நவக்கரை பகுதியில் பிடிபட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி அறியவகை பாம்பு

கோவை நவக்கரை குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த அரிய வகை பாம்பு மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை நவக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் அரிய வகை பாம்பு புகுந்ததாக மகேஷ் என்பவர் எட்டிமடை சுற்றுவட்டார பகுதிகளில் பாம்புகளை மீட்கும் ஜெயராம் என்பவருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு சென்ற ஜெயராம், ராஜேஷ், பிஜேஷ் ஆகியோர் வீட்டிற்குள் இருந்த மேற்கு தொடர்ச்சி மலை அடர் வனப்பகுதிகளில் வாழக்கூடிய அரிய வகை பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட  பாம்பை மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஜெயராம் கூறுகையில், பிடிபட்ட பாம்பு “பாரஸ்டின் கேட் ஸ்நேக்” என்ற மேற்கு தொடர்ச்சி மலை அடர் வனப்பகுதிகளில்  வாழும் அரிய வகை பாம்பு, மதுக்கரை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்திருக்க வாய்ப்பு உள்ளது. இது 3.5 அடி நீளமுள்ள, சுமார் 4 வயது உள்ள பாம்பு என தெரிவித்தார்.

மேலும் இந்த பாம்பு குறைவான விஷத்தன்மை உள்ள ரகம் எனவும், மிக அரிய வகை பாம்பு இனத்தை சேர்ந்தது என கூறினார்.