பொங்கல் பரிசு டோக்கனில் அமைச்சர் படம் : திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் முற்றுகை!

கோவை: பொங்கல் பரிசு டோக்கனில் அமைச்சர் படம் இருப்பதை கண்டித்தும், மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தும் திமுகவினர் கைது செய்வதை கண்டித்தும் திமுகவினர் கைது செய்யப்படுவதை கண்டித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று(29.12.2020) காலை திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 தொகை அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி தற்போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் டோக்கனில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி படம் உள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பணம் அதிமுக-வினர் சொந்தக் காசில் வழங்குவது போல் டோக்கன் வழங்குவதை கண்டித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர்  திடீரென அவர்கள் நுழைவு வாயிலை கடந்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே புக முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் இழுத்து மூடப்பட்டது. அதனை திமுகவினர் தட்டி திறக்குமாறு கோஷமிட்டனர். பின்னர், திமுகவினர் அதிமுக அரசையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள், கோவை போலீசார் அதிமுக அரசுக்கும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் துணை போவதை கைவிட வேண்டும். மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தும் திமுகவினர் கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுகவினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை நிறுத்தாவிட்டால் கோவை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். திமுகவினரின் இந்த திடீர் முற்றுகை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.