பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட பேருந்துகள்

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் தொடங்கிய பேருந்து சேவை பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டலங்கள் இடையே பொதுப்போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.

கோவை கோட்டத்தில் உள்ள கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின் மீண்டும் ஜூலை மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல்  மாவட்டங்களுக்குள் பேருந்து சேவையை தொடங்க வழிகாட்டு நடைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்தது.

அதன்படி கோவையில் 50 சதவிகித பேருந்துகள் இயங்கத் தொடங்கிய நிலையில் பேருந்தில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு வழிகாட்டு நடைமுறைகளின் படி பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சானிடைசர்கள் பயன்படுத்திய பின்னர் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.