முதல்வருக்கு 100 க்கு 100 மார்க் – என்.ராம், இயக்குனர், தி இந்து குழுமம்

திமுக  தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நிறைவேறவுள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகள் பற்றியும், பிற அரசியல் சம்மந்தமான கேள்விகள்  குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், தி இந்து குழுமத்தின் இயக்குனருமான என்.ராம் உடனான கலந்துரையாடலின் தொகுப்பு :

தமிழக அரசின் நடவடிக்கையை, குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதை பிரதானமாக கருதி, அந்த சவாலை சிறந்த முறையில் சந்தித்துவருகிறது.  கோவிட் குறித்த  பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலோசனை குழுவை அமைத்து,  அனைத்து கட்சி சட்டப்பேரவை  உறுப்பினர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்துள்ளது. அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது வேண்டுமென கேட்டதற்கு அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

மேற்கு தமிழக பகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகமான தருணத்தில் முதல்வர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவர முக்கியத்துவம் காட்டினார்.  ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ரூ.4000 வழங்கினார். அவசிய தேவைக்கு உதவும் வண்ணம் நிச்சயம் உள்ளது என்பது அவர் வழங்கும் நிதிக்கு கிடைக்கும் ஆதரவில் தெரிகிறது.

முதல்வர் நல்ல அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார். தனக்கு பிடித்தவர்களை பொறுப்பில் அமர்த்தவேண்டும் என்ற சிந்தனையில்லாமல் சிறப்பாக செயலாற்ற கூடியவர்கள் யார் என்று அறிந்து அவர்களுக்கு வாய்பளித்துள்ளார். சுகாதாரத்  துறை செயலர் போன்ற திறமை மிக்க பழைய ஆட்சியில் இருந்த அதிகாரிகளும் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.

துவக்கத்திலேயே இதைவிட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. நான் இவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு 100 மதிப்பெண் தருவேன். களத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கக்கூடும். அவற்றை அரசு  கண்டறிந்து சரிசெய்யவேண்டும்.

பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாகவும், கொரோனாவால் உயிரிழந்த அவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் ஆகிய அறிவிப்புகளை எப்படி பார்க்கின்றீர்கள்?

இந்தியாவில் 220க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொரோனாவால் பாதிப்படைந்து இறந்துள்ளனர், இதில் நிறைய இளம் செய்தியாளர்களும் அடங்குவர். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 28 வயதான  பத்திரிகையாளர் ஒருவர் கூட அண்மையில் மரித்தார்.

பத்திரிகையாளர்கள் சிலர் வசதிப் படைத்தவர்களாக இருக்கலாம், ஆனால் பலர் ஏழ்மையான நிலையில் தான் இருக்கின்றனர்.  சில மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் தொற்று ஏற்பட்டு மரித்தோரை தகனம் செய்யும் இடத்திற்கு சென்று உண்மையாக இறந்தவர்கள் எத்தனை பேர், மறைக்கப்படுபவர்கள் எத்தனை பேர் என கணக்கு பார்த்து, உண்மையான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர். மிக பெரிய சவாலாக இருந்தாலும் பத்திரிகை துறை மூலம் தான் நிஜத்தை வெளிகொண்டு வர முடியும்.

இப்படிபட்டஆபத்தை சந்தித்துவரும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவிகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை.

அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாது ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்க என்ன செய்யவேண்டும், அவர்களில் யார் உண்மையான பத்திரிகையாளர் என பார்த்திட வேண்டும். எதிர்க்கட்சி ஆதரவு செய்தியாளர் என்று பாராமல் தாராள மனதுடன் அனைவருக்கும் உதவிட வேண்டும்.

தேர்தலுக்கு முன் தடுப்பூசி பற்றிய  சந்தேகத்தை எழுப்பியதும், மக்களிடையே ஆர்வத்தை குறைத்ததும் ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைமை கூறுவது குறித்து உங்கள் கருத்து ?

பாஜக செய்வது பொய் பிரச்சாரம். அவர்களால்  இதைத்தான் சொல்லமுடியும், வேறு என்ன சொல்வார்கள். மக்கள் அந்த கட்சியை இந்த மாநிலத்தில் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே இப்படி தான் பேசுவார்கள்.

கோவாக்சின் உபயோகத்துக்கு வந்தபோது அதன் மூன்றாவது கட்ட பரிசோதனை முழுவதுமாக முடியவில்லை, அது அவசரகால பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது மருத்துவத்துறை சார்ந்தோர்  உட்பட பலருக்கும் சந்தேகம், தயக்கம்  நிலவிவந்தது.

அந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டபின்னர் மக்களிடையே போட்டுக்கொள்ளும் நம்பிக்கையும், விழிப்புணர்வும் அதிகரித்தது. அதிமுக காலத்தில் கொரோனவை ஒரு அளவுக்கு கட்டுபடுத்தினர் ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் ஏதும் பெரிதாக செய்திடவில்லை. தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் தடுப்பூசியின் விரயம் 7% இருந்தது, தற்போது இந்த நிலை தமிழக மாவட்டங்கள் பலவற்றில் இல்லை. தடுப்பூசியை பொறுத்தவரை எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

நம் நாட்டில்  உள்ள அனைவருக்கும் தடுப்பூசி  இலவசமாக கிடைக்க வேண்டும். இன்று பல மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசி தேவைக்கேற்ப கிடைக்கவில்லை, இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. அவர்கள் தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளுக்கான ஆர்டர்களை செய்திருக்க வேண்டும், உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கே குழப்பமான சூழல் தான் நிலவியது அப்போது.

உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் “தடுப்பூசியை இந்த அரசு வாங்கினால் ஒரு விலை, மாநில அரசாங்கங்கள் வாங்கினால்  ஒரு விலை  என எப்படி அனுமதிக்க முடிந்தது”? என தடுப்பூசி குறித்து பல கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை மிக சிறப்பாக உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்திய பின்னர் தமிழக அரசின் கவனம் எவற்றில் இருக்கவேண்டுமென நினைக்கின்றீர்கள்?

இந்த அரசு வழங்கும் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், அனைவருக்கமானதாக இருக்கவேண்டும். சமீப காலத்தில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது, இதை பெரிதளவு குறைக்கவேண்டும்.  உள்கட்டமைப்புகளுக்கான திட்டங்கள், மேம்படுத்தல் ஆகியவற்றால் சுற்றுசூழல் பெரிதளவு பாதிப்பு அடையாதவாறு பாத்துக் கொள்ளவேண்டும்.

விவசாயத்தின் நலனுக்கும், நல்வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை இந்த அரசு வழங்க வேண்டும் இந்த 5 ஆண்டுகளில்.

மாநிலத்தின் வருமானத்தில் நாம் பெற்ற கடனுக்கான வட்டியை கட்டுவதில் பெரிய செலவு ஏற்பட்டுவருகிறது. இதை சரிசெய்து  பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிச்சயம் இதற்கான  நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகின்றேன்.

மத்திய அரசுடன் எந்தெந்த விஷயங்களில் ஆதரவு வழங்குவது சரியோ அதை சிந்தித்து, அவற்றில் தங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும்.