உணவு வழங்கும் சேவையில் ஆலயம் அறக்கட்டளை

ஊரடங்கு காலத்தில் கோவையை சேர்ந்த ஆலயம் அறக்கட்டளை பொது மக்களுக்கு உணவு வழங்கியும், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சேவை செய்து வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது. அதேபோல, ஆலயம் அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஆலயம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மருதமலை வடவள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் மலைவாழ் மக்களுக்கு ஆலயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 8 நாட்களாக இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியும் மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.