வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்!

சர்வ ஜனமும் கல்வி மூலம் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என துவங்கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாய் தமிழ் நாட்டு இளைஞர்களை திறன்மிகு மனிதர்களாக உருவெடுக்கச்செய்து வருகிறது.

கல்வி வழங்குவதில் துவங்கி, தொழில் வளர்ச்சி, மருத்துவ சேவை, மனிதவள வளர்ச்சி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி என கோவையின் முன்னேற்றத்தில் பி.எஸ்.ஜி.க்கு தனி இடம் உண்டு.

காலத்திற்கேற்ப தன் கட்டமைப்பை மாற்றினாலும், தான் கடைபிடிக்கும் தர்மத்திலிருந்து பி.எஸ்.ஜி அறக்கட்டளை என்றும் மாறியதில்லை.

கொரோனாவின் முதல் அலை எழுந்த தருணத்தில் துவங்கி இன்று வரை பி.எஸ்.ஜி நிறுவனங்கள் தன் சேவையை கோவை மண்ணிற்கு இன்னும் மிகுதியாகவே செய்து வருவது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது.

கொரோனா நிவாரணமாக 2020 மற்றும் 2021ல் ரூபாய் 1 கோடி நிதியை இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது. இதைக் காட்டிலும் திறமை மிகுந்த மாணவர்களை தொடர்ச்சியாக உருவாக்கியதன் விளைவால் இந்த பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பி.எஸ்.ஜி யின் முன்னாள் மாணவர்கள் பலரின் வாழ்க்கையில் ஊதியம் தரும் தொழிலதிபராக, உடல் நலம் காக்கும் மருத்துவராக, செவிலியராக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலராக ஏதோ ஒரு முக்கிய சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்

இது பல கோடிகளுக்கு சமம் என்றால் அது மிகையாகாது. இதற்கு ஒரு உதாரணம் தான் பி.எஸ்.ஜி யின் முன்னாள் மாணவரான ஹெச்.சி.எல் தலைவர் சிவ் நாடார். இவர் 2020ல் 109 மில்லியன் அமெரிக்கன் டாலரை சமூக நலனுக்காக வழங்கியுள்ளார். இதுபோல் நிதி மற்றும் சேவையை மக்கள் நலனிற்கு பி.எஸ்.ஜி தொடர்ந்து செய்து வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தானே?

 

அறம் என்றும் தொடரும்…

எல்.கோபாலகிருஷ்ணன்,

நிர்வாக அறங்காவலர், பி.எஸ்.ஜி அறக்கட்டளை

“ஊருணி நீர்நிறைந் தற்றே  உலகவாம் பேரறி வாளன் திரு” என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப அறிவுடையவர் செல்வம் சமூகத்துக்கு நல்லமுறையில் என்றும் பயன்படும். அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குவது தான் பி.எஸ்.ஜி அறக்கட்டளை. தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோர்களின் சமூக அக்கறையோடு அவர்கள் காட்டிய கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளில் தொடர்ந்து  கடுகளவும் குறைவில்லாமல் ஈடுபட்டு வருகிறது.

தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நோய்த்தொற்று சூழ்நிலையில்   பி.எஸ்.ஜி அறக்கட்டளை  தொடக்கத்தில் இருந்தே மக்கள் சேவையில் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றி  வருகிறது. கொரோனா நோய்தொற்று சிகிச்சைக்கு என்று 600க்கும் அதிகமான படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சார்பு பணியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என்று ஒரு பெரும் அணியே பி.எஸ்.ஜி அறக்கட்டளை  சார்பாக களத்தில் இறங்கி பணி புரிந்து வருகிறது. இந்த பணிகளை  பி.எஸ்.ஜி  அறக்கட்டளை, செய்ய வேண்டிய கடமையாகவும் பொறுப்பாகவும் எண்ணி செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் இந்த அற வழியில் தொடர்ந்து நடப்போம் என்ற உறுதியும் நம்பிக்கையும் உள்ளது.

 

மக்கள் சேவைக்கு பி.எஸ்.ஜி ஒரு உதாரணம்!

மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், தலைவர், மேக் இண்டஸ்ட்ரீஸ்

நான் பி.எஸ்.ஜி யின் முன்னாள் மாணவன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். நான் படித்த காலத்தில், பி.எஸ்.ஜி குழுமம் கல்வி அறக்கட்டளை மூலம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மிக சிறப்பாக செயலாற்றுவார்கள் என்ற எண்ணம் மட்டுமே கொண்டிருந்தேன்.

ஆனால் எப்பொழுதெல்லாம் இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் துன்பப்படுகிறார்களோ அந்த சமயத்தில் முன்னோடியாக நின்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னாள் மாணவர்களையும் இணைத்து மக்களுக்கான சேவைகளை செய்கிறார்கள்.

இந்த உதவும் மனப்பான்மை பாராட்டிற்குரியது. பேரிடர் போன்ற காலகட்டங்களில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை நிதியுதவி அளித்து நிலைமையை எதிர்கொள்ள உறுதுணையாக துணை நிற்கின்றார்கள்.

பல தொண்டுகளை செய்து வரும் இந்த அறக்கட்டளை முதல்வரின் கொரோனா நிதிக்காக தங்களது பங்கினை அளித்து உதவி இருப்பது இவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.

எவ்வித பாகுபாடும் இன்றி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் மக்களுக்கு செய்யும் தொண்டு போற்றக்கூடியது.

 

பி.எஸ்.ஜி –யின் தொண்டு அளவிட முடியாதது

– இயகோகா சுப்பிரமணியம், தலைவர், நன்னெறிக் கழகம்

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் அதன் அறக்கட்டளையை கோவையின் ஒரு அடையாளமாகவே கூறலாம். அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ஜி.ஆர்.டி போன்ற மாமனிதர்கள், இன்று இருக்கக்கூடிய அறங்காவலர்கள் அனைவரும் சமூக பிரச்சனைகளில் முன்னிலை வகிக்கக்கூடியவர்கள். அந்த வகையில் எந்த நேரத்தில் எங்கு உதவி தேவைப்படுகிறதோ அங்கு பி.எஸ்.ஜி நிறுவனம் என்றுமே முன்னிலையில் இருந்து உதவும்.

கொரோனா என்கின்ற பெரும் தொற்று நோய் வந்து, கோவையிலே தற்போது அதிகமாக பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்ற இந்த நேரத்தில் கூட பி.எஸ்.ஜி தன்னுடைய மருத்துவமனை மூலமாகவும், சுற்றியிருக்கக் கூடிய இடங்களில் உள்ள மருத்துவ பணியாளர்கள் மூலமாகவும், களப் பணியாளர்கள் மூலமாகவும் மக்களுக்கான உதவியை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளை, சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு அற்புதமான எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கோவைக்கு இந்த அறக்கட்டளை செய்து கொண்டிருக்கும் தொண்டு போற்றுதலுக்குரியது.

எந்த அரசாங்கமாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் எவ்வித பாகுபாடும் பார்க்காமல் என்றுமே நாட்டை முன்னேற்ற கூடிய ஒரு வகையில் செயல்படுகிறார்கள். குறிப்பாக இந்த கொங்கு மண்டலத்திற்கும், கோவைக்கும் அவர்கள் ஆற்றி வரும் பணி அளவிட முடியாதது.

நிதியுதவி அளிப்பது என்பது பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் ஒரு அங்கமாகும். கொடை அளிப்பது என்பதே பி.எஸ்.ஜி குடும்பத்திற்கே உரிய ஒன்று. அதனால் இந்த அறக்கட்டளை கோடிக்கணக்கில் கொரோனா நிவாரணத்திற்கு மட்டுமல்லாது பல நற்பணிகளுக்காகவும் நிதியுதவி செய்திருக்கிறார்கள். அவர்களின் இந்த செயல் பாராட்டிற்குரியது.

இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்திற்காக கோவையை சேர்ந்த தொழிலதிபர்கள் அளித்திருக்கக் கூடிய நிதி அளவிட முடியாததாக இருக்கிறதென்றால் அதற்கு அடிப்படை காரணம் பி.எஸ்.ஜி அறக்கட்டளை. ஏனெனில் இங்குள்ள தொழிலதிபர்களில் பாதி பேர் பி.எஸ்.ஜி அறக்கட்டளை நடத்தக் கூடிய பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள். அங்கு போதித்த அறத்தின் பெருமையை தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே அறத்தையும், பி.எஸ்.ஜியையும் பிரிக்க முடியாது.

 

சமூக சேவை செய்வதில் முன்னோடி

– எம்.கிருஷ்ணன், தலைவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

சமுதாய வளர்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை மிக பெரிய ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது. பி.எஸ்.ஜி அறக்கட்டளை எப்போது இயற்கை  பேரிடர் நேர்ந்தாலும், அதற்கான நிவாரண பணிகளை முன்னெடுத்து செய்வதில் முன்னோடியாக திகழும்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், முதன் முதலாக அதிகமான படுக்கை வசதிகளை  கொண்டு மக்கள் பயத்தை போக்கியது பி.எஸ்.ஜி மருத்துவமனை தான். இந்த மருத்துவமனைக்கு சென்றால் நோய் குணமடைந்து வீடு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையை,தரமான சேவை மூலம் மக்களுக்கு, அளித்திருக்கிறது.

முதல்வரின் கொரோனா நிதிக்காக பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் நிதியுதவி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.    கோவையில் உள்ள மக்கள் மட்டுமல்லாது, சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைவரும் பி.எஸ்.ஜி மூலம் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்து இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்யும் சேவைக்கு நாம் அனைவரும் நன்றி கடன் பட்டுள்ளோம்.

 

செய்த தர்மம் பாராட்டிற்குரியது

D.நந்த குமார், தலைவர், முன்னாள் மாணவர்கள் சங்கம்,

பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரி

கொரோனா காலத்தில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பாக நிவாரண நிதிக்காக அரசாங்கத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது மிகவும் பாராட்டத்தக்க செயல்.

1926ம் ஆண்டு பி.எஸ்.ஜி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே இதை ஒரு தர்ம ஸ்தாபனமாக முன்னெடுத்து உதவிகள் செய்வதற்காக தான்.

தொழிலநுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரி ஒரு பெரிய ஆலமரமாக இருந்து பல பொறியியலாளர்களை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியையும், மருத்துவக் கல்லூரியையும் நிறுவி தனது கல்வி சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கோவையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட போது, முதல் தனியார் மருத்துவமனையாக கொரோனா வார்டை நோயாளிகளுக்காக உருவாக்கியது பி.எஸ்.ஜி மருத்துவக் குழுமம் தான்.

அந்த வகையில் ஒரு மிகப்பெரிய சேவையை மக்களுக்கு செய்து வருகிறது. குறைந்த செலவிலே நல்ல தரமான மருத்துவம் இங்கு கிடைக்கிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பலருக்கு தகுந்த சிகிச்சை அளித்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் சிக்கல் ஆகியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பாக ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

 

சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறைக்கு ஒரு சான்று

– என்.கிருஷ்ண குமார், தலைமை செயல் அதிகாரி,

ஆகர்ஷ் அட்வெர்டைசிங் கன்சல்டன்ட்ஸ்.

கல்விக்கும், மனிதகுலத்திற்கும் பி.எஸ்.ஜி அறக்கட்டளை தன்னுடைய துவக்கத்திலிருந்து இந்நாள் வரை ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. அண்மையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளை வழங்கிய 1 கோடி ரூபாய் நிதி, சமுதாயத்தின் மீது இந்த அறக்கட்டளை கொண்டுள்ள அக்கறைக்கு ஒரு சான்று.

மக்களை இந்த பெருந்தொற்றின் பிடியிலிருந்து காக்க பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் எடுத்துவரும் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு உரித்தான வழியில் மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்த தருணத்தில் அனைத்து பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர்களும் ஒன்றாக நின்று, இந்த கொடூர தொற்றை வெல்ல மக்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

பி.எஸ்.ஜி எடுக்கும் பிற முயற்சிகள்

நிதி, நிவாரணம் வழங்குவதுடன் நிற்காமல் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் நலனுக்காக மற்ற பல சேவைகளை செய்து வருகிறது.

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.ஜெயசுதா சமீபத்தில் நம்மிடம் பேசுகையில்:

“இறுதியாண்டு இளங்கலை மற்றும் ஈராண்டு முதுகலை மாணவ மாணவிகள் பலரும் சுயவிருப்பதுடன் பிஎஸ்ஜி மருத்துவமனையில் பல சிகிச்சை பிரிவுகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

“சிலர் கொரோனா வார்டுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இல்லாமல் தங்கள் வீடுகளில் இருக்கும் மாணவர்கள் தாங்கள் உள்ள இடங்களிலே, இருக்கும் மக்களிடம் கொரோனா தொற்றை தடுக்க மக்கள் செய்யவேண்டியவை என்ன என்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது மிகவும் பாராட்டிற்குரியது. அவர்கள் அவ்வாறு ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எங்களுக்கு வீடியோ பதிவு மற்றும் புகைப்படமாக அனுப்பி வைக்கின்றார்கள். நாங்கள் அதை தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

இவர்களை போலவே பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மாணவர்களும், முன்னாள் செவிலியர் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் தமிழகம், இந்தியா என்றில்லாமல் உலகநாடுகளின் பல பகுதிகளில் கொரோனாவிற்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

பி.எஸ்.ஜி சமூக வானொலியின் நிலைய இயக்குநர், பி. சந்திரசேகரன் பேசுகையில்:

“பி.எஸ்.ஜி வானொலி நிலைய சங்கமான ’ரேடியோ ஹப்’ மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்திலும் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.”

“கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்திகள், சுவாரசியமான தகவல்கள், மருத்துவர்களிடம் கிடைக்கும் அரிய விஷயங்களை எங்களுக்கு பதிவு செய்து அனுப்பி வைக்கிறார்கள். நாங்கள் அதை இங்கு நெறிப்படுத்தி, வானொலியில் ஒளிபரப்பி வருகிறோம். இந்த கொரோனா தொற்று காலத்தில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்ப படுகிறது. சில தகவல்கள் போலியானதும் அச்சுறுத்தக் கூடியவையாகவும் இருக்கிறது.”

“இதன் உண்மை தன்மையை மாணவர்கள் மருத்துவர்களிடம் கேட்டு, அதை பதிவு செய்து அனுப்பி வைக்கின்றனர். இது இக்காலத்தில் எங்கள் சமூக வானொலியின் மூலம் மக்களுக்கு செய்யும் சேவையாக இருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.”

கோவை மக்களின், மாவட்டத்தின் வளர்ச்சியிலும், வறட்சியான தருணங்களிலும் உதவும் நல்ல நண்பனாக இருந்துவரும் பி.எஸ்.ஜி சேவை இனி வரும் காலங்களில் மேலும் சிறக்க மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.