கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இவர் பேசுகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் தினசரி இருமுறை கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் எவ்வித தொய்வுமின்றி நடைபெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சியின் சார்பில் நடைபெற்றுவரும் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களில் பயிற்சி பெற்ற ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ அரங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், காவல்துறையினர் வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் அணிந்து வெளியே வருமாறும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்கவும் போன்றவற்றை ஒலிப்பெருக்கிகள் வாயிலாக தெரிவிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் குழுக்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்படும் கடைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முக்கவசம் அணிந்து வெளியே வருமாறு பறக்கும் படையினர் மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், காவல்துறை துணை ஆணையாளர் அனிதா, இ.எஸ்.ஐ மருத்துமனை முதல்வர் டாக்டர் நிர்மலா, கோவை அரசு மருத்துமனை முதல்வர் டாக்டர் காளிதாஸ் மற்றும் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.