தேர்தல் நெருங்குகிறதா?

தமிழகத்தில் இப்போது நியாயப்படி கொரோனா வைரஸ்பரவல்தான் பேச்சாக இருக்க வேண்டும். ஆனால் நாட்டு நடப்பும், செய்திகளும் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கொரோனா ஜூரத்தை மீறி தேர்தல் ஜூரம்தான் பரவலாகஎங்கும் அடிப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் பரவல் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தினந்தோறும் பரிசோதனைகளும், பாசிட்டிவ் கேஸ்களும் வந்துகொண்டே இருந்தாலும் அரசாங்கமும் மருத்துவம் உள்ளிட்டமற்ற துறையினரும் சலிக்காமல் போராடி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள்.

ஆனால் அதைவிட‘டிரெண்டாக’ இருப்பது வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து தற்போது நிகழும் முன்னோட்ட சம்பவங்கள்தான். இதில் எந்த அரசியல் இயக்கங்களும் பின்வாங்காமல் எப்போதும்போல இயல்பாக தேர்தல் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தது அதிமுக. அடுத்த முதலமைச்சர் யார் என்று ஒரு விவாதம் கிளம்பி அது தற்போதைய முதலமைச்சராக இருப்பவரா அல்லது துணை முதலமைச்சராக இருப்பவரா என்று இரண்டு அணிகளாக பிரிந்ததுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு பல நாட்கள் செய்திகளில் முக்கியஇடம் பிடித்தது. பல அமைச்சர்களின் கருத்துகள் கூடமாறி, மாறி இந்த விவாதத்தில் இடம் பெற்று வந்தன. பிறகு தலைமையிடம் இருந்து வந்த அறிவிப்புக்குப்பிறகு அமைதி திரும்பியது போல தோன்றுகிறது.என்றாலும் தேர்தல் வரும்போது நாங்களும் இருக்கிறோம் என்று தங்கள் முக்கியத்துவத்தை காட்டிக்கொள்ளவாவது இது ஆரம்பத் தளமாக அமைந்தது எனலாம்.

திமுக தினந்தோறும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் அளவுக்கு செய்திகள் தருகின்றது. நீட் தேர்வு எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மத்திய, மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகள் பற்றிய இடைவிடாத விமர்சனம் ஆகியவற்றோடு தேர்தலுக்காகவே ஒரு தனி வல்லுநரையும் நியமித்து அதற்கானபணிகள் ஒருபுறம் போய்க் கொண்டிருக்கின்றது.

‘கேப்டன்தான் கிங்’என்பது தொண்டர்களின் விருப்பம் என்று ஒரு சின்ன வெங்காய வெடியை தேமுதிக இயக்கம் வீசியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சிறியதாக இருந்தபோதும் பாரதிய ஜனதா கட்சி செயல்பாடுகள் குறைவானதாக இல்லாமல் பரபரப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. திமுகவுக்கு எதிராக எப்போதும் கருத்துக்களம் காணும் இந்தகட்சி, இந்த முறை விநாயகர் சதுர்த்தி அன்று பல அனுமதிகள் கேட்டு அதன் தோழமைக் கட்சியான அதிமுகவை நெருக்கியதை காணமுடிந்தது. கந்தர் சஷ்டி கவசம் தொடங்கி தமிழகத்துக்கு திமுக இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது வரை பல விவாதங்களில் திமுகவை எதிர்த்து பாஜக களமிறங்கியுள்ளது. அதன் தமிழக தலைவர் அடுத்த சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள் என தொடர்ந்து உறுதியாக பேசி வருகிறார்.

இன்னொரு புறம்,பாஜகவின் அணியில் பல புதுமைகளும், சில நேரங்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பல புதுமுகங்களும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தனது ஐபிஎஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்து விட்டு அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னதாகவே திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி போன்றவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். இன்னொரு எம்.எல்.ஏ.வான குக செல்வம் திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். இன்னும் நாட்கள் செல்லச்செல்ல இதுபோல பல புதிய காட்சிகள் அரங்கேறக்கூடும்.

இந்தமுறை தமிழகத்தில் நடைபெறப்போகும் சட்டமன்றத்தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்றேகூற வேண்டும். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களம் கண்டகலைஞர் கருணாநிதியோ, தனது இறுதிக்காலம் வரை அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கிய செல்வி ஜெயலலிதாவோ இல்லாத முதல் தேர்தல் களம்.ஸ்டாலின் ஏற்கனவே களம்பல கண்டிருந்தாலும் தலைவராக முன்னின்று நடத்தும் முதல் சட்டமன்றத் தேர்தலை இந்த முறை சந்திக்கிறார். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதலாக ஜல்லிக்கட்டு தொடங்கி, ஸ்டெர்லைட், நீட் தேர்வு எதிர்ப்பு, கடைசியாக கொரோனா வைரஸ் பரவல் என்று பல சிக்கல்களை வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இப்போதைய அதிமுக அணி சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாமிருக்கும் இந்த கணிப்பொறி யுகத்தில் அதன் தாக்கங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் வரும் தேர்தலில் பிரச்சாரம் தொடங்கி ஒட்டு எண்ணிக்கை வரை தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. அதனை எந்த கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது, கூடவே ஏற்கனவே உள்ள வழக்கமான பிரச்சார முறைகளை இந்த முறை மேற்கொள்ள கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் அனுமதிக்கும் போன்றவை இந்த முறை தேர்தல் நடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்தக் கட்சி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தாலும் ஆட்சி நடத்துவது என்பது கண்டிப்பாக கடுமையான சவாலாகத்தான் இருக்கும். ஏற்கனவே மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிநிலை பற்றாக்குறை இருந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்கியதால் வரும் காலத்தில் பொருளாதாரம் கிட்டத்தட்ட குற்றுயிரும், குலையுயிருமாகத்தான் இருக்கப்போகிறது. இன்னும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில், இந்த துயரநிலை எவ்வளவு நாள் தொடரும் என்று தெரியாத நிலையில் நெருப்பாற்றில் நீந்துவது போலத்தான் அரசாங்கத்தை நடத்துவோருக்கு ஆட்சிநடத்துவது இருக்கும்.

ஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் படுவேகமாக சரிந்துவரும் நிலையில் பல கோடி மக்களுக்கு உணவும், வாழ்வும் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி ஆட்சி நடத்துவது உண்மையிலேயே ஒரு பெரும் சவாலாகத்தான் இருக்கப்போகிறது.

எனவே இந்த முறை அரசியல் நடத்துவோர் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே தங்களின் லட்சியமாகக் கொண்டிராமல் மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தி நாட்டில் பொருளாதார சீரமைப்பை விரைந்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.