5 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜிசரவணன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர், அம்மா அவர்களின் வழியில், கொரோனா நோய்த் தொற்று எனும் பேரிடரிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையில் தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி வருகிறார்கள். தமிழக முதல்வரின் அறிவுரையின்படியும், உத்தரவின்படியும் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால்தான் கோவையில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது. கோவை மாவட்டம் முழுவதிலும், சுகாதாரத்துறையின் மூலம் 5 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் சளி, காய்ச்சல், போன்ற தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்புகள் அனைத்துத் துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 146 செவிலியர்கள், 268 பணியாளர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார்.