கோவையில் 60 % வரை தொற்று பரவல் குறைந்துள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (07.06.2021) ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் இரு முறை கோவைக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில், தற்போது கோவையில் 60 சதவீதம் வரை தொற்று பரவல் குறைந்துள்ளது எனவும், கரும்பூஞ்சை நோய்க்கு பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கோவையில் கொரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக்கட்டணம் வசூல் செய்வது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், தற்போது அதிக கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார் எனவும், எல்லா மருத்துவமனைகளில் சென்று ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

கோவையில் தனிமைபடுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க காவல் துறைக்கு அறிவுறுத்தபட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே அரசின் முழு கவனம் இருந்து வருவதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.