ரத்ததான முகாமை துவக்கி வைத்த ஆட்சியர்

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று (26.06.2021) துவக்கி வைத்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று நோயால், பல்வேறு இடங்களில் நோயாளிகளுக்கு இரத்தம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரத்த தேவையை கருத்தில் கொண்டு, கடுமையான இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக ரோட்டரி கிளப் ஆஃப் மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையும் இணைந்து இரத்த தான முகாம் நடத்தியது.

சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஐ.எம்.ஏ ஹாலில் நடைபெற்ற இரத்த தான முகாம் துவக்க நிகழ்வில், ரோட்டரி கிளப் ஆப் மெரிடியன் தலைவர் டாக்டர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் சுகாதார துணை இயக்குநர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கிவைத்தனர். இதில் சுமார் 150 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.