ஆணாதிக்கத்தை உடைத்து பெண்ணுரிமையை போற்றிய சிலம்பொலி

சிலம்பொலி செல்லப்பனாரின் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான கொங்குமாமணி சிலம்பொலி செல்லப்பனார் தன்னுடைய வாழ்நாள் சாதனையாய்ப் படைத்துள்ள ”செம்மொழித் தமிழ் அகப்பொருள் களஞ்சியம்’ – 6000 பக்கங்கள் – பதினான்கு தொகுதிகள் நூல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை லீ ராயல் மெரிடியன் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடான இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு, கொங்குமாமணி டாக்டர் பழனி பெரியசாமி தலைமை வகித்து சிலம்பொலியாரின் ஒப்பற்ற சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும், சாதனைகள் ஒவ்வொன்றும் கின்னஸ் புத்தகத்தில் பதிவுபெற்றிட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் க.அன்பழகனார் நூலை வெளியிட்டுப் பேசுகையில்: சிலம்பொலி செல்லப்பன் உள்ளும்  புறமும் தமிழை நிரப்பி, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழை, தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மிக அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்” என்றார். முதற்பிரதியைப் பெற்றுக்கொண்ட புதுச்சேரி சட்டசபைத் துணைத்தலைவர் சிவக்கொழுந்து உரையாற்றுகையில்: பலருக்கு 60 வயதில் தடுமாற்றம் வரும். சிலம்பொலியாருக்கு, 90 வயதிலும் தடுமாற்றம் வராமல் தமிழ் காத்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மிக அருமையானதொரு வாழ்த்துக் கவிதை வழங்கினார். கவிஞர் பொன்.செல்வகணபதி கவிதை நடையிலும், சிந்திக்கவைக்கும் உரைநடையிலும் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாகச் சிந்தனைச் சிறப்புரையாற்றிய கவிப்பேரசு வைரமுத்து கூறியதாவது: 90 வயது கொண்ட சிலம்பொலியாரின் ஆய்வு நூலை 94 வயது கொண்ட பேராசிரியர் அன்பழகனார் வெளியிடுவது தமிழுக்குக் கண்கொள்ளாக் காட்சி. தொகுத்தல், கற்றல், ஆய்தல், தெளிதல், தெளிவித்தல் என ஐந்து அடுக்குகளில்

உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் சங்க இலக்கியம் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள மிகப் பெரிய உதவியாக இருக்கும். இதில் சிலம்பொலியார் ஆணாதிக்கச் சிந்தனையை உடைத்துப் பெண்ணுரி மையைப் போற்றியுள்ளார்.

இந்த நூலுக்காக 20 ஆண்டுகளுக்குமேல் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். 20 ஆண்டுகள் தமிழ் இலக்கியத்தில் தோய்ந்தும் ஆய்ந்தும் எழுதப்பட்டுள்ள இந்நூல், சங்க இலக்கியத்தைவிட்டுத் தள்ளி நிற்கிற ஒரு தலைமுறையை வாசிக்கவைக்கும் நல்வரவாக வாய்த்திருக்கிறது.

சிலம்பொலியார், மறைமலை யடிகளாரின் ஆய்வு நெறியை அடியொற்றி, எழுத்தெண்ணிச் சங்க இலக்கியத்தைத் தேர்ந்து தெளிவுரை எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட எளிய உரை இலக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. பழைய இலக்கியங்களைப் பழஞ்சொற்களோடு வாசிக்க இதுபோன்ற எளிய உரை தேவைப்படுகிறது. இது ஒரு பெரிய முயற்சி. ஒரு பல்கலைக்கழகம் ஆற்றவேண்டிய பணியைத் தனி மனிதராகச் சாதித்திருக்கிறார்.

திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன் விழாவிற்கு முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்.பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளர் ப.செல்லப்பன் நன்றியுரை வழங்கினார். விழா மேடையில் கவிப்பேரசு அரசு வைரமுத்து அவர்களிடமிருந்து, எஸ்.கே.எம். மயிலானந்தம் சார்பாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், என்எஸ்ஐடி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எம்.முருகேசன்,  நமது சங்கத்தின் முன்னாள் செயலாளர் கொங்குச்சுடர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் க.ஸ்ரீதரன், ஈரோடு யுஆர்சி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்.

சி.த தேவராசன், நாமக்கல் கம்பன் கழகத்  தலைவர் வ.சத்தியமூர்த்தி, என்டிசி லாஜிஸ்டிக்ஸ்  நிறுவனத்தின் தலைவர் கே.சந்திரமோகன், கோவை ஜேஆர்டி ரியல்டர்ஸ் தலைவர் டாக்டர் ஜே.ராஜேந்திரன், ரெட்டிப்பட்டி பாரதி கல்வி நிறுவனங்கள் தலைவர் மு.இராமசாமி, சென்னை மாணவர் நகலகம் (Students Xerox) நிர்வாக இயக்குநர் அ.சௌரிராஜன், பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.பெரியசாமி, சென்னை சன் பிரைட் இண்டஸ்ட்ரிஸ் நிர்வாக இயக்குநர், ஆர். சண்முகவேலு  சார்பாக அவர் மனைவி சோபிலா, வீங்கோய்மலை திருக்குறள் மன்றச் செயலாளர் மு.இளங்கோவன், சென்னை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத் தலைவர் கவிஞர் இளவரச அமிழ்தன் ஆகியோர் நூலின் படிகளைப்  பெற்றுக்கொண்டனர்.

நூலாக்கத்திற்குத் துணை நின்ற பேராசிரியர்  மறைமலை இலக்குவனார், பேராசிரியர் இராம.குருநாதன், கவிமாமணி தேனி திருமாவளவன், பழனியப்பா பிரதர்ஸ் ப.முத்துக்குமாரசாமி,  பொறியாளர்  பிஎஸ்ஜி அ.ரவீந்திரன், ரமணா கிராபிக்ஸ்  இந்திராகாந்தி ரவி, பழனியப்பா பிரதர்ஸ் சுயம்புலிங்கம் ஆகியோர் விழா மேடையில் சால்வை மற்றும் கேடயத்துடன்  பாராட்டப்பட்டனர். இந்த இனிய விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிலம்பொலியார் மகன் செ.கொங்குவேல், மகள் முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், நாமக்கல் ராஜா ஆர்ட்ஸ் ராஜா, லீ ராயல் மெரிடியன் நிர்வாக இயக்குநர் சென்னிமலை முதலானோர் மிகச் சிறப்பாக அனைவரும் வியந்து போற்றும் வகையில் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை, வாசுகி பத்ரிநாராயணன், தமிழன் ராகுல்காந்தி ஆகியோர்  சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.