தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை கண்காணிக்க சிறப்பு ரோந்து வாகனம்

கோவை மாநகரில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும் போலீஸாருக்கு சிறப்பு வாகனங்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார்.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவலர்கள் கட்டாயமாக முகக்கவசம், கண்ணாடி,  கையுறைகள் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும் மாநகர் முழுவதும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை கண்காணிக்க சிறப்பு குழு மற்றும் ரோந்து செல்ல சிறப்பு வாகனங்களை மாநகர போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தெற்கு மண்டல காவல் எல்லைகளுக்குள் ரோந்து செல்லும் வாகனத்தை காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார். இதில் துணை ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் மாநகரம் முழுவதும் ரோந்து வாகனங்கள் இன்று முதல் செயல்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.