இரத்தினம் கல்வி குழுமம் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்

கோவையில், இரத்தினம் கல்வி குழுமம் மற்றும் ஃபிரெஷ் வாய்ஸ் ஆப் (Fresh Voice app) சார்பாக  தொடர்ந்து நான்காவது ஆண்டாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இரத்தினம்   கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (20.3.2021)   நடைபெற்றது.

வேலை வாய்ப்பு முகாமை, கல்லூரியின் தலைவர் மதன் செந்தில், தலைமை செயல் அதிகாரி மாணிக்கம் மற்றும் ஏகலைவ் டெக் பிரவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கோகுல் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.

இந்தியாவின் முன்னனி நிறுவனங்களான எல்.எம்.டபுள்யூ, வி கேப்பிட்டல்,கே.ஜி.ஐ.எஸ்.எல் உட்பட பல்வேறு  நிறுவனங்கள் கலந்து கொண்டு, நிறுவனங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கின்றன.

முகாம் குறித்து தலைமை செயல் அதிகாரி மாணிக்கம் கூறுகையில்: இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ துறையில் 2020 – 2021 ல் பட்டம் பெற்றவர்கள், மற்றும் அதற்கு முன்னதாக பட்டம் பெற்றவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு அதற்கும் கூடுதலாக  எதிர்பார்க்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.