பேரன், பேத்திகளுடன் இருப்பதே தாத்தா, பாட்டிகளின் விருப்பம்

ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தைப் பருவத்தில் முதன்மையான இடத்தை பெறுவது தாத்தா மற்றும் பாட்டியாகத்தான் இருப்பார்கள். பேரக்குழந்தைகளை சரியாக கவனிக்காத அவர்களது மகன் அல்லது மகள்களை கடிந்துகொள்வதுடன், குழந்தைகளை அரவணைத்து, பாசத்தை காட்டுவதும் வீட்டுப் பெரியவர்கள்தான்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தனது தலைமுறைக்கு அறிவையும் அனுபவத்தையும் கடத்தும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வசதிகளின் மூலம் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. வீடியோ கால் மூலம் தாத்தா, பாட்டிகள் தங்கள் வெளிநாட்டில்  இருக்கும் பேரன், பேத்திகளுடன் உரையாடுகிறார்கள். வாட்ஸ் அப் மூலம் உள்ளூர் செய்திகள் மற்றும் படங்களை தங்கள் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இருப்பினும் தாத்தா, பாட்டிகள் என்றும் தங்கள் பேரன் பேத்திகளுடன் இருப்பதை மிகவும் விரும்புகின்றனர். பேரன் பேத்திகளும் தங்களது தாத்தா பாட்டிகளுடன் மிகவும் வெளிப்படையாக உள்ளனர். அவர்களுடன் இருப்பதை விரும்புகின்றனர். அதேபோல் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் குணாதியம் மற்றவர்களை விட உயர்ந்திருக்கும்.

எத்தனை தொழில் நுட்ப வளர்ச்சி வந்தாலும் கோடை விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று அவர்களுடன் பொழுது கழிப்பது ஒரு அலாதியான அனுபமாக தான் இருக்கும். இதனை பலரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இவர்களின் இறுதி காலகட்டத்தில் மழலைகளின் செல்லம் கொஞ்சும் மொழியும், கள்ளம் இல்லாத செயலும் தான் அவர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தரும். அவர்களை முதியோர் இல்லத்திலும், ஆதரவற்ற நிலையிலும் விட்டு செல்வது கொடுமையான ஒன்று. அதை செய்யாதீர்கள். நாமும் ஒருநாள் அவர்களை போல் ஏங்கினால் தான் அதன் வலி தெரியும். நினைவில் கொள்ளுங்கள்.