குணமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணித்து இரண்டு வாரங்களுக்கு பின் டிஸ்சார்ஜ் சம்மரி வழங்க மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், சிகிச்சை முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டிட பணியை ஆய்வு செய்தார். கூட்டத்தில் அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு பேசுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வு தான். ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா நோய்த் தொற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பாக மேற்கொள்ளவும், தரத்தை அதிகப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களுக்கு திரும்பவும் மூச்சுத்திணறல் வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், இரண்டு வாரங்களுக்கு எந்த அறிகுறிகள், தொந்தரவு இல்லையெனில் அவர்களுக்கு டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார்.