தவறுகளை திருத்த இனிய சொற்கள் உதவுமா?

நம்மை சார்ந்தவர்கள் தவறு செய்யும் போது அவர்களை கடிந்து கொள்வது மனித இயல்பே. ஆனால் அந்த நேரத்தில் நம்மை அறியாமல் வரும் வார்த்தைகள் எதிராளியை ஆழமாக பதம் பார்த்துவிடுகின்றன.

சுற்றியுள்ளவர்களில் யார் தவறு செய்தாலும், கடுமையான சொற்களை பயன்படுத்தாமல், இனிமையான சொற்களால் எடுத்துக் கூறினால், இதயம் இதமாக மாறும் தவறும் விரைவாக திருத்தப்படும்.

“சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் எங்க இருக்கு? மூணாவது மனுஷங்க தலையிடாம இருந்தாலே குடும்ப பிரச்சனைகள் சரியாகிவிடும்.” என்று கூறினாள் பேச்சியம்மா பாட்டி.

பேச்சியம்மா பாட்டி நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திடகாத்திரமான மூதாட்டி. சாதாரணமாகப் பேசினாலே அவர் வாயிலிருந்து எதுகை, மோனை சொற்கள் தான் வரும். ஊரில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் அனைவரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

சிறுவர்களுக்குக் கதை சொல்லி சிரிக்க வைப்பதோடு, பெரியவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்து வியக்க வைப்பார். ஒருநாள் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள், பேச்சியம்மா பாட்டியிடம் கதை சொல்லுமாறு கேட்டனர். பாட்டி எப்போதும் உற்சாகம் மிகுந்த பாசிட்டிவ் கதைகளைத்தான் அதிகமாகச் சொல்லுவார்.

அன்றும் அப்படித்தான் கதையைத் தொடங்கினார். “ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாங்களாம்….” என ஆரம்பித்தார். அப்போது ஒரு சிறுமி குறுக்கிட்டு, பாட்டி எங்க வீட்ல அம்மாவும் அப்பாவும் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்காங்க” என்றாள்.

இதை கேட்டும் கேட்காததுபோல் கதையைத் தொடர்ந்த பாட்டி, அந்த சிறுமியைப் பார்த்து சிரித்துக் கொண்டே கூறினார், அந்த ராணியும் ராஜாவும் எப்பவும் சண்டை போட்டுக்க மாட்டாங்களாம்.

ஒரு நாள், அந்த ராணியிடம் தோழி கேட்டாங்களாம், “உங்களுக்கும் ராஜாவுக்கும் சண்டையே வராதா?” ராணி சொன்னாங்களாம், “நான் ஏதாவது தவறு செய்துவிட்டால், ராஜா என் அருகில் வந்து அமர்ந்து அன்பாகவும், அமைதியாகவும் பேசத் தொடங்குவார். அப்போது, நான் செய்த தவறால் ஏற்படும் தீமைகளை இன்முகத்தோடு, எடுத்துச் சொல்லுவார்”.

“அப்போது எனக்கு கோபம் வராது, அன்புதான் அதிகமாகும். நான் செய்த தவறு என்னை உறுத்தும்.” என்று சொன்னாங்களாம்.

உறவினர்கள் நண்பர்கள் என யார் தவறு செய்தாலும், இனிமையான சொற்களில் கூறினால், இதயம் இதமாக மாறும், தவறும் விரைவாக திருத்தப்படும்.

“கடுஞ்சொல் மனக் காயங்களைத்தான் ஏற்படுத்தும். அன்புதான் அரவணைப்பைக் கொடுக்கும்.” என்று கூறிவிட்டு, பிள்ளைகளைப் பார்த்து பொக்கைவாய் பிளந்தபடி சிரித்தாள் பேச்சியம்மா பாட்டி.

 

Credits: News 18 Tamilnadu