விண்ணைத் தொடும் விலையேற்றம் அணுகுண்டோ, சின்ன வெங்காயமோ!

 

ஆம். சின்ன வெங்காயத்தின் விலைதான் விண்ணைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு சாதாரண சாம்பார் வைக்கப் பயன்படும் இந்த சாதாரண சின்ன வெங்காயம் இன்று அசாதாரண விலைக்கு விற்கிறது. வாரம் ஒரு கிலோ என்றாலும் மாதம் அறுநூறு ரூபாய் வெங்காயத்துக்கு செலவு செய்வது எத்தனை பேருக்கு சாத்தியம்? பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு விற்ற வெங்காயம், படிப்படியாக விலையேற்றம் பெற்று, இன்று ஒரு கிலோ நூற்றைம்பது ரூபாய்க்கு விற்கிறது.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகள், பொருளாதார மேம்பாடு அடைய முடியாமல் தடுக்கும் தடைக்கற்களில் ஒன்று, இந்த நிலையற்ற தடுமாறும் விலைவாசி. இதைத் தடுக்க அல்லது சீரமைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காதவரை இந்த சிக்கல் தொடரும். வெளிமார்க்கெட்டில் அரிசி ஒரு கிலோ சுமார் ஐம்பது ரூபாய்க்கு விற்கிறது. அரசாங்கமோ, விலையில்லா அரிசி வழங்குகிறது. உணவுக்கு ஆதாரமான, பாரம்பரியப் பொருளான அரிசி ஐம்பது ரூபாய், சின்னவெங்காயம் நூற்றைம்பது ரூபாயா?

இது ஏன்? வெங்காயம் விலை குறையும்போது வாங்கலாம், அதிக விலை போனால் சாப்பிடாமல் விட்டுவிடலாமே என்று விதண்டாவாதம் செய்யலாம். ஆனால், இது சாப்பிடுவது தொடர்புடையது மட்டுமல்ல; விலைவாசி, பொருளாதாரம் தொடர்புடையது.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு, நாடெங்கும் ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழிலில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. பல இலட்சம் மக்கள் பலவிதமான தொழிலில் ஈடுபட்டு வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். பல இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இந்தத்துறை திகழ்கிறது. இன்று திடீரென்று மணல் விலை எகிறிவிட்டது. பத்து, பதினைந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு லாரி மணல் அப்படியே ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேல் போய்விட்டது. இரண்டு லோடு மணலுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வேண்டும். வாழ்க்கையில் எப்படியாவது ஒரு வீடு, கடன் வாங்கியாவது கட்ட வேண்டும் என்று தவமிருக்கும் ஏழை மக்களின் நியாயமான கனவில், இந்த மணல் விலையேற்றம், மண் அள்ளிப் போட்டுவிட்டது.

பத்து லட்சம் வங்கிக் கடன், அதற்கு பத்து வருட வட்டி என்று பார்த்து, பார்த்து ஜமுக்காளத்தில் வடிகட்டி கணக்குப் போட்டு வீடுகட்டத் தொடங்கியவர்கள் அதிர்ந்துபோய் நிற்கிறார்கள். இதனால் கட்டுமானத் தொழில் பாதியில் நிற்கிறது. வாங்கிய கடனுக்கு மேலும் வாங்க முடியாமல், வேலையும் தொடர்ந்து செய்ய முடியாமல் சாதாரண மக்கள் விழிக்கிறார்கள்.

இதற்கு ஒரே காரணம், மணல் விலையேற்றம். அந்த ஒரு விலையேற்றம் மற்ற எல்லாவற்றையும் பாதித்து, சீரழித்துக் கொண்டு இருக்கிறது. இதை கவனித்து சீர் செய்ய வேண்டியது அரசாங்கம். இல்லை என்றால் இது தொடர்பாக மேலும் பல சிக்கல்கள் எதிர்காலத்தில் உருவாகும். ஆற்றில் மணல் அள்ளுவது, மணல் கடத்தல் என்று ஆயிரம் இருக்கலாம். ஆனால், அதைத்தாண்டி தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. புதிய தொழில்நுட்பத்தால் எம்சாண்ட் செய்யலாம்; அல்லது வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம். ஏதோ ஒன்று, இறுதியாக மணல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வளவே.

இதைப்போலவேதான் சின்ன வெங்காயத்தின் விலை. ஏன் இந்த விலையேற்றம் என்று கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் அடுத்த முறை பல இலட்சம் விவசாயிகள் ஒரே நேரத்தில் சின்ன வெங்காயத்தையே பயிர் செய்து அதன் விலை வீழ்ச்சி அடையும். தெருவில் கொட்டி போராட்டம் நடத்துவார்கள். இதற்கு பதிலாக கத்தரிக்காய் விலையேறும். இப்படியே நிலைமை தடுமாறுமே தவிர, சீரான விவசாயமோ, வாழ்க்கையோ இருக்காது.

இலவச அரிசியோ, குறைந்த விலை அரிசியோ வழங்குவதன் உண்மையான காரணம், மக்களின் அடிப்படை உணவு தடையில்லாமல் தரமாக கிடைத்தால்தான், மக்கள் உடல்நலத்துடன் உயிர் வாழ முடியும் என்பதற்காகத்தான். அதை உறுதி செய்து மக்களுக்கு வழங்குவதற்குத்தான் இந்த உணவுப் பங்கீடு, ரேஷன் கடை, இலவச அரிசி எல்லாமே. அங்கே விலையைக் கட்டுக்குள் வைப்பதுபோல, மக்களின் அடிப்படைத் தேவைகள் சிலவற்றை அரசே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்ல உடல்நலம் கொண்ட மக்கள்தான், நாட்டின் உண்மையான சொத்து.

நல்ல உடல்நலம் பெற, சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவும், அதற்கான விலையும் தேவை. ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை என்பதை உணர வேண்டும். சென்ற வருடம் மழை பொய்த்தபோது, குடிநீருக்குப் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டு சாதாரண மக்கள்கூட காசு கொடுத்து லாரியில் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்படி எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு விலையேற்றத்தால், ஒரு எதிர்பாராத சூழலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் மாதம் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்கள் எப்படி உயிர் வாழ்வது? கடன் வாங்கியே காலத்தைத் தள்ள முடியுமா? வாழ்க்கையில் சேமிப்பு, முன்னேற்றம், நல்லது, கெட்டது சாதாரண மக்களுக்குக் கிடையாதா? ரேஷனில் இலவச அரிசி, மைசூர் பருப்பு, பாமாயில் சாப்பிட்டு விதி வந்தால் சாவதுதான் வாழ்க்கையா என்றால் இல்லை என்பதுதான் அரசாங்கத்தின் பதிலாக இருக்க வேண்டும்.

அதற்கு விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கை பல வகையிலும் தேவை. இதுவே நாட்டை வளப்படுத்த உதவும். இதற்கு மறுபடியும் சின்ன வெங்காயம்தான் உதாரணம். உறுதியாக இவ்வளவு ரூபாய் விலை என்று ஒவ்வொரு பொருளுக்கும் வல்லுநர்களும், அரசும் கூடி முடிவு செய்யட்டும். நமது விவசாயிகள் போட்டி போட்டு உற்பத்தி செய்வார்கள். தகுந்த விலை கிடைத்தால் அவர்களும் உயர்வார்கள். நாட்டு மக்களுக்குப்போக ஏற்றுமதியும் செய்யலாம். பொருளாதாரமும் பெருகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களும் பயன்பெறுவார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் நம் நாடு, நம் விவசாயம், நம் உணவு, நம் உடல்நலம் என்று எல்லாமே வளம் பெறும். மற்ற எல்லா வளங்களுக்கும் அடிப்படையானது மனித வளம். அது நல்லபடியாக அமைந்தால் நமது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அப்போதுதான் வளமான இந்தியா உருவாகும்.

அதைவிடுத்து இதுபோன்ற விலை யேற்றத்தால் மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கும் வரை, விலைவாசி விண்ணில் பறந்து கொண்டிருக்கும் வரை அனைவருக்கும் பாதிப்புதான். பொதுவாக, பாதிப்பு என்று பார்த்தால், அது அணுகுண்டோ அல்லது சின்ன வெங்காயமோ இரண்டுமே மக்களுக்கு ஒன்றுதான்.