சசிகலாவின் கனவு கானல் நீரா ?

1983 ல் அதிமுவின் கொள்கைபரப்புச் செயலராகவும், அதிமுகவின் முன்னணி பிரசார பீரங்கியாகவும் இருந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருக்க பணிஅமர்த்தப்பட்டவர் சசிகலா. எம்ஜிஆரின் மறைவுக்குப்பின்பு அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என இரு அணிகளாக உடைந்த போது ஜெ. அணி வலுப்பெறவும், மீண்டும் இரு அணிகளையும் இணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்கும்போதும் அதிமுகவை கைப்பற்றியபோதும் ஜெயலலிதாவுக்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர்.

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் குடியேறிய சசிகலா, அதிமுகவின் நிழல் அதிகார மையமாகவே கடைசிவரை வலம்வந்தார். இருப்பினும் நேரடி அரசியலில் ஈடுபட சசிகலாவை ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்தது இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, கட்சி நிர்வாகிகள் நியமனம் என அதிமுகவின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் சசிகலாவின் ஆதிக்கம் இருந்ததை இல்லை என யாராலும் மறுக்க இயலாது.

இந்நிலையில் 2016 ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் நிலைமை தலைகீழாக மாறியது. நிழல் அதிகார மையமாக இருந்த சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளராகி நேரடி அதிகார மையமாகவே மாறினார். அதிமுகவை சிந்தாமல், சிதறாமல் அப்படியே கைப்பற்றினார் சசிகலா.

காமராஜர் முதல்வராகியபோது சி.சுப்பிரமணியம், கருணாநிதி முதல்வராகியபோது நெடுஞ்செழியன் ஆகியோர் போட்டிக்கு இருந்தனர். ஏன், ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற எண்ணியபோது கட்சி உடைந்தது. தேர்தலில் தனது வாக்கு வங்கியை நிரூபித்தப்பின்னர் அதிமுகவை ஜெயலலிதாவால் தன்வசப்படுத்த முடிந்தது. ஆனால், சசிகலா அதிமுகவை கைப்பற்றியபோது துளிகூட எதிர்ப்பு இல்லாதபடி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

தேசிய, மாநில அளவில் இதுபோல உள்கட்சி அரசியலை நுட்பமாக கையாண்டு கட்சி, ஆட்சியை யாரும் கைப்பற்றியதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் நேரடியாக பங்கேற்க முதல்வர் வேட்பாளராக கூவத்தூரில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவியேற்பு விழாவுக்கு வராமல் காலம் தாழ்த்தினார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதற்குள்ளாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெற்ற சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாமல் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியது.

இருப்பினும், சில சமூக சூழல் கணக்குகள் காரணமாக முதல்வராக தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும், தனக்கு பதிலாக கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகவும் நியமித்துவிட்டும் சென்றார் சசிகலா. அவரது 4 ஆண்டு சிறைவாச காலத்தில் அதிமுக உள்கட்சி குழப்பம், அணிகள் இணைப்பு, தினகரன் தலைமையில் அமமுக என்னும் புதிய கட்சி என பல்வேறு நகர்வுகள் அரங்கேறின.

சிறைவாசத்துக்குப்பின் ஒரு மாதங்களுக்கு முன்பாக சென்னைக்குத் திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டாலும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவேற்க செல்லாதது அவருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருந்திருக்கும். சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரை நேரில் சென்று வரவேற்கக்கூடும் என பல்வேறு ஊடகங்களில் ஊகங்கள் வெளிவந்தன.

சசிகலாவை, அதிமுகவை மீட்கும் ராஜமாதா என்ற அடைமொழியில் சுவரொட்டிகளிலும், சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய ஆளுமையாகவே சித்தரிக்கத் தொடங்கினர். ஆனால், ராஜதந்திரியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரபலமான யாரும் சசிகலாவை சந்திக்க முடியாதபடி தற்காப்பு நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்டுவிட்டார். மத்தியில் மோடி அரசு இருக்கும் வரை சசிகலாவுக்கு ஆதரவாக எந்த அரசியல் நகர்வுகளும் நடக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு ஆதரவாக யார் இருந்தாலும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதையும்விட ஒருபடி மேல் சென்று சசிகலா குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபட்டார். அதிமுகவில் சசிகலாவுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முழுவதுமாக தெரிந்துகொண்ட அதிமுகவினர் இரட்டை இலை இருக்கும் இடமே தங்களது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என முடிவுசெய்துவிட்டனர். மக்களவைத் தேர்தலில் அமமுக செல்வாக்கு பெற்றிருந்த டெல்டா மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த அதிருப்தி அதிமுக நிர்வாகிகள் கூட தன்னை கடைசி வரை சந்திக்கவில்லையே என்ற மனக்குமுறல் இருந்திருக்ககூடும்.

இதற்கிடையே பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுக்குள் நுழைய வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த சசிகலா, பேரவைத் தேர்தலில் அதிமுக மோசமாக தோற்கட்டும், அதற்கு பின்னர் நுழையலாம் என்ற மனக்கணக்கில் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்தார். ஆனால், அவரது மனக்கணக்கை ஓபிஎஸ், இபிஎஸ் முறியடித்து அதிமுக தனித்து 33 சதவீதமும், கூட்டணியாக 40 சதவீதமும், தனித்து 66 தொகுதிகளும், கூட்டணியாக 75 தொகுதிகளையும் பிடித்து மரியாதையான தோல்வியையே சந்தித்தது.

இந்நிலையில், மீண்டும் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்ற சபதத்துடன் ஆடியோ அரசியலில் இறங்கி இருக்கிறார் சசிகலா. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என இதுவரை தான் பேசிய 70க்கும் மேற்பட்ட ஆடியோக்களை சசிகலா வெளியிட்டு வருகிறார். அதில் கொரோனா பெருந்தொற்று பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் தீவிர அரசியலுக்கு வருவதாகவும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், தொண்டர்களின் முழு ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தொடர்ந்து ஆடியோவில் நம்பிக்கையுடன் பதிவிட்டு வருகிறார்.

ஆனால், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தவுடன், சசிகலாவுடன் ஆடியோவில் பேசியவர்கள், அவருக்கு ஆதரவாக ஊடகங்களில் குரல் கொடுப்பவர்களை தொடர்ந்து அதிரடியாக நீக்கி வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது சசிகலா அதிமுகவுக்குள் நுழைய வேண்டுமெனில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சம்மதிக்க வேண்டும். ஆனால், இபிஎஸ் ஒருபோதும் சம்மதிக்க போவதில்லை என்பதை அவரது சசிகலா மீதான விமர்சனம் உணர்த்துகிறது. இவர்கள் தலைமை இருக்கும் வரை சசிகலாவுக்கு அதிமுகவுக்குள் இடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இடமே இல்லாதவர், உறுப்பினரே இல்லாதவர் எப்படி அதிமுகவை கைப்பற்ற முடியும் என்பதுதான் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகம்.

எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அரசியல் நாள்காட்டியில் கடைசிபக்கம் என்பதே கிடையாது. இது சசிகலாவுக்கும் பொருந்தும்.

சசிகலா சிறைக்குச் சென்றப்பின் நடந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல், நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னம் பெற எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தான் கையெழுத்திடும் உரிமையை பெற்றிருந்தனர். இனிமேல் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் இரட்டை இலையில் கையெழுத்திடும் உரிமை இவர்கள் இருவருக்கும் இடையே மட்டுமே இருக்கும் என்பதுதான் தற்போதைய நிலை என்று தெரிகிறது.

100 சதவீதம் வாய்ப்பு இல்லை

இது குறித்து அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, சசிகலா பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தாத அதிமுக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. சசிகலா பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்திய டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக 2.5 சதவீதத்தை எடுத்துள்ளது. எனவே, இனிமேல் சசிகலாவின் தேவை அதிமுகவுக்கு இல்லை. ஜெயலலிதா கொடுத்த நிழல் அதிகாரத்தில் இருந்த சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இனிமேல் சசிகலாவை அதிமுகவில் சேர்த்து அதிகாரத்தை எப்படி ஒப்படைப்பார்கள். யாரிடமும் தங்களது அதிகாரத்தை இருவரும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

சசிகலாவின் பலம் இதுவரை அரசியல் களத்தில் நிரூபிக்கப்படவில்லை. சசிகலாவின் பெயரை பயன்படுத்திய தினகரன் 5.5 சதவீத வாக்கில் இருந்து சரிந்து 2.5 சதவீதத்துக்கு போய்விட்டார். சசிகலாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தன்னை அரசியல் சக்தியாக நிரூபிக்க வேண்டும். அதற்கு விரைவில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நல்ல வாய்ப்பாக கருதி தனது ஆதரவாளர்களை களம் இறக்கினால் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளை பெற முடியும். அப்படி நிரூபித்து தனித்து அரசியல் பாதையை வகுக்கலாம். அதைவிட்டு அதிமுகவை பிடிக்க நினைத்தால் அது கடைசிவரை கானல் நீராகவே மாறிவிடும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.