும் காங்கிரசும் நேரடிப் போட்டியில் இருக்கும் தொகுதிகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. எப்படிப்பட்ட நிலையிலும் குறைந்தபட்சம் 220 தொகுதிகள் பாஜக வெல்லும். அப்படி ஒருவேளை நடந்தால் ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், சந்திரசேகராவ், மாயாவதி ஆகியோர் 50 இடங்களை கைப்பற்றினால், இந்த 50 உறுப்பினர்களின் ஆதரவுடன் நரேந்திர மோடி பிரதமராகலாம். மாறாக, காங்கிரஸ் அதிகபட்சம் 100 இடங்களை கைப்பற்றக் கூடும்.

அப்படிப்பட்ட நிலையில் மூன்றாவது அணி கட்சிகள் 170 லிருந்து 200 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே மாற்று அரசு உருவாகும்.

மக்களவை தேர்தல், மாநில சட்டப் பேரவை தேர்தல்களை ஒப்பிட்டால் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிற்கும்போது குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர், உத்தரகாண்ட், பிஹார், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 முதல் 15% வாக்குகள் (சட்டப்பேரவை தேர்தலை விட) கூடுதலாக கிடைத்து வருகிறது.
உதாரணமாக, 2019 மக்களவைத் தேர்தலில், ஹரியானா மாநிலத்தில் பாஜகவுக்கு 58% வாக்குகள் கிடைத்தது. 2019 நவம்பரில் நடந்த ஹரியானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 36.5% வாக்குகளை மட்டுமே பெற்றது.

அதேபோல, உத்தரப் பிரேதசத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50%, முந்தைய பேரவைத் தேர்தலில் 39.6%, மத்திய பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் 58%, பேரவைத் தேர்தலில் 41%, ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலில் 58.5%, பேரவைத் தேர்தலில் 38.8% கிடைத்தது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்திடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவை பாஜகவுக்கு எதிரான அலையை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் நடக்கும் அரசியல் கணக்கில் தான் அடுத்த பிரதமர், எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சி என்பதை முடிவு செய்யும் என்றார் ரிஷி.