நீரிழிவு நோய் குறித்து ஒரு பார்வை: கேஎம்சிஎச் மருத்துவர்களுடன் நேர்காணல்

நீரிழிவு நோய் இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு!

சர்க்கரை நோய் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் சிவஞானம்.

அவர் கூறியதாவது: ‘நோய்களில் தொற்று நோய் மற்றும் தொற்று அல்லாத நோய் என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இதில் தொற்று நோயை விட தொற்று அல்லாத நோய்களான சர்க்கரை, இரத்த அழுத்தம், புற்று நோய் இவை அனைத்தும் மிக முக்கிய நோய்களாகக் கருதப்படுகின்றன. இந்த நோய்களுக்கான மருந்துகள் நீண்ட காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அனைத்து மருத்துவமனைகளிலும் இந்நோய்க்கான சிறப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும் இந்நோய்க்கான சிக்கல்கள் மிகவும் வலியது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் (endometrial cancer), சிறுநீரகப் புற்றுநோய் என இந்த புற்றுநோய்கள் நீரிழிவு உள்ள பெண்களுக்கு அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு அதிக அளவு பாதிக்கிறது. இவ்வகையான நீரிழிவு இரண்டாம் வகையைச் சார்ந்தது.

ஏன் பெண்களுக்கு புற்றுநோயுடன் நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகிறது?

இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

  1. உயர் இன்சுலின்
  2. உடலில் இன்சுலின் அளவு அதிகமாகக் காணப்படுவது.
  3. இன்சுலின் அதிகமாக இருந்தாலும் வேலை செய்யாத நிலை.
  4. இன்சுலின் வளர்ச்சி காரணி

இந்த காரணிகள் புற்று நோயுடன் தொடர்புடையது. பொதுவாக பெண்கள் தங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு, சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் (estrogen) குறைவாக இருக்கும். ஆனால் நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் (estrogen) அதிகமாகின்றன. இவை சில புற்று நோய்களைப் பரப்புகின்றன. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் (endometrial cancer) ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோய் கொண்ட அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு, சாத்தியமான புற்று நோய் (possible malignancy) உள்ளதா என்பதை screening procedure  மூலமாக வருடத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். நம் உடலில் மற்ற உறுப்புகளை பரிசோதிப்பது போல, பெண்கள் தவறாமல் வருடம் ஒரு முறை அனைத்து உடல் உறுப்புகளை பரிசோதிப்பது மிகவும் நல்லது. சில காரணிகள் புற்றுநோய்க்கும், சர்க்கரை மற்றும் உடல் பருமனுக்கும் தொடர்பு உடையதாக இருக்கும். எனவே அலட்சியமாக இருக்கக்கூடாது.

அதேபோல், டைப் 2 நீரிழிவு நோய் இன்சுலினைச் சார்ந்து மாறுபடுகிறது. பரம்பரையாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக்கூடியது இந்த சர்க்கரை நோய். இது 25 லிருந்து 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. மரபணுக்கள் மூலமாக ஏற்படும் நோயாளிகளுக்கு பெரிய அளவு அறிகுறிகள் இருக்காது. ஆனால் இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு எடை குறைதல், அதிகமாக பசி எடுத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அதை அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) உள்ளவர்களுக்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் சர்க்கரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.

ஆனால் இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு முதலில் இன்சுலின் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு மருந்துகள் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுகிறது. எனவே அனைவரும் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் சர்க்கரை நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

 

இன்சுலின் செலுத்துவது எளிது!

மருத்துவ அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் கண்டுபிடிப்புகளும் சிகிச்சை முறைகளை எளிதாக்கி உள்ளன. சர்க்கரை நோய் சிகிச்சை முறை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சர்க்கரை நோய் கொண்டோர் பெரும்பாலும் உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் உபாதையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சிலருக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர இன்சுலின் (insulin) தேவைப்படும். உதாரணமாக Type 1 சர்க்கரை நோய், நாட்பட்ட Type 2 சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் குறைபாடு உள்ளவர்கள் இன்சுலின் எடுத்து கொள்ள வேண்டி இருக்கும். இன்சுலின் மற்றும் GLP1 RA ரக மருந்துகளை ஊசி மூலமாகவே கொடுக்க முடியும். இம்மருந்துகளை வாய் வழியே எடுக்க முடியாது.

இன்சுலினை உபயோகிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அடிப்படையாக புட்டியில் உள்ள மருந்தை சிரிஞ் (syringe) மூலம் தேவையான அளவு எடுத்து தோலின் கீழுள்ள கொழுப்பு பகுதியில் செலுத்தலாம். இம்முறையை அதிக செலவில்லாமல் பெரும்பாலானோர் உபயோக படுத்த முடியும். ஆனால் இதனை பராமரிப்பதும், பயணம் மற்றும் வேலை இடங்களுக்கு எடுத்து சென்று உபயோகப்படுத்துவதில் சிரமம் இருக்கும்.

இதன் சற்றே மாறுபட்ட நுட்பமாக இன்சுலின் பேனாக்கள் (insulin pen devices) உள்ளன. இவற்றை உபயோகித்தல் எளிது. இதன் ஊசியின் அளவு சிறிதென்பதால் வலியும் குறைவு.  எங்கு சென்றாலும் சட்டை பையில் வைத்து எடுத்தாள முடியும். பராமரிப்பதும் எளிது.  ஒரே முறை உபயோகிக்கும் வகையில் டிஸ்போஸபிள் (disposable) பேனாக்களும், பலமுறை பயன்பட ரீயூசபில் (reusable) பேனாக்களும் கிடைக்கும். சிரிஞ்சுடன் ஒப்பிடும் போது பேனாக்களின்  மூலம் அதிக அளவு மருந்தை ஒரே சமயத்தில் செலுத்த முடியும். விலை சற்றே அதிகம் என்ற போதும் அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய தொழில்நுட்பம் ஆகும்.

இன்ஸுலினை தொடர்ச்சியாக செலுத்தும் முறை (continuous subcutaneous insulin infusion) சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும். உதாரணமாக டைப்1 சர்க்கரை நோய், கர்ப்பிணிப் பெண்கள், அடிக்கடி சர்க்கரை தாள் நிலை ஏற்படக்கூடியவர்கள். இதன் மூலம் ஒரு நாளில் பல முறை ஊசியிடுதல்  தவிர்க்கப் படுகிறது. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க இது உதவுகிறது. ஆனால் இதற்கு ஆகும் ஆரம்பகட்ட செலவு சற்றே அதிகம். செயற்கை கணையம் (artificial pancreas) என்பது இதன் சற்றே மேன்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் உள்ள இன்ஸுலின் பம்ப் சர்க்கரையை இரத்ததில்  அளவிடும் சென்சாருடன் (sensor) இணைக்கப்பட்டு அதற்கேற்ப இன்ஸுலின் அளவு தீர்மானிக்கப்பட்டு தானே செலுத்தப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவிடும் மாணிகளிலும் (glucometers) பலவகையான தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் குறைபாட்டை சிறப்பாக மேலாண்மை செய்ய உதவுகின்றன.

சர்க்கரை நோயை குணப்படுத்த 5210வை பின்பற்றுங்கள்

“சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அளவு, உணவு பற்றிய பிரச்னை மட்டுமல்ல. நம் உடலின் பல உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய விஷயங்களும் இதில் அடங்கியுள்ளன. உதாரணமாக, இரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்பு ஏற்படுத்துதல், கை கால் விளங்காமல் போதல், கண் குருடாதல், சிறுநீரகம் பழுதாதல், கால்களை எடுத்தல், புற்றுநோயை ஏற்படுத்துதல் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு மிகப்பெரிய கொடிய நோயாக விளங்குகிறது.

குறிப்பாக, பெண்களுக்கு. ஒரு பெண்ணின் ஆரோக்கியம் என்பது அவர்கள் வாழும் வீட்டின் ஆரோக்கியம் என்று கூறுவார்கள். அவ்வாறு போற்றப்படும் பெண்களின் நிலை தற்போதைய நிலவரப்படி சற்று ஆரோக்கியம் குறைவாகக் காணப்படுகிறது. காரணம், வேலைப்பளு, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களால் சரியான உணவுகளை அவர்கள் உட்கொள்வதில்லை. மேலும், உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை. இவை சர்க்கரை நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் குறித்த கணக்கெடுப்பில், ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கு இந்நோய் உள்ளது தெரியவந்துள்ளது. அதுவும், அதிக உடல் பருமன் உள்ள பெண்களுக்கு இந்நோய் அதிகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தடுக்க ஒரு தாரக மந்திரம் நம்மிடம் உள்ளது. அது என்னவெனில், ஐந்து இரண்டு ஒன்று சைபர்.

5210.. அப்படியென்றால் என்ன?

5 -&- ஐந்து நிற காய்கறிகள், பழங்கள், ஒரு நாளைக்கு.

2 &- இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக தொலைக்காட்சி பார்ப்பது.

1 -& ஒரு மணி நேரம் நடப்பது, உடற்பயிற்சி தினமும்.

0 & பூஜ்யம் அளவு பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்கள் எடுத்துக்கொள்ளுதல்.

இதனை பெண்கள் அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு கடைபிடித்தால் சர்க்கரை நோய் அவர¢களை நெருங்காது என்பது உண்மை.

பொதுவாக, ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு உடல் சார்ந்த ஒரு பிரச்னை என்றால் அந்த குடும்பமே அந்த ஆணைப் பாதுகாக்கிறது, கவனித்துக் கொள்கிறது. ஆனால் அதுவே ஒரு பெண்ணாக இருந்தால், அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு பெண் என்பவள் ஒரு வம்சத்தின் ஆணிவேர். அதைப் புரிந்து கொள்ளாதவரை பெண்கள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாவார்கள்.

ஒரு பெண் பூப்படைந்தவுடன் என்னென்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும்? உணவு சார்ந்தும், உடல்நிலை சார்ந்தும் அவர்களை கவனித்துக் கொள்வது எவ்வாறு? என்று பார்த்துக் கொள்வது பெற்றோருடைய கடமை. ஆனால் இதையெல்லாமல் அலட்சியமாக எடுத்துக் கொள்பவர்கள் தற்போது அதிகமாகக் காணப்படுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.

குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் பத்தாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண்களின் உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை ஒல்லியாகக் காணப்படும் பெண்கள், பத்தாம் வகுப்பு வந்தவுடன் திடீரென்று உடல் பருமன் அதிகரிக்கும். காரணம், பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு, கூடுதல் பயிற்சி வகுப்புகள் என அவர்கள் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் நேரம் இல்லாமை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன.

இவ்வாறு ஏற்படும் உடல் பருமன் காரணமாக, அவர்களுக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வரலாம். மேலும், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் போன்ற நோய்கள் ஏற்படும்போது அதனை அலட்சியப்படுத்தாமல், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவரை ஆலோசித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்வதும் நல்லது.

அதேபோல், குழந்தை பிறந்தவுடன், தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்பதற்காக த¤டீரென அசைவ உணவுகளை அதிகமாகக் கொடுத்து, பெண்களுக்கு கொழுப்பு அதிகரிக்கச் செய்கின்றனர். இதன் விளைவு, பின்னாளில் உடல் பருமன் பெருகி பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோய். எனவே பெண்கள் முதலில் அவரவர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே முதல் அறிவுரையாகும். அதற்கு இந்த 5210 என்ற மந்திரத்தை பின்பற்றினாலே சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்’’ என்கிறார்.

 

அதிகம் ஆபத்து டைப் 1 சர்க்கரை நோய்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் டாக்டர். வித்யா கூறுவது,

சர்க்கரை நோயில் மூன்று வகைகள் உண்டு,

முதலாவது வகை ( Type 1 )
இது குமந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. சில சமயம் பெரியவர்களும் பாதிக்படுவர். இந்த வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை மிக அதிக அளவு இழந்து விடுகின்றனர்.

இரண்டாம் வகை ( Type 2 )
இவ்வகையில் இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ சர்கரைநோய் ஏற்படுகின்றது. நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வகை நோய் எற்படுகிறது.

மூன்றாம் வகை சர்க்கரை நோய் (Type 3 )
கருவுற்ற பெண்களுக்கு மட்டும் வரக்கூடிய நீரிழிவு நோய் (Gestational diabetes) இவ்வாறு உள்ள நீரிழிவு நோய் பிரவசத்திற்கு பிறகு தொடராவிட்டாலும் சில ஆண்டுகளுக்கு பின் வர வாய்ப்புண்டு. நீரிழிவு நோய் வர வேறு சில காரணங்களும் உண்டு. அவை அதிகம் மது குடிப்பது, கணையத்தில் கேன்சர் ஏற்படுவது, ஸ்டீராய்டு மாத்திரைகள் அதிகம் பயன்படுத்துவது போன்றவையாகும் .

Type 1 Diabetes பற்றி விவரிக்கிறார் டாக்டர். வித்யா.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் இந்த நோய்வரலாம். இந்த நோய்கான அறிகுறிகள்-அதிகமாக சிறுநீர் கழிப்பது, அதிகம் தாகம் எடுப்பது, எடை குறைதல், பூஞ்சை தொற்று (FUNGAL INFECTION) ஏற்படுவது போன்றவையாகும்.
கணையத்தில் உள்ள செல்கள் 80% மேல் சேதமடைந்த பிறகே இந்த நோய் தெரிய வருகிறது. இந்த சமயத்தில் நோயாளிகளுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது.
இன்சுலின் எடுக்க ஆரம்பித்தவுடன் கணையமானது ஈடு கொடுக்க முயற்சி செய்கிறது. அப்பொழுது இன்சுலின் டோஸ் குறையலாம் அல்லது இன்சுலின் சில காலங்களுக்கு (அதாவது ஏறக்குறைய சில மாதங்கள்) தேவைப்படாமல் இருக்கலாம். இதை ஆங்கிலத்தில ‘Honeymoon Period ‘ என்பார்கள். மீண்டும் கணையத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்கும். அப்பொழுது இன்சிலின் ஊசி, கட்டுபாடான உணவு முறை, உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுபாட்டில் கொண்டு வரலாம். உணவில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளவை, பழசாறுகள், போன்றவை உடம்பில் உள்ள சர்க்கரை அளவினை அதிகரிக்க வாய்ப்புண்டு.

நீரிழிவு நோயால் இதயம், சிறுநீரகம், கண்,  மூளை மற்றும் கால் பாதிக்கப்படலாம். வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மற்றும் கால்களுக்கு காலணி அணிவது, பாதங்களை தினமும் சுத்தம் செய்வதன்முலம் கால்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். வருடம் ஒரு முறையாவது இரத்த அழுத்த பரிசோதனை,  இரத்தத்தில் கொழுப்பு சத்தின் அளவு மற்றும் இரத்தத்தில் சிறுநீரக    பாதிப்பை அறியும் பரிசோதனை செய்தல் வேண்டும் . மேலும், மருத்துவரின் ஆலோசனையுடன் உணவின் அளவுகளையும் இன்சுலின் ஊசி மருந்தின் அளவையும் சரியாக பயன்படுத்தி நம் வாழ்வினை செம்மையாக கொண்டு செல்லலாம் என்றார்.

உணவு கட்டுப்பாடு, முறையான மருந்து உட்கொள்வது அவசியம்

சர்க்கரை நோய் இன்சுலின் குறைபாட்டினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடியது. இது பற்றி டாக்டர் விஷ்ணுவர்தன் கூறியதாவது: டைப் 1 சர்க்கரை நோய், மரபணுக்களால் ஏற்படக் கூடியது. இந்நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்துவதற்கு முன்பு மருந்துகள் மூலம் இன்சுலின் அளவை கட்டுக்குள் கொண்டுவரச் செய்யலாம். அதிலும் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் இன்சுலின் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

டைப் 2 சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் வலிமை இழந்து காணப்படுவர். மேலும், இதற்கு முக்கிய காரணம் உடல்பருமன். உடல் பருமனால் இன்சுலின் அதன் வேலையை சரிவர செய்ய முடிவதில்லை. தேவையற்ற உணவுப்பொருட்களை சாப்பிட்டால் அதன் கொழுப்பு உடலில் தேங்கி விடுகின்றன. அந்த கொழுப்பை கரைப்பதற்கு தகுந்த உடற்பயிற்சியோ அல்லது நடை பயிற்சியோ நாம் மேற்கொள்வதில்லை. இது போன்ற காரணங்களால் நாம் நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்களுக்கு ஆளாகின்றோம்.

பொதுவாக சர்க்கரை நோய் வந்தால், அதை கண்டறிந்து, மருந்துகளால் இன்சுலினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சி செய்கிறோம். இந்த கட்டத்தை தாண்டும் பொழுதுதான் இன்சுலின் செலுத்தப்படுகிறது. அதேபோல் சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டிற்குள் வந்துவிட்டது இனி மருந்து சாப்பிட தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. அது இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, ஏற்கனவே உடலில் உள்ள இன்சுலின் சரிவர வேலை செய்யாததால்தான் மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறோம். மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு சாதாரணமாக உண்ணும் உணவு அதனுடன் சேர்ந்து சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராமல் போய்விடுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடுடன், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது ஆயுளை நீளச் செய்யும்.

மேலும், இன்றைய நவீன உலகில் கட்டுபாடற்ற உணவு முறை, உடற்பயிற்சி,நடைபயிற்சி மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். இதை முற்றிலும் தடுக்க அளவான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தாலே போதுமானதாகும் என்றார்.