மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தினால் மட்டுமே தொழில்துறை செழிக்கும்!

– ரமேஷ் பாபு, தலைவர், கொடிசியா

2021-ன் துவக்கத்திலே கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது என்ற செய்தி பொதுமக்களுக்கு எப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதோ, அதேபோல ஓர் ஆண்டாய் இன்னல்களை மட்டுமே சந்தித்து வந்த கோவை தொழில் துறைக்கு தற்போது நம்பிக்கை அளிக்கும் விதமாக மற்ற இடங்களில் இருந்து நல்ல ஆர்டர்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

அத்துடன், அவர்களின் சவால்களும் கணிசமாக குறையத் துவங்கியுள்ளது. தொழில் துறைக்கு, குறிப்பாக சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குத் துணையாக நிற்கும் கொடிசியா என்று அழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் தற்போது இருக்கும் சூழ்நிலைகளை எப்படி பார்க்கிறது எனவும், கோவையின் தொழில் வளர்ச்சியில் தற்போது கொடிசியாவின் பங்கு என்ன, சிறு தொழில்களுக்கு என்ன உதவி தேவை என்பதையும் கொடிசியா தலைவர் வி.க்ஷி.ரமேஷ் பாபு நம்மிடம் தெரிவித்த தகவல்கள் உங்களுக்காக:

தொழில் துறையின் தற்போதைய நிலை…

கடும் கொரோனா கால நெருக்கடிக்குப் பின்னர் தற்போது தொழில்துறையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி, நல்ல வளர்ச்சி தெரியத் தொடங்கியுள்ளது. சில துறைகளுக்கு நன்றாகவே வெளியே இருந்து ஆர்டர்கள் வருகின்றன.

ஆர்டர்களை வைத்து கணித்தால் பம்ப், பொறியியல் மற்றும் ஜவுளி ஆகிய  துறைகளில் நல்ல முன்னேற்றம் கடந்த 2 மாதங்களில் காணப்படுகிறது.

ஆனால் தற்போது நிகழும் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் சில நிறுவனங்களுக்கு சற்று சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

மூலப்பொருட்கள் சிலவற்றின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றத்தை சந்திக்கிறது, சிலவோ கிடைப்பதே இல்லை! இதுவே தற்போது தொழில்துறையில் இருக்கக்கூடிய பெரிய சவால்.

இந்நிலை புதிதாய் தொழில் துவங்க விரும்புவோரின் எண்ணிக்கையை பாதிக்குமா?

இந்த மூலப்பொருள் தட்டுப்பாடு/விலையுயர்வு வரலாற்றில் இதற்கு முன் காணாத ஒன்று. ஆனால்  இது இப்படியே இருந்துவிடப் போவதில்லை. இந்நிலைமை சீக்கிரம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இதனால் புதிய தொழில்முனைவோராக கால்தடம் பதிக்க  விருப்பப்படுவோர்கள் தயங்க வேண்டியது இல்லை. தொழில் துறையின் நிலை வரும் காலத்தில் நம்பிக்கை தரக்கூடிய காலமாகவே இருக்கும்.

இளம் தொழில்முனைவோரை உருவாக்க கொடிசியா எவ்வாறு உதவுகிறது ?

தொழில்முனைவோர் வளர்ச் சிக்கென பிரத்யேக மையம் கொடிசியாவில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இங்கு விருப்பமுள்ளவர்களுக்கு வெள்ளி க்கிழமை தோறும் எங்கள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சுமார் 8 பேர், எந்த மாதிரியான தொழில் நிறுவனத்தைத் துவங்க லாம், என்ன பொருட்களை உற்பத்தி செய்யலாம், அதை எவ்வாறு சந்தைப்படுத்தலாம், வேண்டிய கடன் உதவி பெறும் வழிகள் என்ன, ஜி.எஸ்.டி பதிவு செய்வது எப்படி, வருமான வரிகள், ஏற்றுமதி தொடர்பான கேள்விகள் எனப் பலவற்றை  பற்றிய தெளிவான வழிகாட்டுதலை புதிதாக முயற்சி செய்வோருக்கு மட்டுமல்லாது தேவைப்படும் தொழில்முனைவோருக்கும் வழங்குகிறார்கள்.

இதைத் தொடர்ச்சியாக  செவ்வென செய்துவருவதால், இதற்காக அரசாங்கத்திடமிருந்து விருது பெற்றுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமக்குத் தேவையான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்துவிட்டார்களா?

60 % வந்துவிட்டார்கள்.  கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்ற இவர்கள், தற்போது காலம் சாதகமானதாக மாறத் தொடங்கியதால் மெல்லமெல்ல வர ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனங்களுக்கு இவர் களுடைய உதவி தேவைப் படுவதால் பலரும் பல வழியாக இவர்களை அழைத்து வந்தனர். விமானம் வழியாக இவர்கள் வந்த நிகழ்வும் உண்டு. கோவை தொழில்துறையின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்  பங்களிப்பு முக்கியமானது. இவர்களின் பங்கு இல்லாமல் நிறுவனங்கள் எளிதாக இயங்குவது மிகக் கடினம்.

இவர்களில் பலரின் சொந்த ஊர்களில் இருந்து இயக்கப்படும் நேரடி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, பெங்களூரு வரை அவர்கள் வந்துவிடுகிறார்கள்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் கோவை வருவதில் தாமதம் ஏற்படுகிறது. நேரடி ரயில் சேவைகளை மீண்டும் துவங்கினால் பலரும் வர உதவியாக இருக்கும்.

ராணுவத் தளவாட உற்பத்தி மையம் தொடர்பான பணிகளின் நிலை?

சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஒசூர் ஆகிய பகுதிகளை மத்திய அரசாங்கம் ராணுவத் தளவாட உற்பத்தி மையமாக அறிவித்தது. இதன்மூலம் நம் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான உபகரணங்களை வெளிநாடுகளில் வாங்கும் நிலை குறையும். மேலும் மேற்குறிப்பிட்ட நகர உற்பத்தியாளர்களிடம் உபகரணங்கள் பெற்று, பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைய நம் நாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது.

இதற்குத் தேவையான பொருட்களின் உற்பத்தி அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பெருகிக்கொள்ளும் வண்ணம் கொடிசியாவில்  டிஃபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அட்டல் இன்குபேஷன் சென்டர் சமீபத்தில் துவங்கப்பட்டன. இவை இரண்டும் கொடிசியாவின் முதன்மைத் திட்டங்களின் அங்கமாக உள்ளது. பாதுகாப்புத் துறை என்பதால்  தற்போது இதில் முன்னேற்றம் மெதுவாகவே ஏற்பட்டு வருகிறது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறைக்கு சாதனங்கள் உற்பத்தி செய்வோர் எண்ணிக்கை கோவையில்  அதிகமாக இருக்கும். இதில் முன்னணி  மையமாக கோவையை உருவாக்குதே  எங்கள் இலக்கு.

இதற்காக, இத்துறையில் உள்ள தொடக்க நிலை நிறுவனங்களுக்கு   வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம்.

இதற்கான இன்குபேஷன் சென்டரை அரசு உதவியோடு உருவாக்கியுள்ளோம். இதில் தற்போது 4 துவக்க நிலை நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்து, அவர்களுடைய செயல் திட்டங்களைத் துவக்கிவிட்டனர். இன்னும் பத்து துவக்கநிலை நிறுவனங்களுக்கு நேர்காணல் நடத்தி வருகிறோம். இவர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்  இன்குபேஷன் சென்டருக்குள் வந்துவிடுவார்கள். நம் நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ரூ. 100 கோடி மதிப்பிலான 50 பொருட்களை  இறக்குமதிக்கு மாற்றாக கொடிசியா இன்னோவேஷன் சென்டர் மூலமாக நம் கோவையிலேயே உற்பத்தி செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.  இதற்காக 60 முதல் 70 நிறுவனங்கள் எங்களிடம் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு இந்த முயற்சியில் வழிகாட்ட ‘தர உத்தரவாத இயக்குநரகத்தைச்’  (டி.ஜி.கியூ.ஏ) சேர்ந்த வரதராஜன் அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு வருகிறார்.

தென்னிந்திய ராணுவத் தளவாட உற்பத்தி மையத்தில் உள்ள நகரங்களில் கோவை முன்னணி நகரமாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு உழைக்கிறோம். வடஇந்திய ராணுவத் தளவாட உற்பத்தி மையத்தை விட நாம் முன்னேற்றப் பாதையில் இருக்கிறோம் என்பது தற்போதைய சிறப்பு.

கொடிசியா தொழில் பூங்கா எந்தளவு வளர்ந்துள்ளது ?

350 உயர்தர தொழில் நிறுவனங்கள் அமையவும், அவற்றுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் கொண்ட 400 ஏக்கர் நிலப் பகுதிதான் கொடிசியா தொழில் பூங்கா. இது, கோவை கள்ளப்பாளையம் மோப் பிரிப்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ளது.

கொடிசியா உறுப்பினர்கள் யாரெல்லாம் நிலம் வாங்க பதிவு செய்திருந்தார்களோ அவர்களுக்கு இங்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களிலும் ஏற்கனவே 12 நிறுவனங்கள் கட்டிடங்களை எழுப்பிவிட்டனர்.

இன்னும் 12 நிறுவனங்களின் கட்டிடத் திட்டங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

இந்த தொழில் பூங்காவில் கொடிசியாவும் நிலம் பெற்று திறன் மேம்பாட்டு மையத்தையும், இன்குபேஷன் சென்டரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த தொழில் பூங்கா உருவாகுவதில் தமிழ்நாடு அரசின் உதவி மிக பெரியதாக இருந்தது.

மூலப்பொருளின்  விலையுயர்வு எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தியுள்ளது?

இந்த விலையேற்றம் வரலாறு காணாத விலையேற்றம். இதனால் சிறு, குறு தொழில்துறை சார்ந்தோர் சீரான தொழில் திட்டங்களை வகுத்து அதன்படி தங்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒருவர் அரசாங்கத்தினுடைய டெண் டரை  எடுத்திருந்தால், அவர் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஒப்பந்தம் செய்தபடி பொருட்களை அரசிற்கு வழங்க வேண்டும். இந்நேரத்தில் மூலப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்க, ஒப்பந்தம் செய்த நிறுவனமோ அவர்களின் பொருட்களினுடைய விலையை உயர்த்த முடியாது. அன்று நிர்ணயிக்கப்பட்ட டெண்டர்படியே கொடுக்க வேண்டும்.

டெண்டர் எடுக்காமல் இருக்கும் சிறு நிறுவனங்கள் வெளியே இருந்து நல்ல ஆர்டர்களை எடுத்திருப்பார்கள். இந்நிலையில் திடீரென ஆர்டர் கொடுத்தவரிடம் சென்று விலையை மறுபரிசீலனை செய்யுங்கள் எனவும் கேட்க முடியாது.

கோவை தொழில்துறை நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கு இப்போது நல்ல ஆர்டர்கள் வருகின்றன. ஆனால் தற்போது அவற்றை பூர்த்திசெய்யத் தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை அல்லது கிடைத்தாலும் மிக உயர்வான விலைக்கே கிடைக்கிறது.

இதுகுறித்து கொடிசியா சார்பில் என்ன செய்துள்ளீர்கள்?

சிறு, குறு, நடுத்தர நிறுவனத்துறை மத்திய அமைச்சர் அவர்களையும், மத்திய எஃகு அமைச்சரையும் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

சந்திக்க அவகாசம் கிடைத்தால் டில்லிக்கு இப்போதே செல்லத் தயாராக உள்ளோம். இணையதளம் மூலமாக கலந்தாய்வு நடத்தினால்கூட மூலப்பொருட்களின்  விலை உயர்வால் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் இன்னல்களைக் குறித்து எடுத்துரைப்போம்.

இந்திய அளவிலே தொழில்துறை சார்ந்த அனைவரும் இதுகுறித்து பேசி வருகின்றனர். மத்திய அரசாங்கம் இதில் தலையிட்டு விலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

தமிழக உள்துறை அமைச்சர் வேலுமணியிடம் இதுபற்றி தெரிவித்திருக்கிறோம். இவ் வளவு பெரிய பாதிப்பு இருப்பதை அறிந்துகொண்ட அவர், முதலமைச்சரின் கவனத்திற்கும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் இதைத் தெரியப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்கள், தொழில்துறை செயலர், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் மற்றும் தலைமைச் செயலரிடம் எங்களுடைய கோரிக்கைகளைத் தெரியப்படுத்துவதாக சொல்லி யிருக்கிறார்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த மூலப்பொருள் விலையுயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் போதும், அடுத்த இரண்டு ஆண்டிற்கு தொழில்துறை நல்ல நிலையை எட்டும் எனக் கணிப்புகள் கூறுகின்றன என்றார்.