தடாகம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

தடாகம் காவல் நிலையத்திற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மேற்குமண்டல காவல்துறை தலைவர் தினகரன் இன்று (22.3.2021) துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும்   குற்ற சம்பவங்களை தடுக்கவும் சின்ன தடாகத்தில் புதிய காவல் நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த சூழலில்,  நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வாடகை கட்டிடத்தில் தடாகம் காவல் நிலையம் கடந்த  ஆண்டு  செயல்படத் தொடங்கியது.

சின்ன தடாகத்தில் புதிய காவல் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் விரைவில் கட்டப்படும் என தமிழக அரசின்  அறிவிப்பு வெளியாகி   காவல் நிலையத்துக்கு 84 சென்ட்  இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதில் காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் 88 லட்சம் செலவில் ரூ. 2,500 சதுர அடியில் 2 தளங்கள் கொண்ட காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தடாகம் காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை  கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி  தினகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் டி.எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள்  பால முரளி சுந்தரம், கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.