பாரம்பரியத்தைத் தொலைத்து விட்டோமா?

பொதுவாக, நம் முன்னோர்கள் காலத்தில் மருத்துவமனைகளும், மருத்துவர் எண்ணிக்கையும் குறைவாக இருந்தன. காரணம், நம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருத்துவர் ‘பாட்டி’ என்கிற உருவத்தில் காணப்பட்டார். இயற்கை எழில் நிறைந்த சூழல், தூய்மையான காற்று, கலப்படமற்ற உணவுப் பொருட்கள் என நோய்களுக்குத் தடுப்புச்சுவர் எழுப்பியிருந்தோம். வயல்வெளிகளாக இருந்தாலும் சரி, பொட்டல் காடுகளாக இருந்தாலும் சரி வெறும் காலில், மணிக்கணக்காக, நாட்கணக்காக நடந்தோம். சளி, காய்ச்சல், பல் வலி, தலை வலி, மூட்டு வலி போன்ற நோய்களுக்கு வீட்டிலேயே இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்தி பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.

உதாரணமாக, சாதாரண காய்ச்சல் வந்தால், சீரகம், மிளகு, இஞ்சித்துண்டு சம அளவு எடுத்துக் கொண்டு, ஒரு கையளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு மை போல் அரைத்து, காலை, மாலை சிறு நெல்லிக்கனி அளவு சாப்பிட்டு வர இரண்டே நாளில் காய்ச்சல் காணாமல் போய்விடும். அதேபோல், உடலின் வெப்பம் குறைய, ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணையில் சிறதளவு மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டு போட்டு காய வைத்து, சூடு ஆறியதும், இரு காலின் பெருவிரல் நகத்தில் பூசி 2 நிமிடங்களில் கழுவிவிட, உடல் சூடு தானாகக் குறைந்து விடும்.

இப்படி அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கை மருத்துவம் தெரிந்து வைத்திருந்ததோடு மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தோம். ஆனால் இன்று வளர்ந்து வரும் நவநாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியினாலும், விளம்பரங்களின் மீதுள்ள ஈர்ப்பாலும் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை மறந்து விட்டோம்.

அதேபோல், வெளியில் போகும் பொழுது, நம் முன்னோர்கள் கை, கால்கள் மற்றும் தலையில் தேங்காய் எண்ணையைத் தேய்த்துக் கொண்டு செல்வார்கள். காரணம், தேங்காய் எண்ணெய் சருமத்தைப் பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியைப் போக்குவதில் சிறந்த ‘மாய்ஸரைசர்’ ஆக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தைப் போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனைப் பாதுகாப்பதில் விலை குறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும். ஆனால் நாம் அதனைப் பயன்படுத்துவதில்லை.

பொதுவாக, பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்பார்கள். காரணம், மஞ்சள் ஒரு கிருமிநாசினி. பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்தும் குணம் நிறைந்தது, மஞ்சள். மேலும், மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்குக் கட்டுப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற இயற்கை வைத்தியத்தைத் தவிர்த்து, ஆங்கில மருத்துவத்தை கண்மூடித்தனமாக நாடுகிறோம்.

தற்போது வைரலாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு நிலம்வேம்பு நீர் தான் சரியான தீர்வு என்று இன்றைய தலைமுறையினருக்குக் கொடுக்கப்படுகிறது. பிறந்ததிலிருந்து ஆங்கில மருத்துவம் பார்க்கும் ஒரு குழந்தைக்கு, திடீரென நாட்டு மருந்தைக் கொடுத்தால் அந்த குழந்தை எப்படி உட்கொள்ளும்? இதுபோன்ற தவறுகளால் இன்னும் எத்தனை உயிர்களை பலியாக்கப் போகிறோம். எனவே பெற்றோர்களாகிய நீங்கள், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஒவ்வொரு மருத்துவ குணம் நிறைந்த பொருட்களைக் கேட்டறிந்து, அதைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உதாரணமாக, வீட்டில் உள்ள கசகசாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எதற்கு, எப்படி, எவ்வளவு, எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். மேலும், பாரம்பரிய உணவுப் பொருட்களை உட்கொள்ளவும் கற்றுக் கொடுங்கள். இதனால் அந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல், மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வுடனும் திகழும். பெற்றோர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். காரணம், குழந்தைகளுடன் அதிகமாக நேரம் செலவிடுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்தான்.

எனவே ஒவ்வொரு குழந்தையையும் சரியான பாதையில் முறையாக வழி நடத்திச் செல்வது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவதால் மட்டுமே நம் பாரம்பரியத்தை மீட்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.