கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: அமைச்சர் பெரியகருப்பன்

உச்சத்திற்கு சென்ற கொரோனா தொற்று இப்போது 50 சதவீதம் குறைந்துள்ளது எனவும், கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும் எனவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (09.06.2021) ஆய்வு மேற்கொண்ட பிறகு, ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் சிந்தித்து எடுத்து நடவடிக்கையால், ஒரு மாதத்தில் உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு 50% குறைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்.

மேலும், முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நகர் மட்டுமல்லாமல், ஊரக பகுதியிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை உணர்ந்து, முதல்வர் கோவை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஊரக அமைச்சர் மட்டுமின்றி செயலர்களையும் அனுப்பி உள்ளார். அந்த அடிப்படையில் கோவை ஊரக பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்தார்.

மேலும், ஊரக பகுதிகளில் வீடு வீடாக சென்று தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விரைவில் ஊரக பகுதியிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் புறக்கணிப்படுவதாக அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அப்படி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக முதல்வர் இரண்டு முறை கோவையில் ஆய்வு மேற்கொண்டார். உயிரை பற்றி கூட கவலைபடாமல் கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பேட்டியின்போது வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் கோபால், இயக்குநர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.