கண்ணாடி துண்டுகள் மீது தொடர்ந்து 3 மணி நேரம் கரகாட்டம் ஆடி உலக சாதனை

கிராமிய புதல்வன் கலையரசன் கண்ணாடி துண்டுகள் மீது தொடர்ந்து மூன்று மணி நேரம் கரகாட்டம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

கோவை : நாட்டுப்புற கலைகளில் தொடர்ந்து உலக சாதனைகளை செய்து வருபவர் கோவையை சேர்ந்த கலையரசன். காந்திமாநகரில் கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் இளைய தலைமுறை இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்று தருவதோடு கிராமிய கலைகளில் பல சாதனைகளை செய்ய ஊக்கமும் அளித்து வருகிறார். இந்நிலையில் இவர் மேலும் ஒரு சாதனை முயற்சியாக தலையில் கரகம் வைத்தபடி கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி தொடர்ந்து மூன்று மணி நேரம் கரகாட்டம் ஆடி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை தீர்ப்பாளர் தியாகு நாகராஜன் வழங்கி கவுரவித்தார். பின்னர் கலையரசன் தனது சாதனை முயற்சி குறித்து கூறுகையில், புற்று நோய் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அண்மையில் புற்றுநோயால்  மறைந்த திரைப்பட நடிகர் தவசிக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.