ஸ்மார்ட் சிட்டியும், தொழில் வாய்ப்புகளும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு, அறிமுகப்படுத்திய திட்டங்களில் முக்கியமானது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும். ஒரு நகரப்பகுதியின் வாழ்வியல் தன்மையை, தரத்தை, இயங்கும் முறையை, தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப முறையின் மூலம் எவ்வாறு உயர்த்துவது என்பதுதான் இதன் நோக்கம் என்று கூறலாம்.

இதற்கு எடுத்துக்காட்டாக உலகின் பல நகரங்களைக் கூறலாம். பீஜத்ங், ஷாங்காய், ஹாங்காங், சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக் என்று பல ஆசிய நகரங்கள் இவ்வாறு மாற்றம் பெற்று வளர்ச்சி பெற்றவையாகும். 1990களில் அந்த நகரங்கள் இருந்த நிலைக்கும், தற்போதுள்ள நிலைக்கும் இடையே பெரிய மாற்றங்கள் தெரிகின்றன.

இந்த திட்டம் மூலம் நகர்ப்புற வளர்ச்சியின் பல அம்சங்கள் தரம் உயர்ந்தவையாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக, தேவையான அளவு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல், தடையில்லா மின்சாரம், பொது சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, மேற்சொன்ன அம்சங்களைத் தொலைநோக்கோடு திட்டமிட்டு மேம்படச் செய்வதுதான் இதன் முன்னுள்ள பணியாகும்.

இத்திட்டம் மூலம் விளையும் நன்மைகள் என்று பார்த்தால், தற்போதுள்ள நகர நெருக்கடி, பல துறைகளிலும் குறைந்து, இறுக்கம் தளரும். நகரத்தின் இயங்கும் தன்மை எளிதாகும். பொதுவான வளர்ச்சி பெருகும். வேலைவாய்ப்புகள் உருவாகும். எடுத்துக்காட்டாக பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதன் மூலம், குடிநீர் சிக்கல் தீரும். சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்கள் குறையும், உடல் நலம் காக்கப்படும். அதன் மூலம் உற்பத்தியும் வளர்ச்சியும் பெருகும். தண்ணீர், மின்சாரம் வழங்கும்போது ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும்போது சரியான அளவீடு செய்து குறைபாடுகளைக் களைந்து முறையாக கட்டணம் வசூலிக்க முடியும்.

இந்தியாவில் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்றிலேயே கோவை நகரம் தேர்வு பெற்றுவிட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது ஒவ்வொரு நகரமும் தனக்கான முன்னுரிமை கொண்ட திட்டங்களைப் பரிந்துரைத்து செயல்படுத்த வழிவகை உண்டு. இந்த திட்டத்தை உள்ளூர் அளவில் வடிவமைத்து, மாநில, மத்திய அரசு வழியாக செயல்படுத்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை நகரம் நீராதாரங்கள் மேம்பாடு தொடங்கி, குடிநீர், போக்குவரத்து, குப்பை மேலாண்மை என்று பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி, கோவை நகரத்துக்கு இன்னொரு பெரிய வாய்ப்பும் மறைமுகமாக காத்திருக்கிறது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் போது அதில் உருவாகும் தொழில்வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அந்த அளவுக்கு இங்கு சிறு தொழிலகங்கள் பல வகையானதாக ஏராளமாக உள்ளன. ஆனால் இது குறித்து பெரிய அளவில் விவாதமோ ஆய்வோ இதுவரை செய்யப்படவில்லை என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

எடுத்துக்காட்டாக, சாலைகளில் உள்ள பொது விளக்குகள் தொடங்கி, பல இடங்களில் எல்.இ.டி விளக்குகள், சோலார் மூலம் மின்சாரம், ஸ்மார்ட் மீட்டர் என்று மின்துறை சார்ந்து பல திட்டங்கள் நிறைவேறும். இவற்றுக்குத் தேவையான விளக்குக் கம்பம் தொடங்கி எல்.இ.டி லைட் மீட்டர் என்று பலவற்றையும் கோவை நகரப்பகுதியில் உள்ள சிறு தொழிலகங்கள் செய்து வழங்க முடியும். இதுபோலவே குடிநீர் வழங்கல், குப்பை மேலாண்மை, போக்குவரத்து என்று பல துறைகளுக்கும் ஏராளமானப் பொருட்களின் தேவை இருக்கிறது. பல்வேறு வகையான இயந்திரவியல், மின்னணு கருவிகள் உபகரணங்கள் என்று தேவைகளை கோவை தொழிற்சாலைகள் ஈடு செய்ய முடியும்.

ஆனால் இதுபோன்ற ஒரு நோக்கில் பெரிய அளவில் எவ்வித கருத்தும் தொழில்துறைக்கும், மாநகராட்சி உள்ளிட்ட அரசு நிர்வாகங்களுக்கும் இடையே பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. கோவை நகரத்தின் வளர்ச்சியில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சீமா, சைமா, சிஐஐ உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் இதுபோன்ற அமைப்புகளையும், உறுப்பினர்களையும் ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகளில் இணைத்துக்கொள்வது இரு புறமும் பயனளிப்பதாக இருக்கும்.

இதுகுறித்து சில பொதுவான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, குறிப்பான செயல்திட்டத்தோடு கூடிய வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அமைய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் உண்மையான பங்களிப்பு இல்லாத எந்த பொதுத் திட்டமும் பயன்தராது, வெற்றி பெறாது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் அளவு வளர்ந்துள்ள நாம், உள்ளாட்சி நிர்வாகத்தால் தொடங்கி நடத்தப்படும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்று நம்புவோம்!