பிடித்த செயலை செய்ய வேண்டும்

ரேடியோ மிர்ச்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆர்ஜே சாருவை சந்தித்தபொழுது அவர¢ நம்முடன் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங¢கே காண்போம்.

‘‘எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் ரேடியோல பாட்டுக் கேட்குறது. சின்ன வயசுல இருந்து எனக்கு அந்த பழக்கம் இருக்கு. நான் ஆர்ஜே ஆவேன்னு நெனச்சுகூட பாக்கல. என்னோட ஸ்கூல் படிப்பு முடிந்ததும், அடுத்து என்ன படிக்கலாம்னு யோசித்த பொழுது, மீடியா சார்ந்த ஜாப் போகணும்னு விருப்பப்பட்டு பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் விஸ்காம் படிக்க ஆரம்பித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே என் துறை சார்ந்த பல தகவல்களைக் கற்றுக் கொண்டேன். என் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ரேடியோ மிர்ச்சி நடத்திய நேர்காணலில் தேர்வானேன். நான் எதிர்பாராமல் நடந்த விஷயம், எனக்கு ஆர்ஜே வாய்ப்பு கிடைத்ததுதான்.

அதற்கு பிறகு எனக்குன்னு ஒரு புது உலகம் இருக்குன்னு புரிஞ்சுகிட்டு, நான் வேலை பார்க்க ஆரம்பித்தேன். தற்போது மிர்ச்சியில் 11:00 முதல் 2:00 மணி வரை ‘மிர்ச்சி மிளகா’ என்ற நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கிறேன். பலதரப்பட்ட மக்கள் என் நிகழ்ச்சியைக் கேட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுவார்கள். சில சமயங்களில் காதல் உணர்வுகளைக்கூட என் ஷோவில் பகிர்ந்து கொள்வார்கள்.

நான் ஒரு ஆர்ஜேவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்து கிளாசிக்கல் டான்சர். என்னோட விருப்பம் டான்சர் ஆக வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு நாளும் அதிகமான நேரங்களை செலவிடுவது டெம்பில் ஃபைன் ஆர்ட்ஸ் சிவாஞ்சலி நடனப் பள்ளியில்தான். என்னோட முதல் காதல்கூட என்னோட நடனம்தான். எந்த ஒரு செயலை செய்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும். அதை தினமும் செய்தால் போதும், நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது எனது கருத்து.

எனது வாழ்கை பயணத்தில் ரேடியோ ஜாக்கியாக இருப்பதும் மற்றும் எனக்குப் பிடித்த நடனத்தைக் கற்றுக்கொண்டு இருப்பதும் என் வாழ்க்கையை ரசிப்பதற்கு ஒரு பாலமாக இருந்து வருகிறது. சந்தோசம் எப்போதும் வேண்டும். சோகத்தைத் தட்டிவிட்டு, பிடித்த வாழ்க்கையை வாழ பழக வேண்டும்’’ என்றார்.

– பாண்டிய ராஜ்.