உயிரா? பொழுதுபோக்கா?

கொரோனா எனும் கோவிட் 19 பெருந்தொற்றை சமாளிப்பதில் உலகெங்கும் உள்ள பல நாடுகள் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, தனது 130 கோடி மக்களுக்கும் சிறப்பாகவே சேவை செய்கிறது என்றே கூறலாம்.

குறிப்பாக, பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் விரைந்து செயல்பட்டு பலவித சேதங்களையும் தவிர்த்து வருவது பாராட்டுக்குரியது. ஒரு கட்டத்தில் மகாராஷ்டிரா, டில்லி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் இருந்த தமிழகத்தில் இன்று படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது கண்கூடாகத் தெரிகிறது.

குறிப்பாக, நம்மைவிட மக்கள்தொகை குறைந்த கேரளத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டும்போது, இங்கு ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருப்பது மாநில அரசின் செயல்பாட்டு வேகத்தைக் காட்டுகிறது. இதில் இரவு, பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு மக்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.

முன்னர் நடந்ததை யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. யாரும் வெளியே போக இயலாமல் ஊரடங்கு போடப்பட்டது. பிறகு படிப்படியாக அது தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்புவதற்குள் நாம் எவ்வளவு துன்ப தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம்… அரசும் மக்களும் எவ்வளவு சட்ட திட்டங்களை கடந்து வந்திருக்கிறார்கள்… இதில் எவ்வளவு இழப்புகளை குறிப்பாக தொழில் துறையினரும், விவசாயிகளும் சந்தித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அனைத்துமே கடுமையான பாதிப்புகள்தான். என்றாலும், இழப்புகளைத் தாண்டி நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கிறோம் என்று தற்போது நிம்மதி பெருமூச்சுவிட முடிகிறது.

அண்மையில் அந்த நிம்மதி பெருமூச்சைக் கெடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, தமிழகத் திரையரங்குகளில் நூறு சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்பதே அது. ஏற்கனவே ஐம்பது சதவீதம் இருக்கைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு நிரப்பிக் கொள்ளலாம் என்ற நிலையில், திடீரென்று இந்த நூறு சதவீத அறிவிப்பு இப்போது அவசியமா? என்றும், இன்னும் பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாக விலகாத நிலையில் இந்த அறிவிப்பு சரியானதல்ல என்று மருத்துவ வல்லுநர்கள் பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஏற்கனவே தொழில் துறை தள்ளாடும் நிலையில், நாட்டின், மாநிலத்தின் பொருளாதாரம் சோர்ந்து, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தேவையா? மற்ற துறைகளைப் போலவே திரைப்படத் துறையும் ஒரு துறை, அவ்வளவுதான். அதிலும் விவசாயம், மருத்துவம்போல இது ஒன்றும் மக்களுக்கான அடிப்படை சேவைத் துறை அல்ல; இந்த திரைப்படத் துறை ஆறு மாதம் இழுத்து மூடப்படுவதால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது. அதேநேரம், விவசாயத்தை அப்படிச் சொல்ல முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதிலும், பிரபல நடிகர் விஜய், முதல்வரிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தபிறகு இந்த அரசாணை பிறப்பித்திருப்பது பலவித ஐயங்களை எழுப்புகிறது. இத்தனை நாள் சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக அரசின் மீது கரும்புள்ளியாக இந்த அரசாணை படிகிறது.

உடனே இதனைத் திரைப்பட நடிகர்கள் அல்லது அந்தத் துறையின் மீதான எதிர்ப்பாக கருதக்கூடாது. பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் கூட, இந்த கொரோனா காலத்தில் தானும், தனது ரசிகர்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுக்கு இடையில் தனது அரசியல் முடிவையே கைவிட்டிருக்கிறார். அரவிந்த்சாமி போன்ற நடிகர்கள் இந்த நூறு சதவீதம் அனுமதி தேவை இல்லை என்கிறார்கள். நடிகர் சூர்யா, தான் சார்ந்த திரைத்துறையினரின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இணையத்தில் படங்களை வெளியிடுகிறார். தற்போதும் மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்கள் அமேசான் உள்ளிட்ட இணைய வழியாக வெளியாகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய் போன்றவர்கள் நூறு சதவீத அனுமதி கோருவது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. இவர்களின் படம் ஓடுவதற்காக, அதுவும் ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் படத்தைத் திரையிட்டு முடிந்தவரை காசு பார்க்கும் அற்பத்தனத்தைத் தவிர, இதில் வேறு ஒரு பெரிய நோக்கம் எதுவும் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் ஒன்றும் பெரிய அறிவாளிகளாகவும் தெரியவில்லை. ஏனெனில் நாட்டில், உலக அளவில் நடக்கும் பேரிடர் காலத்தை சிறிதும் கவனிக்காமல் தன் சுயநலத்தை மட்டும் பார்ப்பது அறிவு சார்ந்த செயலே அல்ல.

இந்திய மெடிக்கல் கவுன்சில் விஞ்ஞானி பிரதீப் கவுர் உள்ளிட்ட பல மருத்துவர்கள், வல்லுநர்கள் இதுபோன்ற மூடிய திரையரங்கில் நூறு சதவீதம் ரசிகர்களை அனுமதிக்கும்போது தொற்றுநோய் பரவும் வாய்ப்பு கண்டிப்பாக அதிகரிக்கும் என்கிறார்கள். மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் சேர்ந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பாதிக்கப்பட்டிருப்பது இங்கே கவனிக்க வேண்டியதாகும். தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்கப்போய் பல ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. அத்துடன், தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கலாமா என்ற கருத்துக் கேட்பு இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. அறிவு தரும் கல்வியே மக்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் பொழுதுபோக்கு அதைவிட அவசியம் என்று எந்த அறிவுள்ள மனிதரும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

கோவிட் 19 எனும் பெருந்தொற்றை சமாளிக்க எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது?  எத்தனை உயிர்களை இதில் நாம் பலி கொடுத்திருக்கிறோம்? எத்தனை குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறது? எத்தனை குடும்பங்களில் எவ்வளவு விழாக்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன? எளிமையாக எவ்வளவு திருமணங்கள் நடக்கின்றன? எத்தனை பேர் தொழில் வாய்ப்புகளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்? எவ்வளவு குடும்பங்கள் அமையின்றி தவிக்கின்றன? என்பதையெல்லாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அரசாங்கம் எத்தனை சிரமப்பட்டு ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இந்த நோய்க்கான மருந்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள் தொடங்கி, வென்டிலேட்டர் வாங்குவது, நோயாளிகளுக்கான சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்வது என்று எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். எத்தனை எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் குடும்பங்களைவிட்டுப் பிரிந்து கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒருமுறை தொற்றுநோய் வேகமாக பரவுமானால் அதை சமாளிக்கும் நிலையில் நாம் இருக்கிறோமா? நமது மருத்துவர்கள் இருக்கிறார்களா என்று யோசிக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற சிறிய நாடுகளில் இரண்டாம் அலை வீசும் புதிய வளர்ச்சி பெற்ற கொரோனா வைரஸால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆக, வளர்ந்த நாடுகளே இந்த நோயைக் கண்டு நடுங்குகின்றன.

இங்கே என்னவென்றால், யாரோ எழுதிக்கொடுக்கும் பஞ்ச் டயலாக்கைப் பேசி பணம் சம்பாதிப்பவர்கள்,  உலகில் நடப்பது எதுவும் புரியாமல் மக்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து தாங்கள் சுயநலக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். உயிரா? பொழுதுபோக்குத் தொழிலா? நாட்டு மக்களுக்கு எது முக்கியம் என்று இவர்போன்ற நபர்கள் யோசிக்க வேண்டும்.

ஒரு விவசாயியோ, தொழிலாளியோ தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு கோரிக்கை வைப்பதற்கும், இதுபோன்ற ‘ஜிகினா’ கலைஞர்களின் கோரிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. அவர்கள் கேட்பது வாழ்வாதாரம்; இவர்கள் கேட்பது முட்டாள்தனமான சுயநலம். தங்கள் கோரிக்கையை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது, அதை மறுக்கவில்லை. ஆனால், இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் நல்ல பாதுகாப்பான இடத்தில் வசதியாக அமர்ந்துகொண்டு அடுத்தவர் வாழ்க்கையைக்  குறித்து எள்ளளவும் சிந்திக்காமல், பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், பிற உயிர்களை அடகு வைக்கும் இதுபோன்ற முயற்சியில் எவ்வித தார்மிக நியாயமும் துளிகூட இருப்பதாகத் தெரியவில்லை.

இவர் படம் பார்ப்பதுதான் ஒன்றுதான் ரசிகனுக்கும், மக்களுக்கும் தற்போதைய அவசியத் தேவை என்று நினைக்கிறாரா? அப்படி அந்த படத்தில் இந்த சமூகத்திற்கு மிக மிக அவசியமான கருத்துகள் அடங்கியுள்ளனவா? அதைப் பார்ப்பதன் மூலம் அறிவு விருத்தியடைந்து மக்கள் ஆற்றல் பெறப் போகிறார்களா? என்றால் எதுவுமே இல்லை என்பதுதான் பதில். ஆக, எதற்காக விஜய் இந்த கோரிக்கைக்காக ஓடோடி உழைக்கிறார். இதுவரை எந்த மக்கள் பிரச்னைக்காக, எவ்வளவு முறை இதுபோல் முதல்வரை இவர் சந்தித்து, சாதித்து இருக்கிறார்? அப்படியும் ஒன்றும் இல்லை. முழுவதும் தனது வியாபார, இலாப நோக்கமே.

மக்களுக்காக இயங்கும் அரசு, மக்களைக் குறித்து மட்டுமே நினைக்க வேண்டும். இதுபோன்ற நபர்களின் கோரிக்கையைப் புறம்தள்ளி செயல்பட்டால் அரசுக்கு மக்களிடையே இருக்கும் நல்ல பெயர் தொடர்ந்து நீடிக்கும். நீதிமன்றமும், மக்களும் இப்பிரச்னையில் தலையிட்டு அறிவுறுத்திய பின்னர் அரசு தனது அறிவிப்பை மாற்றுவது, அரசுக்குத்தான் தலைகுனிவே தவிர, நடிகர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.