அறிகுறியே இல்லாத நோயாளிகள் மூலம் அதிகப்படியான தொற்று பரவுகிறது

அறிகுறி இருப்பவர்களை விட, அறிகுறியே இல்லாத நோயாளிகள்தான் அதிகப்படியான தொற்றைப் பரப்புபவர்களாக இருப்பதாகவும், அதனால்தான் கொரோனா இந்த அளவுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் தேசிய பயாலஜிகள் சயின்ஸ் மையம் மற்றும் நிஜாம் மருத்துவ அறிவியல் மையத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மரபணு கைவிரல் ரேகை மற்றும் சோதனை மையம் (சிடிஎஃப்டி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகளில்தான் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் வந்து சளி மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுக்கும் நோயாளிகளின் சளி மாதிரியில் குறைந்த அளவிலேயே கொரோனா தொற்று காணப்படுகிறது. இந்தியாவில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அறிகுறி இல்லாதவர்களாகவே உள்ளனர்.

அதே சமயம், சிடிஎஃப்டி மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளில் பெரும்பாலானோர் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதித்து அதே சமயம் அறிகுறியே இல்லாதவர்கள்தான் நாட்டில் அதிகம் என்றும், அவர்கள்தான் அறிகுறி இருப்பவர்களைக் காட்டிலும் அதிக கொரோனா தொற்றைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சிடிஎஃப்டி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால்தான், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதே சமயம், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இது கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.