உணவுத்துறைக்கு அரசு கை கொடுக்குமா?

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்பது முன்னோர் வாக்கு. உயிர் வாழ உணவு பிரதானம். பல நூற்றாண்டுகளாக வீடுகளிலும் விழாக்களிலும் மட்டும் கிடைத்து வந்த உணவு தொழிற்புரட்சிக்கு பிறகு உணவகங்களிலும் கிடைக்கத் தொடங்கியது. இன்று அது மிகப் பெரிய அளவிலான தொழில்துறையாக வளர்ந்து நிற்கிறது. பெருகி வரும் நகர்மயமும், தொழில் வளமும், மக்கள் மேற்கொள்ளும் பயணங்களும் நடைபெறுவதில் உணவகங்களின் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த தொழில் துறை வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள முக்கிய பயன்களாக சிலவற்றை கூற வேண்டும். முதலில் வீட்டை விட்டு வெளியில் செல்லும், தங்கும் அனைவருக்கும் உணவளிக்கும் அமுத சுரபியாக இவை திகழ்கின்றன. அடுத்து உணவு தானியங்கள், பால், காய்கறிகள் என்று விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக, ஒரு நிலையான சந்தையாக விளங்குகிறது.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் காமதேனுவாக இவை திகழ்கின்றன.

ஆனால் இந்த கொரோனா பாதிப்பால் நாடே தவிக்கும் நிலையில் உணவுத்தொழில் சார்ந்த அனைத்தும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக இத்துறையில் பணியாற்றி வரும் சாதாரண மக்கள் மிக சிரமமான நிலையில் உள்ளனர். எனவே மக்களின்  வாழ்வை காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் இது குறித்தும் சிந்தித்து நல்ல, தேவையான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை உண்டாகும் வகையில் அரசாங்கம் முடிவெடுத்து செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு.

 

மண்ணிற்கும் மக்களுக்கும் துணை நிற்போம்

–  தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கம். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டல்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் எங்கள் உறுப்பினர்கள் உணவுசேவை செய்து  வருகிறார்கள். இதைக்கடந்து எங்கள் உதவி சமுதாயத்திற்கு எப்போது தேவைப் பட்டாலும் மனமுவந்து உதவி வருகிறோம்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின்  அவர்கள் தலைமையிலான அரசு இந்த கொரோனாவை ஒழிக்க  அரும்பாடுபட்டு வருகிறது.

அவரோடு மந்திரிகள், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள்  கடுமையாக மக்களை காக்க போராடி வருகிறார்கள்.

அவர்களுடன்  தோலோடு தோல் நின்று எல்லாவிதத்திலும் உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் ஆற்றும் இந்த சேவைகளுக்கு இரு கைகளை கூப்பி நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவிக்கின்றோம்.

 

உணவுத்தொழில் நசிந்தால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்!

டி.சீனிவாசன், தலைவர், கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்

தமிழ் நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டல்கள் இயங்கிவருகிறது.  இந்த துறை  மூலமாக விவசாயிகள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர். அவர்கள் விளைவிக்கும் காய்கறி, தானியங்கள், பழ வகைகள் அனைத்தையும் அதிகமாக உணவு விடுதிகள் உபயோகித்து வருகின்றது. அதேபோல பால் வியாபாரிகளிடமிருந்தும் நேரடியாக பாலை  நாங்கள் பெற்று வருகிறோம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உணவு தொழிலானது மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கொரோனா என்பது இயற்கை சீற்றம். எனவே அரசு கொண்டுவந்த நடவடிக்கைகள் சரியானது தான். ஆனால் ஊரடங்கின் போது கடைகள்  விரைவில் மூடப்படுவதால், அன்றைய நாள் விளைந்த பொருட்களை, கறந்த பாலை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க சம்மந்தப்பட்டவர்களால் முடிவதில்லை.

நம்மிடம் அனைத்து பாலையும், பால் பவுடராக்கும் தொழில்நுட்பமோ, அனைத்து காய்கறிகளையும் குளிர்சாதன கிடங்குகளில் வைக்கும் வசதியோ இல்லை. இதனால் அந்த பொருட்கள் விரயம் ஆகின்றது.

மிகக்குறைந்த விலையில் பாரம்பரிய உணவுகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி என சொல்லலாம்.  பல்லாயிரக்கணக்கானோருக்கு, படிப்பு தகுதி இல்லாவிட்டாலும், பண்பிருந்தால் பணிசெய்ய வாய்ப்பளிக்கும் அருமையான துறை இது. பல பெண்களும் சுயமாக சிறு மெஸ் போன்ற உணவு விடுதிகளை நடத்தி தன்னம்பிக்கையோடு  வாழ்ந்து வருகின்றனர். நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவின் சுவைக்கும், புகழுக்கும் பிற மாநிலத்திலிருந்தும் இங்கு சுற்றுலா வந்த காலமெல்லாம் மாறி, தற்போது ஓட்டல்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இப்படி இருந்தும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், இ.எஸ்.ஐ  மருத்துவமனைகளில், கொரோனா சிறப்பு பிரிவுகளில் உள்ள அனைத்து நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பிற அலுவலர்கள் அனைவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் நம் மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் இருந்து தான் உணவு தயார்செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள் முன்களப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் அனைவருக்கும் இந்த ஒன்றரை ஆண்டு இலவசமாக உணவு வழங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இந்த துறையை சார்ந்த நிறுவனத்தினர், இதை வாழ்வாதாரமாக பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர், முக்கியமாக விவசாயிகளின் நலன் கருதி அரசு சற்று கருணை கண்களுடன் பார்த்து எங்கள் துறைக்கு உதவிசெய்திட வேண்டும்.

 

மத்திய அரசின் அறிவிப்புகளை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்

வெங்கட சுப்பு, தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

சமீபத்தில் மத்திய அரசாங்கம் உணவு தொழிலை சேவை துறையாக மட்டுமல்லாது உற்பத்தி துறையாகவும் அறிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு இதை அமல்படுத்தவில்லை. அப்படி செய்யும் பட்சத்தில் சாதாரண உணவகங்களுக்கு கூட தாங்கள் செலுத்தும் மின்சார கட்டணத்தில் உற்பத்தி துறையினர் பெரும் சலுகைகளை பெறமுடியும். வங்கியில் தொழிலுக்காக பெரும் வட்டி விகிதத்தில் சலுகைகள் கிடைக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு இது போல் பல நன்மைகள் காத்துக்கிடக்கிறது, அரசு மனம் வைத்தால் இவை எங்களிடம் வந்தடையும்.

இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு இங்கு வந்த பணியாட்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். உள்ளூரை சேர்ந்தவர்கள் மாவட்டத்தில்  ஆங்காங்கே இருப்பதால்  கடைக்கு சுலபமாக வரமுடிவதில்லை.

வியாபாரம் சற்றும் லாபகரமாக இல்லாவிட்டாலும், கையில் உள்ள காசை வைத்து தொழில் நடத்திட முடியாது என்ற சூழல் எழுவதாலும், கடன் பெற்று தான் பலரும் தொழிலை நடத்திவருகின்றனர். அவ்வாறு நடத்தவில்லை என்றால்  வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் போகும். அவர்களை எங்கள் ஸ்தாபனங்கள் இழக்க நேரிடும். பல கிளைகளை மூடிவிட்டு, நம்மிடம் உள்ள தொழிலாளர்களை வைத்து வாடிக்கையாளர்களின் உணவு தேவையை முடிந்தவரை பூர்த்தி செய்து வருகிறோம்.  பொருளாதார ரீதியாக சவால்கள் பலவற்றை இந்த தருணத்தில் சந்தித்து வரும் எங்களுக்கு அரசிடம் சில கோரிக்கைகள் உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் சிலிண்டருக்கு மானிய விலை வழங்கி,  5% ஜி.எஸ்.டி கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு வர்த்தக கட்டணத்துடன்  மத்திய அரசு 18% ஜி.எஸ்.டி  வசூலித்து வருகிறது.

சாதாரண குடிமகன் தன் வீட்டில் சாப்பிடுவது போல் தான் சிற்றுண்டியிலும் சாப்பிடுகிறான். இந்த வரி ஏற்றம் அவனுக்குதான் அநீதி இழைக்கும். எனவே ஓட்டல்களுக்கும் 5% ஜி.எஸ்.டி கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும்.

பசுமை தீர்ப்பாயத்தினால் ஓட்டல்கள்  ‘பச்சை’ நிறமாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஓட்டல்களிலிருந்து வெளியேறும் தண்ணீர், ஒரு வீட்டிலிருந்து வெளியேறும் தண்ணீரின் தரத்திலேதான் இருக்கின்றது.  அனைத்து   உணவகங்களிலும்  கேஸ் மற்றும் மின்சாரத்தை மட்டுமே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். எனவே உணவகங்களால் காற்றும் மாசுபட வாய்ப்பில்லை.

ஆனால் அரசு 5 ஆண்டுகளுக்கான வாடகை கட்டணத்தையும் அதில்

செய்துள்ள முதலீட்டையும் கணக்கில் எடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு நிர்ணயித்து உரிம கட்டணமாக வைத்துள்ளது. இதை அரசு மறுபரிசீலனை செய்து, இந்த கட்டணத்தை தள்ளுபடி  செய்துவிட்டு, ஒரே ஒரு உரிமம் பெற்றுக்கொண்டால் போதும் என அறிவிக்க வேண்டும்.

ஓட்டல்கள் செலுத்தும் கடை வாடகையில் 18% ஜி.எஸ்.டி கட்டணம் செலுத்திட மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சாதாரண ஓட்டல்கள் இன்புட் வாட் வரியை எடுக்கமுடியாது.

ஆகவே அந்த கட்டணத்தை உணவகங்கள் செலுத்தவேண்டிய 5%  வரிக்கே குறைக்கவேண்டும்.  மாநில அரசு விதிக்கின்ற சொத்து வரி மற்றும் இதர வரிகளை தற்போதைய நிலை சரியாகும் வரை தள்ளி வைக்க வேண்டும்.

 

உணவுத் துறை பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்!

கே.டி.சீனிவாச ராஜா, கௌரவ தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்.

பொது முடக்கம் அறிவித்தபொழுது நாங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால்  அரசு அதை வழங்கவில்லை. நம் தென்னிந்திய உணவுகளை பொறுத்தவரை அவற்றை முன்னரே தயார் செய்து வைக்கமுடியாது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிறகு தான் எந்த பதார்த்தமாக இருந்தாலும் சமைக்கத்  தொடங்குவோம். இதற்கு நேரம் ஆகும். அதற்கு பின் அதை பார்சல் செய்யவும் காலம் ஆகும். முன்னரே செய்தால் உணவின் தன்மை குறையும்.

அதே போல், பொது முடக்கத்தின் போது எத்தனை ஆர்டர்கள் வருமென எதிர்பார்க்க முடியவில்லை.  நாம் இன்று ஒரு பதார்த்தம் விற்பனையாகும் என்று நினைத்து அதற்கு தேவையானவற்றை தயார் செய்தால், அந்த நாளில் அதற்கான ஆர்டர் வராமல் போய்விடுகிறது. இப்படி நிகழ்வதால் பல முறை உணவு பொருட்கள் வீணாகிறது, பல இன்னல்கள் ஏற்படுகிறது. உணவுத்துறையில் விவசாயி, உணவு தொழில் செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என மூவரும் ஒரு இணைப்பில் இயங்கி வருகின்றனர். இதில் யாருக்கு சிக்கல்கள் நேரிட்டாலும் அது மற்றவர்களையும் பாதிக்கும்.

எனவே அரசு எங்கள் துறை சார்ந்த பிரதிநிதிகளிடம்  நாங்கள் சந்தித்து வந்த, சந்தித்து வரும் சவால்களைப்  பற்றி அறிந்துகொள்ளவும், எங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல கலந்தாலோசனை நடத்த வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.