10 ஆண்டுகளில் கோவை வளர்ச்சி காணும்

ராணுவத் தொழிற்பேட்டைக்கு ரூ.20 கோடி நிதி

அடுத்த 10 ஆண்டுகளில் கோவை மிகப்பெரிய வளர்ச்சி காணும்

பொதுவாக கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு அரசின் ஆதரவு பெரிய அளவில் இல்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். இந்த நிலையில் கோவையில் அமையவிருக்கும் இராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்பேட்டை திட்டமானது இப்பகுதியை அதன் அடுத்த வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்லும் என இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் கோவையில் நடந்த தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கோவையில் அமையவுள்ள  ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்பேட்டை திட்டத்தின் முதல் படியாக ஒரு இன்னோவேஷன் சென்டர் அமைப்பதற்கு கோவையைச் சேர்ந்த கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியாவிற்கு இருபது கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சிறு, குறு மற்றும் உள்ள தொழில் நிறுவனங்கள் மிகுந்த பயன் பெறும் என்பதோடு இராணுவத்துக்கு தேவையான தளவாடப் பொருட்கள் உற்பத்தி மையமாகவும் இப்பகுதி வளர்ச்சி பெறும் என்பதையும் தெரிவித்தார்.

இராணுவத் தொழில் பூங்கா திட்டம் என்றால் என்ன?

கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள், இந்திய ராணுவம் தனக்கு தேவையான பொருட்களை இப்பகுதி சிறு, குறு தொழில் முனைவோர்களிடமும் தயாரித்து பெறும் வகையில்  ஒரு தொழில் வாய்ப்பை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதன் முதல்படிதான் கொடிசியா மூலமாக இங்கு இத்திட்டப்படி அமைய இருக்கும் இன்னோவேஷன் ஹப் எனும் தொழில்  ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சி மையமாகும்.

ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சில நிறுவனங்கள், குறிப்பாக எல் அண்ட் டி, எல்.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆய்வு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும் இப்பகுதியில் உள்ள மற்ற பல சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்திய இராணுவத்துக்கு சிறு, குறுதொழில் நிறுவனங்களும் கூட அவற்றின் தகுதிக்கேற்ப பொருட்களை தயாரித்து வழங்கும் இந்த வாய்ப்பு வந்தது.

இதற்கான திட்டம் ஒன்றை கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. அந்த திட்டத்தின் செயலாக்க வடிவம்தான் இந்த கோவையில் தொடங்க இருக்கிற இராணுவ தொழில் பூங்காவும், அதன் முதல் படியான ரூபாய் இருபது கோடி நிதி ஒதுக்கீடும் ஆகும்.

 

இது குறித்து கொடிசியா தலைவர் சுந்தரம் கூறியது:

நாங்கள் இப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்கள் பயன் பெறும் வகையில் கோவையில் ஒரு இராணுவத்தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதன் முதல்படியாக கொடிசியாவில் ஒரு இன்னோவேஷன் சென்டர் அமைய உள்ளது. இந்த மையம் நமது இராணுவத்துக்கு தேவையான தரமான பொருட்களை வழங்கும் உற்பத்தியாளராக இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கு தேவையான நிலம் ஆகியவற்றை அளித்து இதனை நடத்துகின்ற ஒரு அமைப்பாக கொடிசியா இருக்கும். அதற்கான தொழில் நுட்ப பின்புலம், அனுபவம் ஆகியன கொடிசியாவுக்கு உண்டு. ஏற்கனவே ஒரு சிறு தொழில்கள் சங்கமாக இருந்து கொண்டே ஒருநிலத்தை வாங்கி, தொழிற்கண்காட்சி போன்றவற்றை நடத்தி வரும் அனுபவம் கொடிசியாவிற்கு உண்டு. அந்த வகையில் இந்த இராணுவத் தொழில் பூங்கா திட்டம் சார்ந்த தொழில் முயற்சிகளையும் சிறப்பாக எடுத்துச்செய்ய இயலும்.

எடுத்துக்காட்டாக  ஒரு விமான பாகத்தை உற்பத்தி செய்ய ஒரு தொழில் முனைவோருக்கு இரண்டு ஆர்டர் கிடைத்தால் அவர் அதனை உடனே எளிதாக செய்து விடமுடியாது. இதில் பல சிரமங்கள் உள்ளன. அந்த நிலையில் அதே தொழில் முனைவோருக்கு வழிகாட்டி, தொழில்நுட்ப ஆய்வு செய்து பார்க்கின்ற வசதிகள் கிடைக்கும் போது எளிதில் செய்து முடிக்க முடியும். இந்த இன்னோவேஷன் சென்டர் அந்த வசதியை செய்து தரமுடியும்.

இங்கு ஒரு தொழில் முனைவோர் தனது பொருளைக் கொண்டுவந்து ஆய்வு செய்து, வடிவமைத்து, சோதித்து, இயக்கி ஒரு வெற்றிகரமான பொருளை உருவாக்க முடியும். அதற்கு தேவையான தொழில் நுட்ப மற்றும் வழிகாட்டும் வசதிகள் அங்கு கிடைக்கும். இதனை சிறு குறு தொழில் முனைவோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொடிசியாவுக்கு ஏற்கனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தொடர்பால் தொழில் சார்ந்த புதிய ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த வசதிகளை கொடிசியா உறுப்பினராக இல்லாத தொழில் முனைவோரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது குறித்த திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பியவுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது துறை அதிகாரிகளை இது குறித்து ஆய்வு செய்து, இதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டார். அதன் பிறகு விரைவாக செயல்பட்டதன் விளைவுதான் இந்த கோவையில் அமையவுள்ள ‘இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் சென்டர்’. மத்திய அரசின் இந்த ஒத்துழைப்பும் ஆதரவும் கோவை தொழில் முனைவோர்களிடம் பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த இன்னோவேஷன் சென்டரில் முதல் ஆண்டில் பத்து தொழில் முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருளை திட்டமிட்டு, வடிவமைத்து, இயக்கி, சோதித்து, வெற்றி கண்டு தயாரிக்கத் தொடங்கினால், அவரைப் பின்பற்றி இருபது, ஐம்பது, நூறு என தொழிலகங்களின் எண்ணிக்கை அதிகமாகும். இராணுவத்துக்கும் தங்களுக்கும் தேவையான தரமான பல பொருட்களை ஒரே பகுதியில் பெற முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதி ஒரு இராணுவ உற்பத்தி மையமாகத் திகழ்வதால் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு போன்றவையும் பெருகும். மேலும், இன்னும் 10 ஆண்டுகளில் கோவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்றார்.

 

 

இவர்கள் கூறியது:

வானதி சீனிவாசன், மாநிலப் பொதுச் செயலாளர், பாஜக:

மத்திய அரசு கோவையில் ராணுவத் தொழிற்பேட்டை மையம் அமைப்பதற்கு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிக்கான தொகையாகும். கண்டுபிடிப்பு மையம் அமைப்பதற்காக கொடுக்கப்பட்ட தொகையாகும். இதில், இராணுவ தளவாடங்கள் அமைப்பதற்கான பொருட்களை பற்றி ஆராய்ச்சி செய்யலாம். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து பரிசோதனை  செய்யலாம். இந்த தொடக்கமானது ஒரு விதையாகும்.

சர்வதேச அளவில் விற்பனை செய்யக் கூடிய பாதுகாப்பு பொருட்களை தயாரிப்பதற்கு இந்த மையம் ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் மூலம் அனுமதி பெற்ற வரவேற்கக்கூடிய மற்றும் அங்கீகாரம் வழங்கக்கூடிய ஒரு மையத்தின் ஆரம்பப்புள்ளி. இந்தியாவிலேயே முதன் முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக “கண்டுபிடிப்பு மையம்“ வழங்குவது இதுதான் முதல்முறை.

பாதுகாப்புத்துறைக்கு கோவையின் மீதான அக்கறையையும், நமது மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வரும் போதெல்லாம், கோவையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களையும், பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் மையம் அமையப் பெறுவதற்கான சூழல் அமைந்திருப்பதால் இங்கு “கண்டுபிடிப்பு மையம்“ வருவதற்கு காரணமாக உள்ளது.

கொடிசியா முன்னாள் தலைவர் ஏ.வி.வரதராஜன்:

தொழில் நகரமான கோவையில் ராணுவ ஆய்வு மையம் அமைப்பதை வரவேற்கிறோம். சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். தொழில் முனைவோர்கள் அனைவரும் மென்மேலும் வளர்ச்சியடைய இது ஒரு தொடக்கமாக இருக்கும். சிறு, குறு தொழில் முனைவோர்களை வளர்ச்சிப் பாதையில் கையைப் பிடித்துக்கூட்டி செல்வதுபோல் அமைய உள்ளது.

வனிதா மோகன், தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை:

கோவையில் MSME – Micro, Small and Medium Enterprises பல பிரிவுகள் இருக்கின்றன. தொழில் நகரமான கோவையில் ராணுவ ஆய்வு மையம் ஒரு சிறந்த வெளிபாடு ஆகும். இதனால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அரணாக அமையும்.

நந்தகுமார், நிர்வாக இயக்குனர், செல்வம் ஏஜென்சிஸ்:

கோவையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. குறிப்பாக MSME – Micro, Small and Medium Enterprisesக்கு அதிகம். தொழில்துறை வாரியாக கோவை பெரும் வளர்ச்சி காணப் போகிறது.

இயகோகா சுப்பிரமணியம், தலைவர், நன்னெறிக் கழகம்:

கோவைக்கு சிறு, குறு தொழில் முனைவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஊழலில் ஈடுபட்டார்கள். இந்த ராணுவ தளவாடங்களின் தொழிநுட்பம் கோவையில் அமைவதன் மூலம் ஊழலை தடுக்க முடியும். தொழில் நுட்பங்களுக்கு தேவையான பொருட்கள் சென்னை, ஓசூர் போன்ற ஒரு சில இடங்களில் கொள்முதல் செய்ய சொல்லும்படியாக இல்லை. ஆகவே வெளிநாட்டிலுருந்து கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கோவையில் உள்ள சிறு மற்றும் குறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ ஆய்வு மையம் இங்கே அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நடராஜ், செயலாளர், இந்திய வர்த்தக சபை கோவை :

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நல்ல ஊக்குவிப்பு அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மத்திய அரசு முதல் முறையாக இதற்க்கு ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சிகரமாக உள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முதல் அனைத்து தொழில் துறையினரும் பொருளாதார ரீதியாக சற்று தோய்வடைந்தாலும், மத்திய அரசு அளித்துள்ள இந்த வாய்ப்பு தொழில் துறையினர் அனைவருக்குமே மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது. மேலும், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் பயிற்சியும், திறமையும் கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுந்தர் முருகானந்தன், நிர்வாக இயக்குநர், வெர்சா டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட்:

புதிய கண்டுபிடிப்பு களுக்கு நுழைவாயிலாக இருக்கும். இங்கு தரமான பொருட்களை தயாரிப்பதற்கு சரியான அறிவுரையாளர்கள் இருக்க வேண்டும். மேலும், தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். இது போன்ற தொழில்நுட்ப மையங்கள் அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்கள், ஒரு சிறந்த தொழிலதிபராகும் வாய்ப்புகள் இருக்கும்.

குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பாதுகாப்பு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து அதிகம் கொள்முதல் செய்வதில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. எனவே, இது கோவையில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும், நன்மை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.