அரசுக் கட்டடங்களின் அவலநிலை…!

உலகின் மிகச்சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாக கரிகாலன் கட்டிய, பழைமை வாய்ந்த கல்லணை கூறப்படுகிறது. அதைப்போலவே கட்டடக்கலைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக தஞ்சை பெருவுடையார் கோவில் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இதுபோன்ற பல கட்டுமானங்கள், கோவில்கள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வெயிலையும், மழையையும் தாங்கி காலத்தை வென்று நின்று கொண்டிருக்கின்றன.

அந்த தங்கத் தமிழ்நாட்டில் சில மாதங்களாக கட்டுமானங்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. ஆங்காங்கே பல கட்டுமானங்கள், குறிப்பாக அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிந்தும், பெயர்ந்தும் விழுகின்றன. கோவை சோமனூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர், மாணவி என சிலர் பலியாகினர்.

கடந்த வாரம் நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பலர் பலியாகினர். இன்னும் சில இடங்களில் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மற்றும் மருத்துவமனையில் உட்கூரை பெயர்ந்து விழுந்ததில் உயிர் பலி இல்லையென்றாலும் பொதுமக்கள் கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலம் தொடங்கி, தற்போது வரை கட்டப்பட்ட பல அரசு கட்டடங்கள் இன்னும் கம்பீரமாக நிற்கிறதே என்று சிலர் கூறலாம். உண்மைதான். அந்த கட்டுமான அழகும், அதிலுள்ள இட வசதியும், காற்றோட்டமும் அற்புதம்தான். சிக்கல் அதைப்பற்றி அல்ல. ஆயிரம் கட்டடங்கள் நிற்பது சாதனையல்ல. அதில் ஒன்றுகூட இடிந்து விழாமல், யாரும் சாகாமல் பார்த்துக் கொள்வதுதான் சாதனை.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நான்கு அரசுக் கட்டடங்கள் இடிந்து விழுந்து விட்டது என்று கண்டும் காணாமல் போய்விடமுடியாது. கோவை உக்கடம் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும், அம்மன் குளம் பகுதியில் அரசு கட்டிய குடியிருப்புகளும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்துக்கு சவால் விடும்வகையில் சாய்ந்து நின்றதை பலரும் அறிவர். கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் வீடுகளைப் பற்றி நல்ல செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே உள்ளன.

இதனால்தான் அரசு கட்டடங்கள் விழுவது, கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் கட்டடப் பராமரிப்பு, பழுது நீக்கும் முறைகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்தி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஏனென¤ல் சும்மா நின்று கொண்டிருக்கும்போதே தலைமீது இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்கள், நிலநடுக்கம் போன்ற பேரிடர் வந்தால் என்னவாகும்?

எனவே, இதனை முறைபடுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்டடங்களைக் குறிப்பாக பொதுமக்கள் பலர் கூடும் அரசுக் கட்டடங்களின் உறுதி குறித்த விரிவான ஆய்வு தற்போதே உடனடியாக நடத்தப்பட வேண்டும். அது குறித்த அறிக்கை அனைவரும் அறியும் வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இதற்குமுன்னர் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு பொதுப்பிரசனைகளுக்கான விசாரணை ஆணையங்கள், அதன் ஆய்வு முடிவுகள் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

இன்றைய சூழலில் கட்டடத்துறை வல்லுநர்கள், ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி மையங்கள் என்று பலரும் உதவ முன் வருவார்கள். எனவே இதற்கான தகுதி உடைய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சொல்லப்போனால் ஒரு ஒழுங்கு முறை ஆணையம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தொடர்பணியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இப்போதுள்ள கட்டடங்கள், இனி கட்டப்போகும் கட்டடங்கள், பழுதுபார்த்தல் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இதெல்லாம் செய்துவிட்டால் அரசு கட்டடங்கள் கரிகாலன் கல்லணை, ராஜராஜசோழனின் பெரியகோவில் போல நிலைபெற்று விடுமா என்று கேட்கவேண்டியதில்லை. அவ்வப்போது அங்கே, இங்கே என பல அரசுக் கட்டடங்கள் இடிந்து விழுந்து இத்தனை பேர் பலி என்று செய்திகளில் வருகிறார்களே அந்த அப்பாவிகளை, நமது சக மனிதர்களைக் காப்பாற்றலாம். அவ்வளவுதான்.

அதற்குத்தான் இந்த சங்கை ஊதுகிறோம். எட்ட வேண்டிய காதுகளை அது எட்டட்டும்; அப்பாவிகள் சிலராவது தப்பிப் பிழைக்கட்டும்.