சலூன் கடைகளுக்கு 3 மணி நேரம் அனுமதி வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை

சலூன் கடைகளைத் திறக்க தினமும் மூன்று மணி நேரமாவது அனுமதி வழங்க வேண்டும் என்று சலூன் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகரம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் சலூன் கடைகள் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

இதனை தொடர்ந்து அச்சங்கத்தின் உக்கடம் கிளைச் செயலாளர் சசிகுமார் செய்தியாளரிடம் கூறுகையில்: ஏற்கனவே கொரோனா முதல் அலையின் போது சலூன் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தோம். ஏற்கனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி உள்ளனர். பல கடைகள் திறந்து உள்ள போதிலும் சலூன் கடையை மட்டும் மூட சொல்வது நியாயமில்லை. அரசு கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நாங்கள் வேலை செய்துவருகிறோம். எனவே தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரம் மட்டும் பணி செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.