கோத்தகிரி சாலையில் உலா வரும் காட்டு யானை

கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது.

இதனால் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.தற்போது கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே குட்டியுடன் யானை ஒன்று தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.