குழந்தைகளுக்கு கொரோனா தீவிரமாக இருந்தால் கை, கால் நீல நிறமாக மாறும் 

இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், அடுத்து மூன்றாம் அலை உருவாகயுள்ளது.  அப்படி ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகம் பாதிக்குமா என்ற சந்தேகமும், அச்சமும் நிலவி வருகிறது.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச்., குழந்தைகள், சிசு நலபிரிவு துறைத்தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறுகிறார்.

மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது உண்மையா?

தடுப்பூசி போடாதவர்கள் என்றால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான். இதனால் மூன்றாம் அலை, குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு அதிகம். இரண்டாம் அலை முடிந்து விட்டது என அலட்சியமாக இல்லாமல், தொடர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் பெரிய பாதிப்புகளில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.

குழந்தைகளுக்கான அறிகுறிகள்?

கொரோனா பாதித்த, 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. 10 சதவீத குழந்தைகளுக்கே சாதாரணம், மிதம், தீவிரம் ஆகிய பிரிவுகளில் அறிகுறிகள் தென்படுகின்றன. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சோர்வு, உடலில் அலர்ஜி, தொண்டை வலி, மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

தீவிரமான பிரிவில் உடலில் கை, கால், நகம், நாக்கு உள்ளிட்ட இடங்கள் நீலமாக மாறும். உணர்வு குறைந்துவிடும். ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் சென்றுவிடும். சுயநினைவு இழப்பு ஏற்படும். உறுப்புகள் செயல் இழந்து போகும். கொரோனா காலம் முடியும் வரை, பெற்றோர் மிகவும் கவனமாக குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். மூன்றாம் அலையில், வேறு சில அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

மிஸ்சி’ பாதிப்பு அபாயம் குறித்து?

இது தற்போது பெரும் சவாலாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டு முதல் ஆறுவாரங்களில், ‘மிஸ்சி’ பாதிப்பு சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. 90 சதவீத குழந்தைகளுக்கு, கொரோனா அறிகுறி ஏதும் இருப்பதில்லை. இதனால், பலருக்கும் கொரோனா வந்து சரியானதே தெரியாமல் போகலாம்.

இந்நிலையில், ’மிஸ்சி ’பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடம் இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து, மூன்று நாட்கள் காய்ச்சல், தோல் அலர்ஜி, கண்கள் சிவத்தல் முதல் அறிகுறியாக இருக்கும். வாய், கை, பாதம் வீக்கம் இரண்டாவதுஅறிகுறியாக இருக்கும். சாதாரண காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது தற்போதைய சூழலில் நல்லது.

மூன்றாம் கட்டமாக, ரத்த அழுத்தம் குறைவது, முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது குறையும். இறுதியாக பல்வேறு உறுப்புகள் பாதித்து, உயிரிழப்பு அபாயம் ஏற்படும். கொரோனா பாதிப்புள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு வருவதில்லை, இருப்பினும் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாம் தயாரா?

மூன்றாம் அலையை பொறுத்த வரையில், குழந்தைகளுக்கு பிரத்யேக மருத்துவ வசதிகள் வேண்டும் என்பதே, தற்போது சவாலான காரியம். ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கும் போதுதான் சிக்கல். இதனை உணர்ந்து தற்போதே அரசும், மருத்துவமனைகளும் தயாராகி வருகின்றன.

இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஆன்லைன் மூலம் கொரோனா மற்றும் மிஸ்சிக்கும் பயிற்சி கொடுத்து வருகிறோம். எளிய வழிகாட்டி நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்படுத்தவும் அரசு மற்றும் சங்கம் தரப்பிலும் வழங்கப்பட்டுள்ளது. அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கர்ப்பிணிகள், தாய்ப் பால் ஊட்டுபவர்கள் உட்பட அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்ட தாய், முகக்கவசம் அணிந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் வழியாக கொரோனா பரவாது. இருப்பினும் தடுப்பூசி போட்ட தாய்மார்களும், கட்டாயம் முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறினால், வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவர்.  s

 பள்ளிகள் பரவலுக்கு ஒரு காரணமாகி விடுமா?

தமிழகத்தை பொறுத்தவரையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் பள்ளிகள் திறந்தால், பெரியளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புக்கு, முக்கிய காரணமே பள்ளிகள் திறப்புதான்.

மூன்றாம் அலை என்பது அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் அரசு, தனியார் மருத்துவமனைகள் உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.