மின்சாரம்; கனவாகக் கூடாது

பொதுவாக தமிழக மக்களிடம் சில சிறப்பு குணங்கள் உண்டு. அதுவும் அரசியல், அதிகாரம் என்று வரும் போது சில சென்டிமென்ட் ஆன எதிர்பார்ப்புகள் உண்டு. அதை தெரிந்து நல்ல முறையில் கையாளும் அரசியல் இயக்கங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் உண்டு. அது நாள் வரை நல்ல முறையில் ஆட்சியும், அரசியலும் நடத்திய இயக்கங்கள் இந்த சென்டிமென்டை சரியாக கணிக்க முடியாமல் தோல்வியை சந்தித்ததும் உண்டு.

அந்த குறிப்பிட்ட சென்டிமென்ட்கள் எவை என்று பார்த்தால் அரிசி, தண்ணீர், பால் இந்த மூன்றும் விலை ஏறுவது, தட்டுப்பாடு, மின் வெட்டு, மற்றும் மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு இவற்றில் எது நடந்தாலும் அது மக்களிடம் அதிருப்தியை தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் சரியாக இருந்தாலும் பெற்றோரிடம் கோபித்துக் கொள்ளும் குழந்தையைப் போல அடம் பிடித்து அதிருப்தி அடைவது மக்கள் இயல்பு. இதை உணர்ந்து குறிப்பறிந்து செயல்படுவது ஆளுங்கட்சிக்கு மிகவும் அவசியம்.

இப்போது பதவியில் உள்ள திமுக ஆட்சியில் அமர்ந்து ஐம்பது நாட்களே ஆகி இருந்தாலும் இந்த சிக்கல் குறித்து உஷாராக இருக்க வேண்டும். இன்னும் பொதுமுடக்கம் இருக்கும் நிலையில் ஆங்காங்கே மின்வெட்டு தலை காட்ட தொடங்கி இருக்கிறது. இதுவே முழுமையாக மாநிலம் இயங்கும் நிலையாக இருந்தால், மெல்ல மெல்ல மின்வெட்டு ஒரு சிக்கலாக மாறிவிடும். இன்னும் கொரோனா பெரும் தொற்று விலகாத நிலையில் முழு அரசாங்க இயந்திரமும் அதை கட்டுக்குள் கொண்டு வர போராடிக் கொண்டு இருக்கிறது. என்றாலும் பல இடங்களில் மின்துறை சார்ந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

முன்பே சொன்னது போல மின்வெட்டு என்பது இங்கு ஒரு சென்டிமென்ட். அதைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு முன்பாக இந்த மின்வெட்டால் திமுக ஏற்கனவே பாதிக்கப்பட்டது உண்டு. கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. முதலில் சென்டிமென்ட், அடுத்தது அதன் அத்தியாவசிய தேவை. இன்று நவீன மனிதர்களான நாம் மின்சாரம் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டோம். நமது இன்றைய வாழ்க்கை முறையும் அப்படி மாறிவிட்டது.

அதுவும் தொட்டதெற்கெல்லாம் மின்சாரம் தேவைப்படுகிறது. செல்ஃபோன் தொடங்கி, தொலைக்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள், இயந்திரங்கள், தொழிற்சாலைகள், குடிநீர் மற்றும் விவசாயம் செய்ய தேவையான பம்புகள், வீடு, அலுவலகம், வாகனம் என்று காணும் இடமெல்லாம் குளிர்சாதன வசதி, மின்சார ரயில், என்று திரும்பிய பக்கம் எல்லாம் மின்சாரம் தேவைப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்கள் மின்சாரம் இல்லை என்றால் ஸ்தம்பித்து விடும் என்ற அளவுக்கு வீட்டு உபயோகம், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் மின்சார பயன்பாடு இருக்கிறது. இதில் பலரின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, நாட்டின் பொருளாதாரம் என்று பலவும் அடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் “இளைதாக முள்மரம் கொல்க” என்று திருவள்ளுவர் கூறியது போல இந்த மின்வெட்டு சிக்கல் சிறியதாக இருக்கும் போதே தகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த ஆட்சியிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஏராளம். அதை நிறைவு செய்ய அரசாங்கம் ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிக்கா விட்டாலும் அவுட் ஆகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.