கோவையும் எம்.ஜி.ஆரும்

அரசியல் வெற்றிக்கு, பலரும் பல வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர். அதில் இந்த நூற்றாண்டின் இணையற்ற வழிமுறையாக தமிழ்நாட்டில் நிலைபெற்றுள்ள வழிமுறை கலை வடிவம்.  குறிப்பாக, திரைப்படத்துறை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அந்த “கலையின் மூலம் அரசியல் வெற்றி” என்பதன் நிரந்தர அடையாளம்தான் எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் ஆளுமை. இன்றளவும் அரசியல் குறித்த பேச்சு வரும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். தொடங்கி, கமல், ரஜினி, விஜய் என்று திரைப்படத்துறையினரே குறிப்பிடுவதற்கான காரணம் எம்.ஜி.ஆர். என்ற திரைபிம்பத்தின் அரசியல் வெற்றி. அந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் மற்றும் திரைப்படத்துறை அடையாளமான எம்.ஜி.ஆர். எப்படி உருவானார்? அதற்கும் கோவை நகரத்துக்கும் என்ன தொடர்பு என்று கண்டறிவதே இந்த கட்டுரையின் நோக்கம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பொழுதுபோக்கு சாதனமாக ‘சினிமா’ தமிழகத்தில் அறிமுகமாகி இருந்த நேரம். தமிழ்நாட்டில் ‘நாடகம்‘ எனும் கலை வடிவம் சிறு, சிறு குழுக்களால் நடிக்கப்பட்டு வந்தது. பெண்கள் நடிகைகள் ஆக நடிக்கத் தொடங்காத காலம். சிறுவர்கள் பெண் வேடமிட்டு நடித்து வந்தனர். ஊர், ஊராக நாடகக் குழுக்கள் சென்று, சில வாரங்கள் தங்கி நாடகம் நடிப்பது வழக்கம். அப்படி ஒரு நாடகக்குழுவில் சிறுவராக இருக்கும்போதே நடிகராக இணைந்தவர்தான் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ராமச்சந்திரன். சுருக்கமாக எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து.

அந்த காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக இருந்த எம்.கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் எம்.ஜி.ஆரும், அவரது மூத்த சகோதரர் சக்கரபாணியும் நடித்து வந்தனர். கந்தசாமி முதலியாரின் ‘சதிலீலாவதி’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க கோவையைச் சேர்ந்த ஏ.எம்.மருதாசலம் செட்டியார் முடிவு செய்தார். அப்போது அந்த திரைப்படத்தில் ஒரு வேடத்தில் நடித்ததுதான் எம்.ஜி.ஆரின் முதல் திரையுலக பிரவேசம். இப்படியாக எம்.ஜி.ஆரின் முதல் முதலாளி ஏ.எம்.மருதாசலம் செட்டியார், முதல் படம் சதிலீலாவதி, முதல் ஸ்டுடியோ சென்ட்ரல் ஸ்டுடியோ என்று எல்லாமே கோவையில் அமைந்தது.

சதிலீலாவதி படத்தைத் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சிறிது கடினமான சூழ்நிலை. ஆனால் எம்.ஜி.ஆர். தனது திரைப்பட முயற்சியைக் கைவிடவில்லை. அப்போது அவரது திரைப்பெயர் ‘ராமசந்தர்’. கோவை ராமநாதபுரத்தில் சிறிய வாடகை வீடு. முயற்சி தொடர்ந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது.

1947 ஆம் ஆண்டு, ஓரளவுக்கு அறிமுகமாகி இருந்த எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் வாய்ப்புத் தேடி வந்தது. ஆம். ‘ராஜகுமாரி’ எனும் படத்தை கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்தது. அன்றைய பிரபல நடிகர்களான பி.யூ.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடிப்பதாக இருந்தது. அந்த திட்டம் ஏதோ காரணங்களால் கைவிடப்பட்டு நடிகர்கள் விலகிக் கொள்ள, இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி, எம்.ஜி.ஆரை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தார். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக பிற்காலத்தில் திரைப்படத்துறையிலும், அரசியலிலும் வலம்வந்த எம்.ஜி.ஆர் முதன்முறையாக கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

ராஜகுமார்  படத்தின் மூலம் இன்னொரு ஆளுமையும் தமிழகத்துக்கு அறிமுகமானார். அப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதிதான் அவர். எம்.ஜி.ஆரும், கலைஞரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அந்த நட்பு எம்.ஜி.ஆரை திராவிட இயக்க அரசியல் கொள்கையிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திய திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்டு செல்லும் இயக்கங்களை வழிநடத்தும் பொறுப்பை பிற்காலத்தில் ஏற்ற கலைஞர் கருணாநிதியும் எம்ஜிஆரும் ஒரே படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்றனர்.

ஓரளவு பெயர்பெற்ற நடிகராக இருந்தாலும் எம்ஜிஆருக்கு மீண்டும் ஒரு பின்னடைவு. ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வந்தன. இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு ‘பிரேக்‘ கோவையில் தயாரிக்கப்பட்ட ‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மூலம் கிடைத்தது. 1956ம் ஆண்டு வெளிவந்த அந்த படம் எம்.ஜி.ஆரை, ஒரு ஆபத்பாந்தவனாக, அநாதைகளின் இரட்சகனாக, தமிழ்த் திரைப்படத் துறையில் ‘ராபின் ஹூட்டாக’ கொண்டு சென்றது. பிற்காலத்தில் வந்த பல எம்ஜி.ஆரின் படங்களின் வெற்றி பார்முலாவான ‘சோலோ சாங், மாறுவேடம், கிளைமேக்ஸ் ஃபைட்’ என்று பலவும் இந்த திரைப்படத்தில்தான் தொடங்கியது.

தமிழ்த் திரைப்படத் துறையோடு எம்ஜிஆரும், கோவையிலிருந்து, சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அப்போதும் அவரைத் தூக்கி நிறுத்திய, புகழ்பெற்ற ‘த’ வரிசை படங்களைக் கோவையைச் சேர்ந்த சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்தார். எம்ஜிஆர் புகழின் உச்சத்துக்குப் போனார். மக்கள் திலகமாக மாறினார். சதிலீலாவதி அறிமுகம் தொடங்கி, ராஜகுமாரியில் கதாநாயகன், மலைக்கள்ளனின் ராபின்ஹூட் பார்முலா, தாய்க்குப்பின் தாரம் தொடங்கி தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்தப் படங்கள் என்று எல்லாமே கோவையோடு தொடர்பு கொண்டு நடந்தேறியவை.

அதனால்தான் அவரது சகாக்களிடம் பேசும்போதுகூட, அவரது ஊராக கோவையைத்தான் குறிப்பிடுவார். கோவை நகரத்தில் வசிக்கும் பலர் அவரது நண்பர்கள், அதுவும் பல சாதாரண மனிதர்கள்கூட ‘எம்ஜிஆர்’ தனக்கு நன்கு தெரியும் என்று கூறும் அளவுக்கு. காரணம், அவரது இளமைப் பருவமும் திரைப்பட முயற்சியும் கோவையில் நிகழ்ந்தது. அந்த தாக்கம் 1967ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றியின் பங்களிப்பாக, 1977ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியாக, அவர் மறைந்தாலும் அவரது அரசியல் இயக்கத்தின் வெற்றியாக செல்வி ஜெயலலிதா தொடங்கி திரு. எடப்பாடி பழனிசாமி வரை தொடர்கிறது. இந்தத் தருணத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கோவையும் பெருமையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.