பெங்காலிப் படங்களை முந்தியது தமிழ் சினிமா

திரைத்துறையில் வெற்றி என்ற படிக்கட்டைத் தொடுவதற்கு முன்பு, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கட்டும் வெற்றிப்படிக்கட்டு என்றே பலர் சினிமா உலகில் வாழ்ந்து வருகின்றனர். சிறிதுநேரமே திரையில் தோன்றினாலும் தனது நடிப்பை சிறப்பாகக் காட்ட வேண்டும் என்று நினைத்த நடிகை அனுபமாகுமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை,

‘‘வணக்கம். மூடர்கூடம், துப்பாக்கி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் என்னைப் பார்த்து இருப்பீங்க. நான் கோவையைச் சேர்ந்தவள்.

அப்பா ராணுவத்தில் இருந்தனால பல ஊருக்கு போகவேண்டிய சூழல். சின்ன வயசுல எங்க வீட்டுல குட்டி குட்டி நாடகம் போடுவேன். ஒவ்வொரு கதாபாத்திரம் மாதிரி நானே நடிச்சுக் காட்டுவேன். அதை எல்லோரும் பாராட்டி எனக்கு சினிமா மீது ஆர்வத்தை ஏற்படுத்தினாங்க. அப்புறம் சினிமாவுல நடிக்க முடிவு பண்ணினேன். அந்த சமயம் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதே சமயம் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

கல்யாணம் ஆகி எனக்கு குழந்தை பிறந்த நேரத்துல, பாலிவுட் பாஷா ஷாருக்கான் கூட சேர்ந்து விளம்பரப் படம் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை எப்பவும் என்னால மறக்க முடியாது. காரணம், எனக்கு குழந்தை பிறந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு என்னை ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கிட்டார் ஷாருக்கான். எனக்குன்னு தனி கேரவன் கொடுத்து, ஒரு வீட்டுல நம்ம அம்மா நம்மள எப்படி பார்த்துக்குவாங்களோ அது மாதிரி என்னை கவனிச்சார்.

அப்புறம் தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது இஸ்கிய என்ற ஹிந்திப் படத்தில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தேன். என்னதான் நாம ஹிந்தி படம் பண்ணினாலும், எனக்கு தமிழ் படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்பொழுது இயக்குநர் சேரன் படத்துக்கு ஆடிசன் போயிட்டு இருக்குனு கேள்விப்பட்டு அவரிடம் எனக்கு உங்க படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டேன். உங்க வாய்ஸ் இந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகாதுன்னு சொல்லிட்டார். இல்ல சார் நீங்க என்னோட போட்டோகிராப்ஸ் பாருங்க. அப்புறம் சொல்லுங்கன்னு சொன்ன பிறகு, சரி உங்க போட்டோகிராப்ஸ் அனுப்பி வையுங்கன்னு சொன்னார். அதற்கு பிறகு சிறிது நாள் கழித்து நான் மும்பையில் இருந்தப்போ, எனக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்து, சென்னை வர சொன்னார். நானும் போனேன். சில மேக் அப் டெஸ்ட் வச்சு பார்த்துட்டு, கடைசியில் எனக்கு பொக்கிஷம் படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

பிறகு நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்த கதாபாத்திரம் பேசப்படும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் நான் நினைத்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. இன்னும் பலர் என்ன பார்த்தாங்கனா, ‘‘நீங்க ‘துப்பாக்கி’ படத்துல காஜல் அகர்வாலுக்கு அம்மாவா நடிச்சீங்கதானே. அதுல ரொம்ப நல்லா நடிச்சுருக்கீங்க’’ன்னு சொல்லுவாங்க. இது, நான் நினைத்து பார்க்காத பாராட்டுக்கள்.

தற்போது நமது தமிழ் சினிமா உலக அளவில் பல முக்கிய இடங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. ‘‘விசாரணை, காக்க முட்டை’’ போன்ற படங்கள், பல சர்வதேச திரை விழாக்களில் இடம்பெற்று தமிழ் சினிமாவுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி இருக்கு. தமிழ் சினிமா மீது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் பெங்காலி படங்களுக்கு இந்த வரவேற்பு இருந்தது. இப்போது நாம் அதை முந்திவிட்டோம். நான் நடித்து, உதவி இயக்குநர் மற்றும் உதவி தயரிப்பாளரா பணியாற்றிய my son is gay படம் டிசம்பரில் வெளியாகப் போகுது. மெல்பெர்ன், நியூயார்க் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல my son is gay படம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இப்போது ‘வெண்ணிலா கபடிக் குழு 2’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். மேலும் பல படங்களில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். 2018 எனக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி உங்களிடம் விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்’’.