பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணம்

குறிச்சி கிளை மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக குறிச்சி பிரிவு கிளை மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் பள்ளிவாசல் சார்பில் ஏழை-எளிய சாலையோர மக்களுக்கு தினமும் காலை உணவுகள் மற்றும் குறிச்சி பிரிவு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சுமார் 1000 ரூபாய் மதிப்புடைய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.

இது குறித்து மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பைரோஸ் கான் கூறுகையில்: ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் ஜமாத் தமிழகம் முழுவதும் 90 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளது. ஊரடங்கு காரணமாக பசியால் வாடும் ஏழை எளிய சாலையோரங்களில் உணவின்றி தவிக்க கூடிய மக்களுக்காக ‘பசியாற உணவு அளிப்போம்’ என்ற திட்டப் பணிகளை செய்து வருகின்றோம்.

அதேபோல் ஆயிரம் ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் புறநகர் உட்பட்ட மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் பள்ளிவாசல் சார்பாக இந்த பணிகளை செய்கின்றோம்.