வேரோடு சாய்க்க முயற்சியா?

ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி வரி நாடெங்கும் கடந்த ஜூலை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார சீர்திருத்தத்தில் ஒரு மேம்பாட்டு நடவடிக்கையாகவும் அது கூறப்பட்டது. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகமானது.

பொதுவாக இதுபோன்ற வாட் வரி, சி பார்ம் என்று ஏதாவது அறிமுகப்படுத்தப்படும்போது அது சார்ந்த துறையினர் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு பெரிய அளவில் இது தெரியவும் தெரியாது. உடனடியாக பெரிய அளவில் பாதிப்பும் தெரியாது. ஆனால் ஜிஎஸ்டி வரி அப்படி அல்ல. நேரடியாக எல்லோரும் பாதிக்கப்படக்கூடிய அளவில் அறிமுகமானது.

கிட்டத்தட்ட தொழில், வணிகம் செய்யும் அனைவரும் இந்த வட்டத்துக்குள் வரும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலானோர் ஐந்து முதல் இருபத்தெட்டு சதவீதம் வரை அவர்களின் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டி வந்தது. பொதுமக்களுடன் தொடர்பு கொண்ட பல பொருட்கள் உடனடியாக விலை ஏறின. எடுத்துக்காட்டாக, ஓட்டல்களில் உணவு வகைகள் விலை ஏறியது. இது ஏதோ அவ்வப்போது நடைபெறுவது இல்லை என்பதை அடுத்து வந்த நடவடிக்கைகள் தெரிவித்தன.

எந்தவித முன் தயாரிப்பும் இல்லாத முறையில் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இதன் முதல் தடுமாற்றம். பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கும் இதுபற்றி தெரிந்திருந்தாலும் பல கோடி மக்கள் கொண்ட நாட்டில் அவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே. அடுத்ததாக இது அறிமுகப்படுத்தப்படும்போது அது சார்ந்த தொழிற்துறையினரை சரியான முறையில் கருத்துகூட கேட்காமல் முடிவெடுக்கப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. அடுத்து இந்த வரி செலுத்த வேண்டிய ஆன்லைன் முறைகள் பற்றி எவ்வித பயிற்சியோ, அறிவோ இல்லாத மக்கள்மீது இப்படி போட்டுத் தாக்குவது ம¤கப¢பெர¤ய அநியாயம்.

அதுவும் கோவை போன்ற சிறு தொழில்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதன் பாதிப்புகள் மிக அதிகம். எடுத்துக்காட்டாக, இதற்கு முன்பு கோவையில் உள்ள ஒரு சிறு தொழிலகம் வைத்திருப்பவர், ஒரு பெரிய கம்பெனியில் ஒரு வேலையை வாங்கி வருவார். அவருடைய இயந்திரத்தில் சில பணிகளும், வேறு தொழிலகத்தில் சில பணிகளுமாக அந்த வேலையை முடிப்பார். பெரிய கம்பெனியில் பொருளைக் கொடுத்து பில் கொடுப்பார். அது வருவதற்கு இரண்டு மாதம் ஆகும். அதற்குள் அடுத்த வேலையை எடுப்பார். இப்படி போகும் அவரது வேலை. ஆனால் மாதம் ஒரு முறை அது தொடர்பான ஆவணங்களைத் தொடர்புடைய வணிகத்துறையிடம் தாக்கல் செய்வார். அதுவும் பத்தாவது படித்த அந்த சிறு தொழில் முனைவோர் ஒரு கணக்காளர் மூலம்தான் தாக்கல் செய்வார். ஏதாவது தவறு இருந்தால் தகுந்த காரணம் சொல்லி திருத்தித் தருவார். இதுதான் நடைமுறை.

இப்போது அப்படி அல்ல. எல்லாமே ஆன்லைன். சர்வர் ஓப்பன் ஆக வேண்டும். நீங்கள் கொடுக்கும் விவரத்தில் ஒரு எண் மாறினாலும் அது ஏற்றுக்கொள்ளாது. அதோடு செயல்பாடு தடைபட்டு விடும். இப்படி ஆண்டு முழுவதும் மாதாமாதம் சிலமுறை தாக்கல் செய்வது என்பது சிறுதொழில், வணிகம் செய்வோருக்கு நடைமுறை சாத்தியமில்லை. அதற்கான சக்தியும் அவர்களுக்கு இல்லை.

அடுத்து, வரி விதிக்கப்பட்டுள்ள விகிதம். அது பல தொழிற்சாலைகளைத் தாற்காலிகமாக மூடிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல வரிகள், அடிப்படை நடைமுறை விவரம்கூட தெரியாதவர்களால் போடப்பட்டதுபோல தோன்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு, வெட்கிரைண்டர் தொழிலகங்கள். தற்போது தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர்களுக்கு இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வந்த பிறகு பதினெட்டு, மற்றும் இருபத்தெட்டு சதவீதம் வரி கட்டவேண்டும். இந்த வெட்கிரைண்டர் தொழில் என்பதே மிகக் குறைவான இலாபத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு தொழில். இதில் இருப்பவர்கள் மிகப்பெரும்பாலானோர் மிகச்சிறு தொழில் முனைவோர்.

இவர்களுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்வோர் இன்னும் மோசம். பலர் படிக்காத ஏழைகள். தொழில் ஏதோ ஓடுகிறது என்று காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட கூடுதலாக இருபது, முப்பது சதவீதம் வரி விதித்து விலை ஏறும்போது தொழிலே வேண்டாம் என்ற நிலை தோன்றி விட்டது. நூற்றுக்கணக்கான தொழிலகங்கள் மூடிக்கிடக்கின்றன. இந்த வெட்கிரைண்டரை வாங்குபவர்கள் ஐந்தாயிரம், பத்தாயிரத்துக்கு மேல் செலவு செய்ய வாய்ப்பில்லாதவர்கள். இது கார், வீடு போல வங்கிக்கடன் போட்டு நடைபெறுவதும் அல்ல. தொழில் நலிவுற்றது கண்கூடாகத் தெரிகிறது.

இதில் இன்னொரு கூத்தும் உண்டு. இந்த வெட்கிரைண்டர் உணவு தயாரிப்பு இயந்திரம் என்ற முறையில் வரி பதினெட்டு, இருபத்தெட்டு சதவீதம் என்று வரிவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, வட மாநிலங்களில் கோதுமை அரைக்கும் சிறு இயந்திரமான ஆட்டா சக்கி எனும் இயந்திரத்துக்கு ஐந்து சதவீதம் வரி. இட்லி மாவு அரைத்தால் அதிக வரி, கோதுமை மாவு அரைத்தால் குறைந்த வரி என்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

அடுத்து, கோயம்புத்தூரில் முக்கியத் தொழில்களில் ஒன்றான கம்ப்ரஸர் தயாரிப்பு. இந்த கம்ப்ரஸரில் பல வகைகள் உண்டு. பஞ்சர் கடையில் இருப்பதும் கம்ப்ரஸர்தான். ஒரு ஏ.சி. யந்திரத்தில் இருப்பதும் கம்பரஸர்தான். இரண்டும் ஒன்றாகி விடுமா? ஆனால் இரண்டும் ஒன்று எனும் ரீதியில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் செய்வோர் இதை யாரிடம் சொல்வது என்று புரியாமல் விண்ணப்பத்துக்கு மேல் விண்ணப்பம் அனுப்பிவிட்டு தலை மேல் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

இப்படி பல துறைகளில் பல குளறுபடிகள். ஆறு மாதமாக ஆங்காங்கே பல இடங்களில் பல கருத்தரங்குகள் நடத்தியும் இன்னும் தெளிவு வரவில்லை. பலர் ஆகஸ்ட் மாத ரிட்டர்ன்கூட தாக்கல் செய்யவில்லை. தெரிந்தால்தானே தாக்கல் செய்வதற்கு?

நமக்கு பொருள் சப்ளை செய்பவர் கட்டவில்லை என்றால் நாம் கட்ட வேண்டும். பிறகு கணக்கு காட்டி ரிவர்ஸ் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் எதுவும் நடைமுறையில் அவ்வளவு எளிதாக இல்லை என்பதுதான் உண்மை. இதன் விளைவு, நிலைமை சீராகட்டும் என்று பல தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிற்சாலை இயக்கத்தைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதன் விளைவாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது நன்கு தெரிகிறது.

மக்களை குறைந்தபட்ச தயார்நிலைக்குக் கூட இடம் கொடுக்காமல் அவர்களை ஜிஎஸ்டி எனும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதுபோலத்தான் தற்போதைய நிலை. ஆனால் இன்று வரை இந்த துறை சார்ந்த அதிகாரிகள் எவரும் இது குறித்து சரியாக தெளிவுபடுத்தவோ, வழிமுறைகளை சொல்லித்தரவோ இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த அதிர்ச்சிகளை சமாளித்துக்     கொள்ளும். அதற்கான ஆள், படை, சேனை, அறிவு எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டும் இந்தியாவில் இல்லை. பல கோடி குப்பனும், சுப்பனும், பாமரர்களும் கொண்டதுதான் நமது நாடு. ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் காரணமே இல்லாமல் வங்கியின் வாசலில் தவம் கிடந்த வரலாறு நமக்கு உண்டு. அதுவும் கோவை போன்ற அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு தொழில் நகரங்களுக்கு பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. பல நூறு கோடிகளைக் கொட்டி இடத்தை ஒதுக்கி பல சலுகைகளை அள்ளித்தந்து தொழில்களைத் தொடங்க அரசு ஆதரவு தந்து வருகிறது. ஆனால் அதே நேரம் தங்கள் சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி பல துன்பங்களுக்கு இடையே உற்பத்தியும் செய்து, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் தந்து ஆலமரமாக நிற்கும் சிறு தொழில்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

சாணக்கியர் சொன்னதுபோல, வரி வசூல் என்பது பூவுக்கு வலிக்காமல் தேனை உறிஞ்சுவதுபோல இருக்க வேண்டும். இந்த ஜிஎஸ்டி வரி அப்படித் தெரியவில்லை. சிறுதொழில் செய்பவர்களையும், நடுத்தர மக்களையும் வேரோடு சாய்க்கும் முயற்சி போல் தான் தெரிகிறது.