“தமிழக அரசின் சிறப்பான செயல்கள் நம்பிக்கையை அளிக்கிறது”

 
– இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு

தமிழகத்தில் அரசின் சிறப்பான செயல்கள் மற்றும் நடவடிக்கை மூலம் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழக அரசின் செயல்கள் இக்கால கட்டத்தை சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், சிரமமான காலகட்டங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் முன்னின்று வழிநடத்தும் போதும், வெளிப்படையான கருத்துக்களை தொடர்ச்சியாக நம்பிக்கை அளிக்கும் விதத்தில் வெளிப்படுத்தும் போதும், அனைவருக்கும் இக்கால கட்டத்தை சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படும். இந்த நல்ல செயல்களை தமிழக முதல்வர் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்துவது தொழில்முனைவோருக்கு நம்பிக்கை அளிக்கிறது.

முதல்வர் அலுவலகம் மற்றும் தொழில் அமைச்சகம் மூலம் மிகச் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் தொழில் துறைக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டத்துக்கான திட்டங்களும், தகவல் பரிமாற்றத்திலும், தொடர்ச்சியான புரிதலுடன் கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், எங்களாலும், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்க முடிகிறது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் கேம்ப்கள் நடத்தும் முனைப்பிற்கும், சில தொழிலாளர்களின் தடுப்பூசி போடும் தயக்கத்தை போக்கியதற்கும் உதவிய தமிழக சுகாதாரத்துறை மற்றும் பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.

சென்ற வருடம் கற்ற பாடங்களில் இருந்து, இந்த லாக்டவுன் காலத்தில் ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தி இருக்கும் எங்கள் தொழிற்சாலைகளிலும் மிகச்சிறந்த திட்டங்களை வடிவமைத்து, ஆலைகளில் தங்கியிருக்கும் தமிழக மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் உட்பட அனைத்து தேவைகளையும் கவனித்து, அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் தளர்வுகளில், உள்ளிருப்பு பணியாளர்களை வைத்து ஆலைகளை இயக்க, முதல் கட்ட தளர்வாக அனுமதித்தால் ஆலைகள் கோவிட் கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பிக்க முடியும்.

எங்கள் ஜவுளிப்பொருட்களின் மிகப்பெரிய சந்தைகளான அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசிகளின் பலனால், இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதனால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், நமது தமிழக ஜவுளி ஏற்றுமதித்துறை, லாக்டவுனுக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார மீட்டெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.