ராமகிருஷ்ணா கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான பயிற்சிக்களம் திறப்பு!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமையன்று என்.சி.சி. மாணவர்களுக்கான தடைகள் பயிற்சிக்களம் (Obstacles Training Area) திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக எல்.சி.எஸ்.நாயுடு, குரூப் கமெண்ட் என்.சி.சி. குரூப் அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ், அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோகித் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மற்றும் மேஜர் தினேஷ் டேவிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள் செயல் விளக்கம் மற்றும் ஒத்திகைப் பயிற்சியை நடத்திக் காட்டினர். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் என்.சி.சி சார்பில் பங்கேற்ற மாணவர் அரவிந்த்-க்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர். இப்பயிற்சிக்களம் தேசிய அளவிலான தல் சயினிக் முகாமில் (Thal Sainik Camp) பங்கு பெறுவதற்குப் பயிற்சி அளிப்பதற்கான களமாக அமைந்துள்ளது. இதன் மூலம் பெருமளவு என்.சி.சி. மாணவர்கள் பயன்பெறுவர். இக்களம் கோவை மாவட்ட அளவில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.