தடுப்பூசி எடுத்து கொள்பவர்களுக்கு குறைவான பாதிப்பே :ஆய்வில் தகவல்

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி  செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கமிருக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு, கொரோனவால் இறந்தவர்களின் உடலை  எரியூட்டுவதில் இட நெருக்கடி போன்ற   சிக்கல்களும் நம்மை நாளுக்கு நாள் அச்சுறுத்தி கொண்டே இருக்கின்றன.

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோமா என்ற அச்சம் பலரிடம் உள்ளது.

ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகும் சூழல் 94% குறைவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை குறைவாகவே உள்ளது. இதுவே இவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் எடுத்திருந்தால் 94% வரை பாதிப்பு குறைகிறது.

இதுபோலவே ஒரு கட்ட தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் 64% வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைமை குறைவாகவே உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்விலும் தடுப்பூசி செல்லுத்திக் கொண்டவர்கள் கொரோனவினால் பாதிப்படைந்து இருந்தாலும் அவர்களால் மற்றவர்களுக்கு பரவுவது 38 முதல் 49% வரை குறைவாக இருக்கிறது.

கொரோனாவின்  தீவிர பாதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பதன் காரணமாகவே  இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடுப்பூசிகள்  செலுத்துவதை தீவிரப் படுத்தி வருகின்றன.